Tuesday, October 9, 2012

தலைக்கோல் விருது வழங்கினார்கள்


சென்ற ஞாயிற்றுகிழமையன்று (07.10.12) டொரொன்ரோவில் ஸ்காபரோ சமூக மைய அரங்கில் எனக்கு தலைக்கோல் விருது வழங்கி கெள்ரவித்தார்கள்.

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் இந்த விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மொன்றியலைச் சேர்ந்த இரா,நடராஜா என்ற அன்பரின் ஏற்பாட்டில் இந்தவிழா இத்தகைய சிறப்புடன் நடந்தேறியது ஆச்சர்யம் தருகிறது. திரு இரா. நடராசா அவர்கட்கும், கலைஞர் சோக்கெல்லோ சண்முகம் அவர்கட்கும் முழுப்பாராட்டும் உரித்துடையது.

"பாரதிரத்தன் பாலச்சந்திரன்" என்ற தலைப்பில் எனது கதையை கூறும் வில்லுப்பாட்டை சோக்கெல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவினர் நிகழ்த்தி கலக்கி விட்டார்கள்.

அத்தோடு கனடாவில் முதன்முறையாக ஒரு கலைஞனுக்கு வழங்குவதாக அறிவித்து, மிகுந்த அலங்காரங்களுடன் "தலைக்கோல் விருது" வழங்கினார்கள். நண்பர் வீ.என்.மதியழகன் தலைக்கோல் பற்றிய அருமையான விளக்கம் அளித்து< விருதை எனக்கு வழ்ங்கினார். தலைக்கோல் பற்றி அறியாதவர்கட்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

இவற்றோடு விட்டுவிடாமல் எனது வரலாற்றை கூறும் 186 பக்கங்களுடைய
"பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை"
என்ற தலைப்பில் வர்ணப்படங்களுடன் நூல் ஒன்றையும் வெளியிட்டார்கள்.

விழாவின் நிறைவில் "ஒரு கலைஞனின் பயணம்" என்ற எனது விவரணச்சித்திரம் அன்பர்கள் வி.திவ்யராஜன் - செல்வன் ஆகியோரின் உருவாக்கத்தில் பார்வையாளர்களை வெகுவாகாக் கவர்ந்த்து.

இவ்விழாவைபற்றி ஈகுருவி இணையத்தளம், கரவைக்குரல் இணையத்தளம் என்பன படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களுக்கு நன்றி.
http://ekuruvi.com/ks%20balachandran
(கரவைக்குரல்) http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post_8.html

Friday, October 5, 2012

சாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்

2

2011ம் ஆண்டில் பிரசுரமான நூல்களில் நானாவிதப்பிரிவில் எனது நேற்றுப்போல இருக்கிறது நூலை சிறந்த நூலாக தெரிவு செய்து இலங்கை சாகித்ய மன்றம் அறிவித்ததோடு சாகித்ய விழா மலரிலும் அத்தகவலை இடம் பெறச் செய்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது

2009ல் எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" அமுதன் அடிகள் இலக்கிய விருதை பெற்றபின்னர் எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது" இலங்கை சாகித்ய விருது பெறத் தேர்வானது ஒரு எழுத்தாளனாக எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.

Tuesday, October 2, 2012

இலங்கையில் சாகித்ய விருதும் திடீர் திருப்பங்களும்

செப்டெம்பார் 26' 2012 ஒரு மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் இலங்கை சாகித்ய மண்டலத்திலிருந்து எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது'க்கு பல்துறை பகுதியில் சாகித்ய விருது கிடைத்திருப்பதாக தொலைபேசி செய்தி வந்தது.
முதல் நூலான கரையைதேடும் கட்டுமரங்கள் இந்தியாவில் அமுதன் அடிகள் விருது பெற்றபின் மீண்டும் இப்படி ஒரு கெள்ரவம் பிறந்த நாட்டில் கிடைக்கும் சந்தோசம் அடுத்தநாள் கலைந்து போனது. . கீழே அறிவிப்பை பாருங்கள்....

.இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 .... கொழும்பு:

< கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2011ம் ஆண்டு சிறுகதை, நாவல், கவிதை, காவியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
br/ 01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதிகள்
i) “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
ii) “நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
(நன்றி - இந்நேரம்.காம்)

Sunday, July 8, 2012

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் - இயல்விருது

அண்மையில் எஸ்.ராமகிருஷ்னன் தமிழ்தோட்டம் அமைப்பின் இயல்விருதை பெறுவதற்காக கனடா வந்தபொழுது, அந்த வைபவத்தில் கலந்துகொண்டேன். என்னை நானே அவருக்கு அறிமுகம் செய்துகொள்ளும் சங்கடத்திற்கு உள்ளாகாமல் நண்பர்கள் மூர்த்தியும். ஜெயகரனும் காப்பாற்றினார்கள். எனது இரண்டு நூல்களையும் அவருக்கு கொடுக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.


னிருதுபெற்றபின் நீண்ட உரையாக அமைந்த அவரது ஏற்ப்புரை சுவையும், ஆழமும் உடையதாக அமைந்து எங்களை கட்டிப்போட்டது.
ஒவ்வொருவரும் தங்கள் மண்ணை, பிறந்தஊரை எப்படி நேசிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக அவர் சொன்ன பைபிள் கதை மனதில் ஆழ்ப்பதிந்து போனது.

"தான் விட்டுப்போகும் தன் ஊரை. தான் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்ற ஊரை, தான் வாழ்ந்த தனது ஊரை திரும்பிபார்த்தால் தான் உப்புத்தூணாக மாற நேரிடும் என்று தெரிந்தும் லோர்த்தின் மனைவி தான் இனிப் பார்க்கமுடியாத தன் ஊரை ஒருகணம் திரும்பிப்பார்த்து உப்புத்தூணாகிப் போகிறாள் என்று அவர் சொல்லியபோது எங்கள் நினைவு எங்கள் மண்ணைத் தொட்டு திரும்பியது. கூடவே பெண்களுக்கும் உப்புக்கும் உள்ள நெருக்கத்தை சுவைபடச்சொன்னார். ஏராளமான மொழிகளை தெரிந்து உலகமெலாம் சுற்றித்திரிந்த ராகுல் சாங்கிருத்யாயன் இறுதியில் எதுவுமே பேசமுடியாதவராய், நினைவுகளை மீட்டுக்கொள்ளமுடியாதவராக மாண்டுபோன சோகத்தைச்சொன்னார். இப்படி பொருத்தமான உபகதைகளுடன் அவரது நீண்ட உரை அமைந்திருந்தது. அவரது எழுத்தாற்ற அவரது பேச்சில் எதிரொலித்த்து. (அவரது உரை காணொளியில் பார்க்கலாம்)

Monday, May 30, 2011

பாரதி கலைக்கோவில் விழாவும் நூல் வெளியீடும்

எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்களுக்கு' தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளில் ஒன்றானா அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தம்ஐக்காக. பாரதி கலைக்கோவில் ஸ்கார்பரொவில் மே மாதம் 29ந்;திகதி பாராட்டு விழா எடுத்து கெளரவித்தது. அதிபர் பொ.கனகசபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல இலக்கிய பிரமுகர்கஆளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
<ப்ர்/>


எனது தாயார் திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்> திருமதி கந்தவனம், திருமதி மாலினி அரவிந்தன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்த்து வைத்தார்கள். .


பாரதி கலைக்கோவில் நிறுவனர் எஸ்.மதிவாசன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.


அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் தலைமை உரை வழங்குகிறார்.


ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தும்போது..

திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி


அமுதன் அடிகள் விருதை எனக்கு கனடாவில் மீளளிப்பு செய்கிறார் தலைவர் பொ.கனகசபாபதி. அருகில் எனது துணைவியார்..


அமுதன் இலக்கீயவிருதுடன் நானும் துணைவியாரும்


எனது புதிய நூலான "நேற்றுப் போல இருக்கிறது" சிறப்புப் பிரதியை எனது அன்னையாரிடம் வழங்குகிறார் உதயன் ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள்.


வந்திருந்த அன்பர்களில் ஒரு பகுதி


எனது நாவல் பற்றி பலர் எழுதிய விமர்சனங்கள், நேர்காணல்கள், அமுதன் இலக்கியவிருது தொடர்பான கட்டுரைகள், வாழ்த்துச்செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் அன்று வெளியிடபட்டது. இந்த விழா மலரை தொகுத்து வழ்ங்கியவர் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்.


என் மதிப்புக்குரிய பேராசிரியர் பாலசுந்தரம், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி ஆகியோருடன் நான்,


கனடாவில் முதல் முறையாக ஒரு இலங்கைக் கலைஞனின் கதையை வில்லுப்பாட்டில் சொன்ன சோக்கல்லோ சண்முகம் வில்லிசைக் குழுவினருடன்..

Friday, April 15, 2011

எனது புதிய நூல் "நேற்றுப் போல இருக்கிறது"

இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன?

எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக "ஒரு பேப்பர்' பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அள்வு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் " நேற்றுப்போல இருக்கிறது" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது.


இது யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டு, "கனகா பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.

ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்..

"விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓடி, முழங்காற் சில்லை பெயர்க்கும் வகையில் கல் றோட்டில் விழுந்து எழும்பியும் சளைக்காமல் -

கடைசி, கடைசியாக ஒரு நாள் -
எப்படியோ சீற்றின் முன் நுனியில்; ஏறிக்குந்திக் கொண்டு கருமமே கண்ணாக சைக்கிள் ஓட, சீற்றின் பின்புறத்தில் பிடித்துக் கொண்டு ;நாரியை வளையாதை.. ஹாண்டிலை நேராய் பிடியடா..; என்று சொல்லிக் கொண்டே கூட ஓடி வந்த நண்பனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் கேட்பது எதையோ உணர்த்த -

திரும்பிப் பார்க்கும் சாத்தியமும், துணிவும் இல்லாமல்,
-

அதை சித்தரிக்கும் ரமணியின் படம் இது..இப்படி 36 படங்கள்..




பாலு மகேந்திராவின் "அழியாதகோலங்கள்' திரைப்படம் மாதிரி, சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" சிறுகதைத்தொகுதி மாதிரி எங்கள் சின்ன வயசு காலத்து அனுபவங்கள் இத்தொடரில் வருகின்றன.

வாசிக்கும் எவரும் அந்தக்கால நினைவுகளில் தோய்ந்து இன்புறுவார்கள் என நம்புகிறேன்.

Tuesday, March 15, 2011

அமுதன் அடிகள் இலக்கிய விருது விழா.- செய்திகள்

அமுதன் அடிகள் விருது பற்றிய செய்திகள் இந்தியாவில் "தினமணி" பத்திரிகையிலும், புதுடில்லியிலிருந்து "வடக்குவாசல்" இணையச்சஞ்சிகையிலும் கனடாவில் "உதயன்" , "தாய்வீடு" பத்திரிகைகளிலும், இலங்கையில் ;தினக்குரல்', வீரகேசரி பத்திரிகைகளிலும், லண்டனிலிருந்து "காற்றுவெளி" இணையசஞ்சிகையிலும், இலங்கையிலிருந்து யாழ்மண்' இணையச்சஞ்சிகயிலும், டென்மார்க்கிலிருந்து 'அலைகள் ஈ-நியூஸ்' இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளன்.

மேற்குறித்த பத்திரிகை நிறுவனங்களுக்கும், யாழ்மண், அலைகள் இணையத்தளங்களுக்கும், "வடக்குவாசல்"பென்னேஸ்வரன், "காற்றுவெளி" முல்லை அமுதன், 'தமிழாரம்' குரு அரவிந்தன், எஸ்.கே.ராஜன் ஆகியோர்க்கும் என் நன்றி.


"வடக்குவாசல்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே -

"யாழ்மண்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே.

"அலைகள்" இணையத்தளத்தில்
விருதுபற்றிய கட்டுரை இதோ -

வீரகேசரி கட்டுரை




தினக்குரல் கட்டுரை -
கே. எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கிய விருது

(துஷி ஞானப்பிரகாசம்)

2009ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய பரிசு ஈழத்தைச் சேர்ந்த கலைஞரும் எழுத்தாளருமான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டுமுதல், வருடாவருடம் வழங்கப்பட்டுவரும் இந்த விருது தமிழி;ன் முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்கள் பட்டியலில் கவிஞர் சல்மா, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், பாமா. இந்திரா பார்த்தசாரதி, ஜோ. டீ. குரூஸ் ஆகிய படைப்பாளிகளும் அடங்குகின்றனர். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.

கே. எஸ். பாலச்சந்திரன், மலர் மணாளன் எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல வார ஏடுகளான வீரகேசரி, தினகரன் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. சிரித்திரன் பத்திரிகைக்கு அவர் எழுதிய 'சிரிகதை'களும் பிரபலமானவை. இலங்கையைவிட்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னும் இவர் தொடர்ந்து எழுதிவருகிறார். நினைவெழுதுதல் பாணியிலமைந்த இவரது எழுத்துக்கள் ஈழத்தமிழர்கள் இழந்துபோன ஒருகாலத்தின் பதிவுகளாக ஒரு பேப்பர், தாய்வீடு போன்ற ஏடுகளில் தொடர்ந்து வெளியாகி வரவேற்புப் பெற்று வருகின்றன.

