ஏற்கெனவே எனது நாவல் பற்றிய விமர்சனங்கள் -
காலச்சுவடு சஞ்சிகையில் - பி.விக்னேஸ்வரன்
தாய்வீடு பத்திரிகயில் - என்.கே.மகாலிங்கம்
இணையத்தில் குரு அரவிந்தன், கலைஞன், வல்வை சாகரா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்பொழுது லண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளி இணையச் சஞ்சிகையிலும் எழுத்தாளர் முல்லை அமுதன் தனது விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி
கரையைத் தேடும் கட்டுமரங்கள்
ஈழத்து நாடகக் கலைஞன் நமக்குத் தந்திருக்கிற நாவலே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்‘ நாவலாகும். மண்ணின் மணம் மாறாது தமிழில் வந்திருக்கிற சிறப்பான நாவலை நமக்குத் தந்திருப்பவர் ‘அண்ணை றைட்‘ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் .
எமது யாழ்ப்பானத் தமிழை தெற்கே நகைச்சுவை நாடகம் என்கிற பேரில் கொச்சைப் படுத்திய காலத்தை மாற்றி பாசச்சுமை, நம்பிக்கை, இரை தேடும் பறவைகள், அசட்டு மாப்பிள்ளை எனப் பல நாடகங்களைத் தந்த வரணியூரான், கே.எம்.வாசகர்,சில்லையூர். செல்வராசன் வரிசையில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரின் நாடகப் பயிற்சி, மக்களுடன் பண்புடன் பழகுவதின் மூலமும் மொழித்தேர்ச்சி நிரம்பப் பெற்றவராய்த் தெரிகிறார்.
305 பக்கங்களில் வடலி வெளியீடாக நம் கைகளில் தவழ்கிற இந் நாவல் பிரபல ஈழத்து பிரபல ஓவியர் ரமணியின் ஓவியம் கவர்கிறது.
வட்டார அல்லது கிராம மக்களின் உணர்வுகளை லாவகமாக கையாண்டு எழுதப்பட்ட நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. அ.பாலமனோகரன், செங்கைஆழியான்,செ.யோகநாதன், முல்லைமணி, காவலூர்.ஜெகநாதன், தாமரைச்செல்வி, செம்பியன் செல்வன், அ.ஸ.அப்துல்சமது, வ.அ.இராசரத்தினம், தெணியான், சொக்கன், கோகிலம்.சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, ஞானரதன், ஞானசேகரன் போன்ற பலர் தம் மொழி சார்ந்து சிந்தித்து அந்தந்த வட்டார, கிராம வழக்குச் சொற்களை பயன்படுத்தி எழுதியவர்களாவர். அந்த வரிசையில் சற்று தூக்கலாக எழுதி நம்மிடம் பாராட்டுப் பெறுகிறார்.
ஒரு படைப்பை தருமுன் அந்த நாவல் பற்றிய சிந்தனை(கரு), அந்த மக்கள் வாழ் நிலை பற்றிய அறிவு /அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அனுபவம் இவருக்கு கிடைத்திருக்கிறது இவர் செய்த பாக்கியமே. ராஜம்.கிருஷ்ணன் ,லக்ஸ்மி போன்றோர் அவர்கள் எழுத நினைக்கும் படைப்பு பற்றிய முழுமையான கருக்கள்/கருத்துக்கள் பூரணப்படுத்தலுடன் கதைச் சூழலுகேற்ப அந்த மக்களுடன் வாழ்ந்து எழுதுவதனால்தான் அவர்களின் படைப்புக்கள் உயிர்ப்புடன் இன்றும் வாழ்கிறது.அந்த வகையில் நமது கதாசிரியரும் தன் வானொலித் தொடர் அல்லது நட்பு கருதி அந்த மான் பாய்ந்தவெளிக் கிராமத்துக் களத்தை நாவல் மூலம் அறிமுகம் செய்கிறர்.
தணியாத தாகம் நாடகத்தின் சோமு பாத்திரம் பற்றி இப்போது நினைக்கையிலும் கண்ணில் நீர் கட்டும்.நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.உரையாடல் தான் நம்மவரை உட்கார வைத்தது.பேச வைத்தது.ஆதலால் மண் மொழியின் வலிமை ஒரு கதையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும்.கரிசல் காடு மக்கள் வாழ்வை நமக்குத் தந்த இந்திய எழுத்தாளர்கள் பற்றியும் தெரியும்.இங்கு ஆசிரியரின் உரையாடல் புத்துணர்ச்சியை தந்துவிடுகிறது.
