Wednesday, September 15, 2010
வாடைக்காற்று திரைப்படத்தை தேடிய கதை
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார்.
இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.
சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா?
செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எடுக்கப்பட்டு இலங்கையின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் திரையிடப்பட்டு, தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய ஊர்களிலும் காண்பிக்கப்பட்டு, ஓய்ந்துவிட்டகாலம்.
1978ல் வெளிவந்த சிறந்த தமிழ்ப்படம் என்ற இலங்கை ஜனாதிபதிவிருது வாடைக்காற்றுக்கு கிடைத்தது. அத்துடன் சிறந்த துணைநடிகர்விருது, இதில் நடித்த எஸ்.ஜேசுரத்தினத்துக்கு கிடைத்தது. அத்தோடு திரைப்படத்தில் முதலீடு செய்த பெனின்சுலா கிளாஸ்வேக்கஸ் மகேந்திரன், சீமாஸ் ரெக்ஸரைல்ஸ் குணரத்தினம் இருவரும், தயாரிப்பளராக செயற்பட்ட சிவதாசனும் 'வாடைக்காற்றை' முற்றாக மறந்துவிட்டார்கள்.
1983ம் ஆண்டில்; தமிழர்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபொழுது, தமிழர்களின் வர்த்தகஸ்தாபனங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஹெந்தளையில் இருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோ' வும் அடங்கும். இங்குதான் ஏராளமான சிங்கள,தமிழ்ப் படங்களின் 'நெகட்டிவ்'கள் வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரூடியோ எரிந்து சாம்பலாகியது.
வாடைக்காற்று நாவலை வாசித்தகாலத்தில் இருந்தே, அதன் மீது மையல்கொண்டு, அதிஷ;டவசமாக அது திரைப்படமாகியபொழுது, எனக்கு மிகவும் பிடித்த 'விருத்தாசலம்' என்ற காட்டுவாசியான இளைஞன் பாத்திரத்தில் நான் நடிக்கக்கிடைத்ததும், விமர்சனங்களில் மிகுந்த பாராட்டுக்களைப்பெற்றதும் ஒரு சந்தோசமான அனுபவம். கூடவே அதன் உதவி இயக்குனர் என்ற ரீதியில் அதன் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தியவன் என்ற வகையிலே என்னால் 'வாடைக்காற்றை' மறக்கமுடியவில்லை.
கலவரங்கள் ஓய்ந்தபின் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு போனேன். தமிழோ, சிங்களமோ திரையிடப்படுவதற்கு திரைப்படப் பிரதிகளை அவர்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும். அவர்கள்தான் பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள். ஓடிமுடித்தபின் பிரதிகள் அவர்களிடம்தான் வந்துசேரும். எனவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டுபிரதிகளில் இரண்டொன்றாவது இருக்காதா என்ற நம்பிக்கையுடன் போனேன். அங்கு எனக்கு கிடைத்த பதில்தான் விசித்திரமானது. ஒருபிரதியும் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். எனக்கு சரியான ஆத்திரம்.
அக்காலத்தில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தலைவராக பணியாற்றிய எல்.பியசேனா எனக்கு அறிமுகமானவர். உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். நேரே அவரிடம் சென்று முறையிட்டேன். 'ஜனாதிபதி விருது' பெற்ற ஒரு சிறந்த தமிழ்ப்படத்தின் ஒரு பிரதியைக்கூட சேமிப்பில் வைக்கமுடியாமல் போனதென்ன' என்று கேட்டேன். அவர் எனக்கு எப்படியாவது ஒரு பிரதியை தேடிக்கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.
திரைப்படக்கூட்டுத்தாபன சிற்றூழியர் ஒருவர் ரகசியமாக ஒரு தகவலைத்தெரிவித்தார். திரைப்படசுருள்களின் ஓரத்திலே இருக்கும் வெள்ளிக்காக தயாரிப்பாளர்கள் கைவிட்ட திரைப்படங்களை நிறைக்கணக்கில் அங்குள்ளவர்கள் விற்றுவிட்டு 'அழிக்கப்பட்டது' என்று கணக்கை முடித்துவிடுவார்களாம். 'முக்கியமாக இலங்கையில்தயாரான தமிழ்ப்படங்களுக்கு இப்படி நடக்கிறது. அவற்றின் தயாரிப்பாளர்களும் அக்கறை எடுப்பதில்லை. அது இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. நீங்கள் விடாதீர்கள்' என்று சொல்லிமுடித்தார்.