இவரின் முதலாவது நாவலான 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' 2009இல் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. எழுபதுகளில், இலங்கை போர்ச்சூழலுக்குள் திணிக்கப்படுமுன்னர், இலங்கையின் கரையோர கிராமமொன்றை களமாகக்கொண்டமைந்த இந்த நாவலை அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் 'ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு' என கூறியது மிகையில்லை.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய துறைகளுக்கும் இவரது எழுத்து வளமூட்டியிருக்கிறது. இந்தத் துறைகளுக்கு இவர் செய்த அளிக்கைகள் இவரை சிறந்த கலைஞராகவும் அடையாளம் காட்டியுள்ளன. இலங்கையில் இவர் உருவாக்கிய 'வாத்தியார் வீட்டில்' வானொலி நாடகமும், 'அண்ணை றைற்' என்ற முன்னோடி மேடை நிகழ்வும் பின்னர் ஒலியிழையாக வெளியிடப்பட்டன. கனடாவிலும், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம், மனவெளி கலையாற்றுக் குழு போன்ற நாடக அமைப்புக்கள் ஊடாகவும், பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள10டாகவும் அவர் தொடர்ந்தும் இந்தத் துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பெப்ரவரி 26ஆம் திகதி தஞ்சாவூரின் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கே. எஸ். பாலச்சந்திரனுடன், எழுத்தாளர் சோ. தர்மன் 2008ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் விருதையும், நாடகாசிரியர் முத்துவேலழகன் 2010ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.


தினமணி செய்தி -
"இளைஞர்களுக்கு தமிழ் உணர்வு தேவை'

தஞ்சாவூர், பிப். 27: இன்றைய இளைய சமூகத்துக்கு தமிழ் உணர்வு தேவை என்றார் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.
தஞ்சாவூரில் சனிக்கிழமை அமுதன் அடிகள் வெள்ளி விழா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 2008,2009,2010 ஆண்டுகளுக்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மேலும் அவர் பேசியது:
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாக மனித நேயம் உள்ளது. இலக்கியவாதிகளிடத்தில் மனித நேயம் அதிகமிருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக அவர்களுடைய உழைப்பு இருக்கும். எதையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய அவர்களை, நாம் எவ்விதப் பாகுபாடுமின்றிப் பாராட்ட வேண்டும்.
கிபி 19, 20 ஆம் நூற்றாண்டு தமிழின் மேன்மையான மறுமலர்ச்சிக் காலம். இன்றைய நிலையில் தமிழ் உணர்வு 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. இளைஞர்களிடத்தில் தமிழ் உணர்வும், உணர்ச்சியும் வீறுகொண்டு எழவேண்டும். நல்லத் தமிழை ஆளவிட வேண்டும்.
படிக்க படிக்கத்தான் எழுத முடியும், பேச முடியும். நல்ல நூல்களை படிக்க வேண்டும். காசு கொடுத்து நூல்களை வாங்க வேண்டும். படிக்கும் உணர்வை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனித நேயம், பண்பு வளர வேண்டும். அப்பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள் என்றார் உபயதுல்லா.
விழாவில் அறக்கட்டளைத் தலைவர் அமுதன் அடிகள் பேசியது:
1995-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் வெள்ளி விழாவையொட்டி இவ்விழா நடைபெறுகிறது. வேறுபாடு, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு இல்லாமல் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு தகுதியான தேர்வுக்குப் பின் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை படைப்பாளிகள் தோப்பில் முகமது மீரான், வல்லிக்கண்ணன், முனைவர் இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி, இமயம், மேலாண்மை பொன்னுசாமி, பாமா, பெருமாள் முருகன், எஸ்.வி. ராஜதுரை, கவிஞர் சல்மா, ஜோ டி குரூஸ் ஆகியோருக்கு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய வளர்ச்சி, சமுதாய வளர்ச்சிக்காவே நடத்தப்படுகிறது அறக்கட்டளை. விழா நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது என்றார் அமுதன் அடிகள்.
பரிசு பெற்றவர்கள் விவரம்:
எழுத்தாளர்கள் சோ. தர்மன் (2008), கே.எஸ். பாலச்சந்திரன் (2009) (இவருக்கான பரிசை தூசன்ஹேண்டி பெற்றார்), நாடக இயக்குநர், எழுத்தாளர் முத்துவேலழகன் (2010). பரிசுத்தொகை ரூ. தலா 15,000 ஆகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர் ரா. காமராசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி வெ. ஜீவக்குமார் ஆகியோர் படைப்புகள் குறித்துப் பேசினர்.
அறக்கட்டளை முன்னாள் அறங்காவலர் ஜே.ஜே. பார்னாண்டோ, அறங் காவலர்கள் வெ.க. சந்திரமோகன், ஜோ. ராஜன், உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். திருவருட் பேரவை தஞ்சை மாவட்டச் செயலர் ஜெ. கலந்தர் நன்றி கூறினார்.