‘வாடைக்காற்று‘ நாவலுக்குப் பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்த நல்ல புத்தகம். நமக்குப் பரிச்சயமான கிராமம் கண் முன்னே மீண்டும் திரைப்படம் போல நிழலாடுகிறது. மீனவக் கிராமங்களான குருநகர் ,பாசையூர், நாவாந்துறை சார் மக்களின் வாழ் நிலைகளூடு பழக்கப்பட்ட என் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் மீனவ மக்களின் வாழ்நிலை பற்றி அறிந்திருந்தாலும் வாடைக்காற்று நாவல் தந்த அனுபவத்திலிருந்து சற்று மாறுதலான அனுபவ வெளிப்பாடுகளை இந் நாவலில் காணமுடிகிறது.
ஒரு கிராமம் தன் அகச் சூழலுடன் வாழ வேண்டுமெனில் புறச் சூழல் இயல்புடன் இருக்க வேண்டும். இங்கு புறச் சூழல் நன்றாக அமையாது விட்டதனால் ஆசிரியர் நகர்த்திச் செல்கிற கிராமம் (மான் பாய்ஞ்ச வெளி ) இன்று இல்லை என்றே சொல்லலாம்.
மொழி பற்றிய தெளிவு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். அந்த மொழி ஊடாக கொண்டு வரப்படுகின்ற படைப்பு பற்றிய அறிவு வாசகனுக்கு இருக்கும் பட்சத்திலேயே வெற்றி பெற்றதாய் அப் படைப்பு அமையும்.
தகழியின் செம்மீன், தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரத்துக் கிராமத்தின் கதை‘ எர்னஷ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடவுளும் மனிதனும்‘ நாவல்களின் வாசிப்பு அனுபவம் நம் கண் முன்னே பல தகவல்களை தந்திருந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடன் பல ஆண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் ‘ நாவல் வாசிக்கும் போது ஏற்படுகிறது.
எழுதுபவன் முதலில் மொழியை நேசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ஆளுமை எழுத்தில் வெளிப்படுவது நிஜம். அத்தகைய நேசிப்பு நாவலில் தெரிகிறது.
ஒவ்வொரு கிராமத்துள்ளும் மனித மனங்களிடையே இடம் பெறும் போராட்டங்களை மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வழிப்பாதையாக அடைப்புக்குறியுடன் எதிர்பார்க்கப்பட்ட நமது இலக்கியத்தை தமிழ் தெரிந்த வாசகர் பரப்பை உள் வாங்கியபடி நகர்கிற நமது இலக்கியத்தை தாங்கிச் செல்பவர்கள் நமது எழுத்தாளர்களே .அதிகமான எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கித் தந்திருக்கிறது 83 இனக்கலவரம். புதிய உலக சிந்தனைகளை, உலக மொழிகளை பரிச்சயப்படுதுகிற அளவிற்கு நம்மவர்கள் முன்னேறியுள்ள நமது உலகம் விசாலித்து நிற்பது கூட பதிப்பாளர்கள் நம் பக்கம் திரும்பி உள்ளார்கள். இப்போது வழக்குச் சொற்கள் அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தவில்லை. எம் போராட்டம் மீதான அவர்களின் நம்பிக்கை இன்னும் நம்முடன், நம் மொழியுடன் கலக்கின்ற தேவையும் ஏற்பட இரு வழித் தொடர்பு இலக்கியமாக இலகுவாக்கப்படுள்ளது.
மீனவக் கிராமங்களில் தெரிந்தோ ,தெரியாமலோ தொழில் நிமித்தமாகவும், கலையின் நிமித்தமும், கே.எஸ்.பாலச்சந்திரன் மக்களுடன் , மக்களின் வாழ்வு பற்றிய அனுபவம் , அவர்களின் மீதான ஈடுபாடு அவருக்குள் உருவான எழுதுருவம் நல்ல நாவலை நமகுத் தந்திருகிறது..
ஒரு பயிற்சி பெற்ற நாவலாசிரியனது எழுத்து நடை கைவரப் பட்டவராய் ஜமாய்த்திருக்கிறார். மனதில் நிற்கின்ற பாத்திரங்கள் ,தெரிந்த மொழிநடை நம்மை வசிகரிக்கிறது.
வியளம், தொம்மைக்கிழவன், கிடுகு,குசினி, இரணை,உசிர், சூள்லாம்பு வெளிச்சம், தட்டி வான், இஞ்சேர், குஞ்சியப்பு, சொதி, குமர்ப்பெட்டை, கடுக்கண், விசர் பெடல்களை, கேட்டனீ, பானாக்கத்தி, தேத்தண்ணி, மொக்குத்தனம், விறைக்கும், கெக்கட்டம், பொத்தல், நத்தார், கிடக்குது, திட்டி, கைலேஞ்சி,அம்பிடுதல், அலம்பல்வேலி, சம்மாட்டி, கொப்பா, தீத்தி, கவாட்டி, சாரம், இப்படி அனேக சொற்கள் நாம் மறந்து விடாதபடி கையாளப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டும்.மனவலிமை, சிதறாத சிந்தனை உள்ள ஒருவனால்த் தான் தன் நிலை பதறாமல் எழுத முடிந்திருக்கிறது. புலம் பெயர்ந்த பின்னும் வார்த்தைகளை மறக்காமல் தொட்டிருப்பது வாழ்த்த வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்கள் இல்லாததால் இடம் பெயர்ந்த மக்களின் வாழ் நிலையும் மாறுபட்டிருக்கும்.எனவே, இந் நாவல் ஒரு ஆவணமாகவும், ஒரு காலத்து வரலாறாகவும் கொள்ளலாம்.
அந் நாட்களில் யாழ் பஸ் நிலைய ஒலிபரப்புகளில்(பெஸ்டோன்,மணிக்குரல்)அடிக்கடி ஒலிபரப்பாகிய ‘அண்ணை றைட்‘ தனி நடிப்பு நாடகம் பின் நாளில் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.நெல்லை.க.பேரன்,கே.எம்.வாசகர், சில்லையூர்.செல்வராஜன் ,வரணியூரான் போன்றவர்களின் பேச்சு மொழி மீதான அபிமானம் அவர்களின் நாடகங்களில் பிரதிபலித்தது.அதன் எதிரொலியே அவர்களின் நாடகப்பிணைப்பு அல்லது நட்பு பாலச்சந்திரனையும் ஆகர்சிக்க வைத்தது போலும்.நாவல் முழுவதும் பயிற்சி தெரிகிறது.எனக்குத் தெரிந்த வரையில் ‘சிலோன்‘ விஜயேந்திரன்,பாலா இருவருமே சிறப்பாக தங்கள் தனி நடிப்பால் ரசிகர்களின் மனதினைக் கவர்ந்தவர்.
தொண்டமானாறு, வளலாய்,பலாலி,மாதகல் என கிராமங்களின் கடற்கரைப் பிரதேசங்களின் வாழ் நிலை பற்றிய அனுபவம் பரிச்சயமானது தான். எனினும் கிளாலி கடற்பயணம் தந்த பயங்கர அனுபவமே அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பதால் நாம் நம்மை சுதாகரித்து எழுபதில் வாழ்ந்த மக்களின் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டியுள்ளது
களச் சூழல் தற்போது போல இல்லை என்பதற்காக அக்கால சூழலை புறம் தள்ளி விட முடியாது. கிராமியச் சூழலிலான திரைப்படங்களைப் பார்க்கும் வேளையில் கண்ணில் நீர் கட்டும்.அந்தச் சூழல், மக்கள் ,அவர்களின் உறவு முறைகள்,,ஆடு,மாடு, வண்டில்கள், மரங்கள்,கார் என நம்மை அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.கூடவே,அந்த சுகானுபவத்தை அனுபவிக்க முடியாதபடி ஆக்கிய இந்திய அரசு மீதும் கோபம் வந்துவிடுகிறது.இந் நாவலின் களச் சூழல் முன்னைப் போல் இல்லை என்கிற போது எவர் மீதோவெல்லாம் கோபம் வருவது தவிர்க்க முடியாதுள்ளது..
ஆசிரியரின் கற்பனைக்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
‘வர்ணக் கலவைகளின் அழகு இயற்கையெனும் அற்புத சைத்திரீயனின் கை வண்ணமாக கருநீல வண்ணம், பச்சை, மெல்லிய மஞ்சள் நிறங்களில் நீளத்துக்கு நீருக்கு அடியில் படர்ந்து, ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், புதிதாகப் பார்ப்பது போன்ற உணர்வுடன் பிரமிக்க வைக்கும் அந்த அழகை , பல நாளவன் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறான்.முருகைக் கற்களுக்கு மேல் தாவரம் போல் படர்ந்திருக்கும் பவளப் பாறைகள், சூரிய ஒளி பட்டு ‘தக தக‘ என்று மின்னும்….’
‘மீட்டிப் பார்க்கப்பட்டுபின், தந்தி அறுத்து ,தூசிபடிந்ததாய், ஸ்பரிஸம் படாததாய் இருந்த வீணைக்கு புதுத்தந்திகள் பொருத்தி, ஆனந்தராகம் மீட்டினான் அந்தோனி.மோகக்கடலில் முட்டி மோதும் உணர்ச்சிப் பெருக்கில் அறிவிழந்து அந்த இழப்பே பிறிதோர் வெற்றியாக அவனோடு ஒருமித்த நிலையில் ஸ்ரெல்லா அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு காலக்கனிகள் வேகமாக உதிர்ந்து வீழ்ந்தன.’
‘விழுந்திருந்த அந்தத் தென்னங்குற்றியில் அமர்ந்து கொண்ட அந்தோனியை, காற்றினால் மெதுவாக அசைக்கப்படும் தென்னோலையின் கீற்றுக்களைடையே புகுந்து வரும் நிலவொளி அடிக்கடி காட்டிக்கொடுத்தது.வினாடிகளின் கழிவே நீண்ட காலத்துகள்களின் பயணமாக அவன் உணர்ந்து அடிக்கடி தலையை திருப்பி ஆஸ்பத்திரியிலிருந்து வரும் பாதையில் தாபத்துடன் விழி பதித்து இதயம் படபடக்க அமர்ந்திருந்தான்‘.
70-80 களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் போது வீரகேசரி, மாணிக்கம், கலாவல்லி, சிரித்திரன் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலக்கிய பிரசுரங்களை வெளியிடத் தொடங்கின. மக்களின் அவலங்களை அவரவர் மொழியில் சொல்ல முனைந்தன. ஆங்காங்கே சிறு சிறு வெளியீட்டு முயற்சிகளும் வராமல் இல்லை. அப்போதிருந்தே நம் இலக்கியங்கள் நம்மையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். அப்போது இந் நாவல் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், எப்படி ஹிரோஷிமாவின் அவலம் திரும்பத் திரும்ப சொல்லப் பட வேண்டுமோ நமது வாழ்வியல் முறைகளும் அவ்வப்போது எழுதப்பபடல் வேண்டும் தான். அந்த வகையில் இந் நாவல் தேவையான ஒன்றாக அமைகிறது.
இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரப் போக்கால் பல கிராமங்கள் எனி மறக்கபட்டும் விடலாம். அதற்காக இப்படியான ஆவணங்கள் நமக்குத் தேவையாகவும் உள்ளது.
வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு சீராக இருப்பின் இரு தரப்பும் உற்சாகமாய் புரிந்துணர்வு கொள்ள முடியும்.
முதற் காதல் மறுக்கப் பட்டாலே ஒருவன் முனிவனாகிவிடுகிறான்.பட்டுப்போன காதல் உணர்வு இன்னொரு பெண்ணின் நெருங்குதலோடு துளிர்க்கும் என்றிருக்கையில் இரண்டாவது காதலுக்கும் தடங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனது தந்தையின் ‘அந்த ‘ தேவைகளுக்காக வைத்திருந்தவளின்(சின்னவீடு?) மகளை ஏற்றுக் கொள்ள தந்தையும் விரும்பவில்லை. கூடவே, காலம் சென்ற அவளது கணவனின் தம்பியுடன் பார்த்த பின் ஏற்பட்ட சந்தேகமும் அவளிடமிருந்து அவனை தூரமாக்குகிறது. காலச் சுழற்சியில் அவன் பணக்கார சம்மட்டியாரின் மகளை மணக்க நேர்ந்தாலும் மணைவியாக வந்தவளின் திமிர்ப் போக்கு அவனுக்கு வசந்தம் இல்லாத வாழ்வை நினைத்து துடித்துப் போகிறான். காலமும் அவலப் பட்டவர்களை நோக்கியே தன் அஸ்திரத்தை வீசும் என்பது கண்கூடு.
மனிதர்களின் பெயர்களின் கிராமியம் நட்சத்திரம்,தங்கப் பவுண் எனும் பெயர்களில் தெரிகிறது.
அந்தோனி, செல்வராணி, ஸ்டெல்லா, சில்வியா என அவனைச் சுற்றி படர்கின்ற பெண்கள். எனினும், கிளைப் பாத்திரங்களாக நிறையப் பேர் வந்து போகின்றனர். நாவலில் காதலுடன், பாசம், நட்பு, பொறுப்புணர்வு என்பனவும் மனதைத் தொடும் வண்ணம் பாத்திரங்களூடாக காட்டுகிறார்.பிசகாத பாத்திரப் படைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
காதல் அனேகமாக சோக முடிவையே தந்து விடுகிறது.குறிப்பாக கதைகளில் வாசகர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்யவெண்ணியோ என்னவோ எழுதியும் விடுகிறார்கள்.அந்த தொழில் நுட்பம் தெரிகிறது நாவலில்..
‘கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார்!
ஒரு நாள் வருவார்!!
ஒவ்வொரு நாளும் துயரம்.
ஒரு ஞாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை-
ஊரார் நினைப்பது சுலபம்!!’
பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.
செம்மீனில் காட்டப்பட்ட அதே சோகம், இரக்கம், ஏமாற்றம், இழப்பு நாவலில் காட்டப் பட்டாலும் நமது கிராமத்துக் களம் சொல்லி நிற்கின்ற செய்திகள் ஏராளம்.
மனதைத் தொடுகின்ற சில வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமானவை. ‘காதல் என்பது புத்தி உள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப் பயில்வானை நிஜப் பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து இப்படி எல்லாம் ரசவாத வித்தை இயற்றும் வல்லமை வாய்ந்தது தானே!
ரசிக்கும் படியாக உள்ளது.நெல்லை.க.பேரனிடம் கற்றுக் கொண்டாரோ? ‘என்னைக் கொல்லப் போறியே..கொல்லு..கொண்டு போட்டு எவளோ ஒருத்தியை வைச்சிருக்கிறியாமே..அவளோடை போய் இரு..’மனைவி சில்வியாவின் கோபப் பேச்சு.
‘பொத்தடி வாயை‘-இது கணவன்.
‘நான் கத்துவன்..ஊர் அறியக் கத்திச் சொல்லுவன்‘
மரணம் என்பதும் விடுதலை தானே! துன்பங்களிலிருந்து ,அவற்றுக்கு காரணமான உறவுப் பந்தங்களிலிருந்து விடுதலை! சுடலையைத் தாண்டிச் சென்றவுடன் சுடலை ஞானமும் வந்த வழியில் சென்று விடுகிறது…’
சாதாரண கூலிக்காரனாக தொடங்கி, சம்மட்டியாக வரும் வரைக்கும்,என்னோடை எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி வாழ்ந்த என்ரை மதலேனாவே இல்லையம்…இதுகள் போனாலென்ன அந்தோனி…’
இராயப்புவின் பெண்சாதி தன்னை விட இரண்டு மடங்கு கனமான தாலி கழுத்தை அலங்கரிக்காட்டியல், காசுமாலை என்று அலங்கார பூஷிதையாக உலாவியதும், மாப்பிள்ளை பக்கத்தாரை விட தங்கடை ஆட்கள் பெரியாக்கள் எண்ட மாதிரி ‘அவையளை‘ விழுந்து விழுந்து உபசரித்ததும், சம்பந்தி மீது மதலேனாளுக்கு எரிச்சலையே உண்டாக்கியிருந்தது…’
‘கதைசொல்லி‘ பாலச்சந்திரனின் பலமும், பலவீனமும் தென்பட்டாலும் நேர்த்தியான கதையைத் தந்ததிற்கு நன்றிகளும் பாராட்டுதலையும் தந்துதானாக வேண்டும்.இன்னுமொரு வரலாற்று ஆவணத்தை பதிவாக்கி தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.அது முள்ளிவாய்க்காலாகவும் இருக்கலாம்.
பல வருடங்களின் பின்னர் இலங்கை வரைபடத்தில் தேடப் படுகின்ற ‘மான் பாஞ்ச வெளி‘ போல் முள்ளி வாய்க்காலும் விடுபட்டு போயிருக்கலாம்.எதிர் பார்த்தபடி…
இந் நூலை வெளியிட்ட ‘வடலி‘ வெளியீட்டகத்தாருக்கும் எமது நன்றி.
-கவிஞர் முல்லைஅமுதன்-
No comments:
Post a Comment