நான் விடவில்லை. அடிக்கடிபோனேன். கடைசியில் ஒரு தகவல் கிடைத்தது. 83ல் எரிந்து கொண்டிருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோவில்' இருந்த சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் 'நெகட்டிவ்'களை காப்பாற்றும் முயற்சியில், எரிந்தது பாதி, எரியாதது பாதியாக இருந்த எல்லாவற்றையும், தூக்கி ஏற்றிக்கொண்டு போய், களனியாவில் இருக்கும் அரசாங்க ஸ்ரூடியோவான 'சரசவிய'வில் குவித்து வைத்திருக்கிறார்கள். உம்மால் முடியமென்றால் அங்கேபோய் தேடி, உமது படத்தின் நெகட்டிவ் இருந்தால் திரைப்படக்கூட்டுத்தாபனமே ஒரு பிரதி எடுத்துத்தரும் என்று உறுதியளித்தார்கள்.
;சரசவிய' ஸரூடியோவிற்கு யாரை துணைக்கு கூட்டிக்கொண்டு போவதென்று யோசித்தேன். அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தவர், சிங்களத்திரைப்டங்களில் வில்லன்பாத்திரங்களில் நடிக்கும் றொபின் பெர்னாண்டோ என்ற நண்பர். நாங்கள் இரண்டுபேரும் சமகாலத்தில் தயாரான 'நாடு போற்ற வாழ்க' 'அஞ்சானா' திரைப்படங்களில் நடித்திருக்கிறோம். அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
'சரசவிய'வில் ஒரு பெரிய அறையை திறந்து காட்டினார்கள். குவியலாக திரைப்படச்சுருள்கள், தகரங்களில் அடைக்கப்பட்டும் வெளியேயுமாக கிடந்தன. போதாக்குறைக்கு உருகிபபோய் பழுதான திரைப்படச்சுருள்களின் 'நெடி' தாங்கமுடியாமல் இருந்தது. மூக்கின்மேல் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, நானும், றொபினும், இன்னுமொரு சிற்றூழியருமாக தேடினோம்.
ஒவ்வொன்றாக 'வாடைக்காற்று' திரைப்படத்தின் நெகட்டிவ்கள் தகரஉறையுடன் எங்கள் கைக்கு வந்தன. ஏறக்குறைய 16 நெகட்டிவ் சுருள்கள். சந்தோசம் எங்கள் மனதில் பொங்கிவழிந்தது. தொடர்ந்து தேடியதில், சினிமாஸ் ஸ்ரூடியோவில் மேலதிகமாக செய்வித்த ஒரு பிரதியின் அத்தனை சுருள்களும் அகப்பட்டன.
நண்பர் றொபின் பெர்னான்டோ, பிரதியையும், நெகட்டிவ் சுருள்களையும் கொண்டுவந்து நான் அப்போது தங்கியிருந்த வை.எம்.சி.ஏ விடுதியில் இறக்கிவிட்டுப்போனார். எனது அபிமானத்திரைப்படம் இப்படியாக எனது கைக்கு வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
'வாடைக் காற்று திரைப்படத்தை தேடிய கதை"
ReplyDeleteவாசித்தேன்;. ஒரு திரைப்படத்தின் படச்சுருள்களை மீட்டெடுக்கப் பட்ட அலைச்சலையும் பிரயாசையையும அறியும் பொழுது கலைமேல் இருந்த உங்களின் தாகம் வெளிப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சகலதும் தடைசெய்யப்பட்ட திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் சினிமா முன்னேறக்கூடிய வாய்ப்பு இருந்தது.
அந்த ஏழு வருடகாலகட்டத்தில் தமிழ் சஞ்சிகைகள் நாவல்கள் தமிழ் சினிமாவும் எனப் பலவும், பலதுறையும் முன்னேற்றமடைந்தது. அந்நேரம் வந்த திரைப்படந்தான் வாடைக்காற்று. அரசாங்கம் மாறி இறக்குமதித் தடையைத் தளர்த்தியபோது இந்திய படங்களும் தமிழ் சஞ்சிகைகளும் இறக்குமதி செயய்யப்பட்டன. அதனால் எமது தமிழ் சினிமாவும் மீண்டும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் எமது வளர்ச்சி முற்றாக செயலிழந்தது .அத்துடன் இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்ட எம் படங்களை எமது மக்கள் பார்க்காது உதாசீனம் செய்ததுந்தான் நாம் இன்னும் குறும் படங்களுடனும் முழுநீளப்படத்துறையில் தவழும் நிலையிலும் உள்ளதற்க்கு முதற் காரணமாகும். நமது தயாரிப்பை பார்க்கும் மனப்பாங்கு எமக்கு வேண்டும். இன்றுவரை என்னாலான வரையில் எமது படைப்புகளை நான் பார்த்துவருகிறேன். வுhடைக்காற்றை இன்னொரு முறை பார்க்கலாமென்றால்.... முடிந்தால் அதனைத் திரையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் கலைத்துறைக்கு இன்னும் பல வருடங்கள் சேவையாற்ற வேண்டும.; அனுபவங்களை தொடர்ந்து பிரசுரியுங்கள்
நன்றி – சண்முகம் செல்லையா பழனிசாமி