Monday, June 25, 2007

பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் தயாரான மூன்று குறும்படங்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று ( 24.6.07) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஸ்கார்பரோ செல்லச்சந்நிதி முருகன் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. சமூக சேவையாளரும், எழுத்தாளரும், கலை ஆர்வலருமான கதிர் துரைசிங்கம் விழாவுக்கு தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளவென பிரான்சிலிருந்து வருகை தந்த கலைஞர் ஏ. ரகுநாதன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, அவர் நடித்த "பேரன் பேத்தி" குறுந்திரைப்படத்தின் இயக்குனர் பராவின் பன்முகத்திறமை பற்றியும், "எது மட்டும்" குறுந்திரைப்படத்தின் இயக்குனர் ஜனா வதனனின் கலை ஆர்வத்தையும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து செல்லசந்நிதி ஆலய பூசகர் பொன். புவனேந்திர ஐயர் ஆசியுரை வழங்கினார். பத்திரிகையாளரான "உதயன்" ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது ஆசியுரையில், தாயகத்தில் தான் பார்த்து ரசித்த நம்மவர்களின் நல்ல திரைப்படங்களை குறிப்பிட்டு அந்த முயற்சிகள் தொடர்ந்திருந்தால் எமக்கென ஒரு சினிமாத்துறை உருவாகி வலுப்பெற்றிருக்கும் என்றும், இத்தகைய குறும்படங்களின் வெளியீடு வரவேற்புக்கு உரியதென்றும் குறிப்பிட்டார். அதிபர் பொ. கனகசபாபதி தனது வெளியீட்டுரையில் DVD தொகுப்பில் இடம்பெற்ற மூன்று குறுந்திரைப்படங்களில், "பேரன் பேத்தி" வலியுறுத்திய கருத்தைத்தான், அதாவது எங்கள் குழந்தகளுக்கு தாய் மொழியான தமிழ் மொழி கற்பிக்கவேண்டும் என்று இங்கு தமிழ்த்தினங்கள் நடத்தி, கருத்தரங்குகள் நடத்தி வலியுறித்தி வருகிறோம். அந்தக் கருத்தை இக்குறுந்திரைப்படம் மிக எளிதாக ஆனால் மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறது என்று கூறினார். அத்தோடு இப்படத்தில் குழந்தைகள் முக்கியமாக சிந்தி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாராட்டினார். "எதுமட்டும்" குறுந்திரைப்படம் பெற்றார் - பிள்ளகள் உறவை சித்தரிக்கும் நிதர்சமான வாழ்க்கையை ஒட்டியது என்றும், தாயன்பு கிடைக்காத ஒரு வேற்றின இளைஞன் அந்த ஏக்கத்தினால் புத்தி பேதலித்து விடும் அளவிற்கு போய்விடுவதை காட்டுவதினால் தற்கால நிகழ்வுகளுக்கும் அதற்கும் தொடர்புத்தன்மை இருக்கிறதெனவும் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமை வகித்த கதிர் துரைசிங்கம் தனது தலைமை உரையில், குறுந்திரைப்படங்கள் சிறுகதைகள் போன்று வாழ்க்கையின் வெட்டுமுகத்தை கூறுகிறதென்றும், தென்னிந்திய வர்த்தக சினிமாவோடு போட்டி போட முடியாத நிலையில் எம்மவர்களின் கலை வெளிப்பாடுகளுக்கு தளமாக குறுந்திரைப்படங்கள் அமையும் எனவும், அவை சமூகசீர்குலைவு, வாழ்க்கை பிறழ்வுகள் என்பனவற்றை மட்டும் சித்தரிப்பதோடு நின்றுவிடாது நகைச்சுவையானதாக கூட இருப்பதில் தடையேதும் இல்லை என்றார். முன்னாள் ரூபவாகினி தமிழ்நிகழ்ச்சிப் பொறுப்பாளரும். தற்போது கனடா ரிவிஐ தொலைக்காட்சி நிறுவனத்தில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராக கடமையாற்றுபவருமான பி. விக்னேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தினார். "பேரன் பேத்தி" குறுந்திரைப்படம் நாடகத்தன்மை அம்சம் மிக்கதாக சொல்லவந்த கருத்தை நேர்கோட்டில் சென்று கூறியதாகவும், "எது மட்டும்" குறுந்திரைப்படத்தில் முக்கியபாத்திரமாக ஆரம்பத்தில் தமிழ் இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டு இடையில் கதையில் மற்ற இளைஞன் முக்கியத்துவம் பெறும்போது திரைக்கதையில் பிறழ்வு ஏற்படுகின்றது என்றும் கூறியதோடு, இத்தொகுப்பில் உள்ள மூன்றாவது குறுந்திரைப்படமான கே. எஸ். பாலச்சந்திரனின் "வாழ்வெனும் வட்டம்" எற்கெனவே சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றதினைக் குறிப்பிட்டு, கதை சொல்லும் கலை என்ற வகையிலே திரைக்கதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இக்குறுந்திரைப்படத்திலே ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக தகவல்கள் பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்களின் ஆவலை தூண்டும் வகையிலே கதை நகர்த்தப்பட்டுள்ளது என்றார். இத்துறையில் ஈடுபட விரும்புவர்கள் திரைக்கதை எழுதுவதில் பயிற்சி அவசியம் பெறவேண்டும் என்றும் கூறினார். முடிவில் பாரதி புறொடக்ஷன்ஸ் அதிபரும், "வாழ்வெனும் வட்டம்" தயாரிப்பாளரும், நடிகருமான எஸ். மதிவாசன் நன்றியுரை வழங்கியதோடு விழா இனிதே நிறைவெய்தியது. நூற்றுக்கணக்கான கலைஞர்களும், கலை ஆர்வலர்களும் கலந்துகொண்ட இந்த விழா இத்தகைய விழாக்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது என்று பலர் கருத்து கூறினார்கள்.

No comments:

Post a Comment