Monday, October 1, 2007
வை.ரி.லிங்கம் நிகழ்ச்சி - YT Lingam Show
ஈழத்தமிழர் மத்தியிலே TALK SHOW என்ற வகையிலே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியான Wonderful YT Lingam Show யை தொடர்ந்து 5 ஆண்டுகளாக கனடாவில் TVI தொலைக்காட்சியில் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியின் மூலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மீள் ஒளிபரப்பு செய்யபட்டபோது ரசிகர்களின் வாக்கெடுப்பின் மூலம் சிறந்த நிகழ்ச்சியாக பல மாதங்களக முன்னணியில் நின்றது.
TVI தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், YT Lingam Show முதலாவது நிகழ்ச்சி இடம் பெற்றது. 2003ம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் 7ந் திகதி மாலை 4.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. என்னுடன் கலந்துகொண்ட முதலாவது கலைஞர் எஸ்.ரி. செந்தில்நாதன்.
அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த மகத்தான் வரவேற்பு நிகழ்ச்சியை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தது.மொத்தம் 84 கலைஞர்கள் அதிதிகளாக என்னுடன் 125 நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தார்கள்.
100 வது நிகழ்ச்சி 2006 ஜூலை மாதம் 7ந்திகதி ஒளிபரப்பானது. அதுபற்றிய கட்டுரை கீழே வருகிறது.
வை.ரி.லிங்கம் ஷோ (Y.T.Lingam Show) வின் 100வது நிகழ்ச்சி
(கதிர்)
(கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை)
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி கனடாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் வயது Nவுறுபாடின்றி எல்லோரிடமும் அபிமானம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண்டும். தவறு இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அதை நாசுக்காக சுட்டிக்காட்டவும், யாரையும் புண்படுத்தாமல் சிரிக்கப்பண்ணுவதும் எல்லோருக்கும் கை வராத சங்கதி. இதை பிரபல கலைஞரான கே.எஸ். பாலச்சந்திரன் தனது Wonderful Y.T.Lingam Show மூலம் சாதித்திருக்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடையே முதன்முதலாக தமிழ் Talk Showஎன்ற வகையிலே TVI தொலைக்காட்சி நிறுவனத்தினரால்; கனடாவில் கடந்த மூன்ற ஆண்டுகளாக ஒளிபரப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்தொடரின் 100வது நிகழ்ச்சி சென்ற July 3 ந்திகதி திங்கட்கிழமை TVI கலையகத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
MY TEAM
TTN தொலைக்காட்சி நிலையத்தாரால் ஐரோப்பாவில் பல நாடுகளிலும், சில மத்தியகிழக்கு நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டு வரும் வை.ரி.லிங்கம் ஷோ(Y.T.Lingam Show) நிகழ்ச்சி அந்த நாடுகளில்; உள்ள ரசிகர்களின் பெருத்த அபிமானத்தை பெற்றிருக்கின்றது.
பிரபல கலைஞரான கே.எஸ்.பாலச்சந்திரன் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சித்தொடரின் 100வது நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது இதுவரை இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய கலைஞர்கள் உட்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். TVI நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சேர்ந்த குமரன் அவர்களின் வரவேற்பரையைத் தொடர்ந்து, இத்தொடரின் 100வது நிகழ்ச்சி ஒளிப்பதிவாகியது. கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனுடன் எஸ்.ரி.செந்தில்நாதன், ரஞ்சனி தயா ஆகியோர் இணைந்து கொண்டு பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்கள். தொடர்ந்து 100 வது நிகழ்ச்சியைக் குறிக்கும் விழா ஆரம்பமாகியது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் 100வது நிகழ்ச்சியைக் கொண்டாடுமுகமாக கேக் வெட்டி ஆரம்பித்துவைக்க, முன்னாள் ரூபவாகினி தமிழ்ப் பணிப்பாளர் பி. விக்னேஸ்வரன், பிரான்ஸிலிருந்து வருகை தந்திருக்கும் முதுபெரும் கலைஞர் எஸ்.ஜேசுரத்தினம் அவர்களை அவையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தன் சமகாலக்கலைஞரான கே.எஸ்.பாலச்சந்திரன்.; அவர்களுக்கு TVI நிறவனத்தின் சார்பாக விருது வழங்கியதோடு, தங்கள் கலைவாழ்வின் அந்தநாள் நினைவுகளை மீட்டிக் கொண்டார்..
தொடர்ந்து கலைஞர் கணபதி ரவீந்திரன் வாழ்த்துரை கூறி ஆரம்பித்து வைக்க ஒரு நட்சத்திரப்பட்டாளமே அணிவகுத்து வந்து மேடையேறியது. அத்தனைபேருமே வை.ரி.லிங்கம் ஷோவில் பங்குபற்றியவர்கள். சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் அவர்கள,; தன்னை இனம் காணமுடியாத அளவிற்கு ஒரு பாத்திரப்படைப்பில் அறிமுகம் செய்ததினால், தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு தங்கப்பதக்கம் சூட்டி மகிழ்ந்தார்.
~காதோடு காதாக~ கதிர் துரைசிங்கம் அவர்கள் வாழ்த்துரை கூறி கலைஞர் பாலச்சந்திரனுக்கு பூச்செண்டு வழங்கினார்.
தொடர்ந்து வை.ரி.லிங்கம் ஷோவில் பங்குற்றிய மற்ற கலைஞர்களின் பங்களிப்பு தொடர்ந்தது. கரு.கந்தையா, கலகலப்பு எஸ். கே. தீசன், ஸ்ரீமுருகன், திலீப்குமார், பாஸ்கரன், அன்ரன் பீலிக்ஸ், நேசன், எஸ்.ரி. செந்தில்நாதன், தயாபரன் ஆறுமுகம், கமல்பாரதி, ராகுலன், சுமுதினி, சேகர், நர்த்தனன், ரூபி யோகதாசன், யசோ, தமிழன் வழிகாட்டி செந்திலாதன், குகன், கணேஷ், தயா ரஞ்சி, சிவானந்தன் என்ற நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்து TVI நிறுவனத்துக்கும், தங்களை பங்குபற்றவைத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கும் நன்றி கூறினார்கள். இவர்கள் அனைவரையும் ஒருமிக்கக் காணக்கிடைத்ததே ஒரு சந்தோசமான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களும் தங்கள் பாராட்டினை தெரிவித்தார்கள்.
ஏற்கெனவே ஒளிபரப்பப்பட்ட வை.ரி.லிங்கம் ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து DVD யில் வெளியிட்டால் அது மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டத.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment