Monday, November 15, 2010

தாய்வீடு பத்திரிகையில் நாவல் விமர்சனம்



கனடாவிலிருந்து வெளியாகும் 'தாய்வீடு' மாதாந்த சஞ்சிகை/பத்திரிகையில் பிரபல எழுத்தாளரான "பூரணி" ம்காலிங்கம், நாவல் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கும் 'தாய்வீடு' நிர்வாகத்தினருக்கும் என் நன்றி.

என்.கே.மகாலிங்கம்


என் பார்வையில் -கே.எஸ்.பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் -நாவல்

மிகச் சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவல் அந்தோனி என்ற மீனவ இளைஞனின் காதல் கதை. அல்லது அந்தோனி காதல்களில் தோல்வி அடைந்த கதை. முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடன் நின்ற அந்தோனியுடன் ஆரம்பித்த நாவல் முடிவிலும் இன்னொரு காதலில் தோல்வியடைந்த அந்தோனியுடனே முடிகிறது. இடையில், தகப்பன் மரியாம்பிள்ளை சம்மாட்டி, தாய் மதலேனாள், தமையன், தங்கைகள் எலிசபேத், மேரி, மனைவி சில்வியா, முதல் காதலி செல்வராணி, இரண்டாவது காதலி ஸ்ரெல்லா என்பவர்களுடன் மான்பாய்ஞ்ச வெளி என்ற கிராமமும் ஒரு சில உறவுக் குடும்பங்களும், புங்குடுதீவிலுள்ள மீனவப் பகுதியிலுள்ள ஒரு குடும்பமும் ஊடாடுகின்றன.
மான்பாய்ஞ்ச வெளி மீனவர்கள் தங்கள் கடலில் மீன்பிடித் தொழில் குறைந்த பருவ காலத்தில் புங்குடுதீவு தெற்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அங்குள்ள மீனவத் தொழிலாளிகள் சிலரை மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் தொழிலுக்கு உதவிக்கு வைத்தும் கொள்வர்.

அந்தோனி முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடனும் துயரத்துடனும் இருக்கையில் குடும்பம் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் செல்லுகின்றது. அவனும் செல்கிறான். போன இடத்தில் இவனுக்கு இரண்டாம் காதல் ஸ்ரெல்லா என்பவளுடன் ஆரம்பமாகின்றது. இவள் கணவனை இழந்த இளம் விதவை. அரசினர் ஆஸ்பத்திரியில் தாதி. அவளுடைய தாய் லூர்த்தம்மா. அவளை அந்தோனியின் தகப்பன் மரியாம்பிள்ளை இளம் கணவனாக இருந்த காலத்தில் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் சென்ற இடத்தில் ‘வைத்திருந்தவன்’. அப்பொழுது ஸ்ரெல்லா சிறு குழந்தை. லூர்த்தம்மாவின் கணவன் அப்பொழுது அவர்களைக் கைவிட்டு வேதாரிணியத்தில் குடும்பமாக போய் விட்டான். லூர்த்தம்மாவுக்கும் மரியாம்பிள்ளைக்கும் இருந்த உறவு பலருக்குத் தெரியாது.

மரியாம்பிள்ளை, அந்தோனி ஸ்டெல்லா காதலை விரும்பவில்லை. அதனாலும்; அந்தோனி, ஸ்டெல்லாவை இன்னொரு ஆடவனுடன் பார்த்து சந்தேகப்பட்டதாலும் இந்தக் காதலும் நிறைவேறவில்லை. அவனுக்கு மான்பாய்ஞ்சவெளியின் அருகிலுள்ள கிராமத்திலுள்ள பணக்காரச் சம்மாட்டியின் மகள் சில்வியாவுக்கும் திருமணம் நடக்கிறது. சுpல்வியா பணக்காரி. படித்தவள் என்ற திமிர் பிடித்தவள். திருமணம் முடித்த நாளிலிருந்தே அவள் அந்தோனியையும் அவன் குடும்பத்தையும் விரும்பவில்லை. ஏறுமாறாக நடத்துகிறாள். அதனால் திருமண வாழ்க்கையிலும் அவனுக்குக் காதல் சுகம் கிடைக்கவில்லை. அந்தவேளையில் ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அவன் தொழிலுக்குச் சென்ற படகு புயலில் அகப்பட்டுக் காணாமல் போகிறது. படகில் சென்ற அந்தோனியும் மற்ற மூவரும் காணாமல் போய் விடுகிறார்கள். அத்துடன் அவனுடைய குடும்பத்தில் தாய் சாகிறாள். எலிசபெத்தின் திருமணம் தடைப்படுகிறது. தகப்பன்; தடுமாறுகிறான். தொழில் பாதிப்படைகிறது. படகுகள் விற்கப்படுகின்றன. சில்வியாவும் ஒரு மைனருடன் ஓடிப் போய் விடுகிறாள். தெய்வாதீனமாக அந்தோனியும் மற்றவர்களும் சென்ற படகு தாய்லந்து தேசத்தில் கரையொதுங்குகிறது. அதிலிருந்த இருவர் இறந்து விட அந்தோனியும் மற்ற இருவரும் இலங்கை திரும்புகின்றனர். அந்த இடைவெளிக்குள் தாயில்லை. மனைவி வேறொருவனுடன் ஓடி விட்டாள். ஆகவே, அவனுடைய அண்ணியின் தூண்டுதலில் திரும்பவும் புங்குடுதீவுக்கு ஸ்டெல்லாவிடம் காதலைத் தேடி ஓடுகிறான். அங்கும் அவளுக்கு கணவனின் தம்பியை திருமணம் செய்யப்பட்டு விட்டதை ஸ்டெல்லா தெரிவிக்கிறாள். திரும்பவும் அந்தோனி காதல் தோல்வியில் சோகத்துடன் நிற்கிறான். அத்துடன் நாவல் முடிகின்றது.

இந்த நாவலில் சில சிறப்புக்கள் உள்ளன. முதலாவது, நாவலை வாசகன் தங்குதடையின்றி ஒரே இருப்பில் வாசிக்கக் கூடியதாக நேர்கோட்டில் கதை செல்கிறது. ஆசிரியர் நல்ல கதைசொல்லி. இரண்டாவது, யாழ்ப்பாணத்து மொழிநடை. அதனால் நாவல் எந்தவகையிலும் எமக்குச் சிரமம் தரவில்லை. மண்வாசைனயை ஒட்டிய உரையாடல்களும் சொற்களும், சொல்லாடல்களும், பின்னணியும், காட்சிகளும் கதையை ஓட்டிச் செல்வதனால் கதைக்கு ஒரு உண்மைத்தன்மை உள்ளது. அதனால் இப்படியும் நடக்குமா என்ற ஆதங்கமோ வியப்போ படத் தேவை வரவில்லை. புயலில் அகப்பட்ட படகொன்றில் சென்ற மீனவர்கள் தாய்லாந்தில் அடைந்து திரும்பிய கதை ஒன்றும் யாழ்ப்பாணத்தவருக்குத் தெரிந்ததே. எனவே, அதுவும் சாகசக் கதையின் அம்சமல்ல. மூன்றாவதாக, சோக உணர்ச்சிகள், இரக்கம், குடும்ப உறவு, அன்பு, பாசம், பொறுப்புணர்வு ஆகிய அறங்கள் எல்லாம் மீறப்படாமலே அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அவை வாசகர்களை உருக வைத்து நாவலை விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. நாலாவது, மீனவர்களின் வாழ்வியல், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், தொழில் நடவடிக்கைககள், தொழில் நுட்பங்கள், போன்றவை அனைத்துமே நுட்பமாக அவதானிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ஐந்தாவது, யாழ்ப்பாணக் கிராமங்களினதும், குறிப்பாகப் புங்குடுதீவுக் கிராமத்தினதும் புவியியல் அமைப்பும் இடங்களும் நுட்பமாக அவதானிக்கப்பட்டுள்ளன. வாடைக்காற்று, கச்சான் காற்று, சோளகக் காற்று முதலியவைகள் அவற்றின் திசைகள், போக்குகள், காலங்கள், படும் மீன்கள், வலைகள், படகுகள் எல்லாம் முறையாகக் கவனிக்கப்பட்டு பொருத்தமாக எழுதப்பட்டுள்ளன. இவ்வகைகளில் வாசக ருசிகள் கவனிக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த நாவல் வெற்றியே.

அவற்றை விட, தமிழிலக்கியத்தில் இந்த நாவலின் இடம் எது அல்லது ஈழத்திலக்கிய வரலாற்றில் இந்த நாவலின் இடம் எது என்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிக் கணிப்பீடு செய்ய நவீன நாவலுக்குரிய சில அம்சங்களை இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

எந்த இலக்கியப் படைப்புமே இலக்கிய வரலாற்றில் எக்கால கட்டத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாவலின் காலமும் களமும் யாழ்ப்பாணத்தில் 1980 களுக்கு முன்னர் நடந்தவை என்று அனுமானிக்கலாம். ஏனென்றால், அதன் பிறகு ஒரு யுகப்புரட்சியே நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த நாவல் யாழ்ப்பாணக் கிராமங்கள் இயல்வு நிலையில் இருந்த காலத்தில் நடைபெற்றுள்ளன. இப்பொழுதோ 1980 களுக்குப் பிறகோ இருந்த அரசியல் சூழலோ, சமூகச் சூழலோ அங்கிருக்கவில்லை. 30 வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த காலமும் களமுமே இந்தக் கதைக்கானவை. அதுதான் வன்முறை அரசியல், இயக்கக் கெடுபிடிகள்;, யுத்தங்கள், இடப்பெயர்வுகள் முதலியன நடைபெறாத காலம்.

எந்த நாவலும் ஒரு அரசியல் சூனியப் பிரதேசத்தில் நடைபெறாது. அது சாடைமாடையாகக் கூட இந்த நாவலில் கோடிகாட்டப்படவில்லை. ஆனால் இந்த நாவல் பிரசுரமாகியதை வைத்து -இது 2009 இல் தான் வெளிவந்தது- இந்த நாவலின் இலக்கிய வரலாற்றுக் காலப் புள்ளியை குறிப்பிட முடியாது. ஆகவே, இந்த நாவலை நாம் ஒரு முப்பது வருடங்கள் முன் தள்ளி வைத்தால் அக்காலத்தில் இலங்கையில் வெளிவந்த நாவல்களுடன் இதை ஒப்பீடு செய்யலாம். அதுவே இந்நாவலின் இருப்பையும் தரத்தையும் நியாயப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய அளவீடுகள். இன்றைய நவீன, அல்லது பின் நவீன நாவல்களுடன் ஒப்பிடுவது முறையல்ல. இந்நாவல் எழுதப்பட்ட அக்காலத்தில் தான் முற்போக்கு நாவல்களும், செங்கையாழியானின் வாடைக்காற்று, பாலமனோகரனின் நிலக்கிளி போன்ற நாவல்களும் வெளி வந்திருந்தன.

அத்துடன் 70-80 காலத்தில் மீனவர் வாழ்க்கையை வைத்து சில நாடகங்களும் சினிமாவும் வெளிவந்துள்ளன. மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம். அதே காலத்தில் ஐரி~; நாடகாசிரியரான ஜே.எம். சிஞ்( John Millington Sunge) எழுதிய கடலோடிகள் (Riders to tha Sea)என்ற கடல் சார்ந்த நாடகம் ஒன்றை ஆங்கில விரிவுரையாளர் கந்தையா மேடையேற்றினார். தகழியின் செம்மீன் நாவல் சினிமாவாக்கப்பட்டு மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது. அந்நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தும் இருந்தார். அதைப் பரவலாகப் பலரும் வாசித்தும் இருந்தனர்.

செம்மீன் சினிமாவில் (நாவலிலும்) கறுத்தம்மா கணவன் பழனி கடலுக்குப் போயிருந்தபோது பழைய காதலன் பரிக்குட்டி சோகமாகப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு, காதலைத் துறக்க முடியாமல் அவனுடன் மீண்டும் தொடர்பு வைப்பாள். அதேபோல இந்த நாவலிலும் அந்தோனி கடலுக்குப் போயிருந்தபோது சில்வியா தன் காதலனுடன் போய் வருவாள். செம்மீனிலும் கடலன்னை அதைப் பொறுக்காமல் கணவனை தனக்குள் இழுத்துக் கொள்வாள். இங்கும் அந்தோனி சென்ற படகு புயலில் மாட்டிக் கொண்டு அவனும் காணாமல் போய் விடுவான். அந்த ஐதீகம் தெரிந்தோ தெரியாமலே இந்த நாவலாசிரியரையும் பாதித்திருக்கிறது.

இந்த நாவல் நேரடியான கதை சொல்லல் முறையில், யதார்த்தப் பண்பில் சொல்லப்பட்டுள்ளது. சிலவேளை யதார்த்த வாதப் பண்புக்கும் இயற்பண்பு வாதத்திற்கும் இடையே இந்நாவல் ஊடாடுகிறது. அதாவது, யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பது, மற்றது இயற்கையை அப்படியே படம்பிடிப்பது. நவீன நாவல்கள் வளர்ச்சியடைந்து பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டு, நவீன, பின் நவீனப் புனைவுகளாக வளர்ந்தும் விட்டன. பல அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை வாசகர்களே அவிழ்க்க விட்டு ஆசிரியர் மறைந்தும் நிற்கிறார். வாசக வெளிக்கும் மௌனத்துக்கும் கற்பனைக்கும் இடம் விட்டு விடுகிறார்;. இந்த நாவலின் ஆசிரியர் வாசகனுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமலே அவரே அனைத்தையும் சொல்லி விடுகிறார். உதாரணமாக, சில்வியா ஏன் மைனரை நாடிப் போனாள் என்பதற்கு அந்தோனி தன் பழைய காதலியை நினைத்துக் கொண்டிருப்பதால் தன்னைத் தொடுவதே இல்லை, அதனால் தான் வேறோருவனிடன் போக வேண்டி வந்தது என்கிறாள். இதை வாசகனே உய்த்துணர வைத்திருக்க வேண்டியது நாவலாசிரியனின் வேலை. விளக்கம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் மூலமாகக் கூட.

நாவலாசிரியர் ஒரு மேடை நாடக நடிகர். வானொலி நாடக நடிகர். அருமையான குணசித்திர நடிகர். அவை 50-60 தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கூடிய பண்பு. ஒரு மெலோடிராமாவுக்குரிய –மிகையுணர்ச்சிக்குரிய-பல அம்சங்கள் இதிலுள்ளன. குறிப்பாக, அந்தோனியின் பாத்திரம். இந்த நாவல் தமிழ் சினிமாக் கதையின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டதாக உள்ளது. முக்கியமாக, சில்வியா என்ற பாத்திரம் சினிமாவில் வரும் அச்சொட்டான வில்லியாகவே உள்ளாள். மற்றப் பாத்திரங்கள் பலவும் அப்படியே உள்ளன. அந்தோனி, அவனுடைய தமையன், தங்கை எலிசபெத். கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் அடங்கிய தமிழ் சினிமா உலகம்.

நாவலில் இரண்டு பகுதி மீனவர்களும் கத்தோலிக்க சமயத்தவர்கள். அது ஓர் ஒற்றுமை. அதனால் அவர்களிடையே வேறு வேற்றுமைகள் இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புங்குடுதீவு மீனவர்கள் வேர்க்குத்திப் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இரு சமூகங்களிடையேயும் பெண்கள் ‘கொள்வனவு கொடுப்பனவு’ இருக்குமோ என்று எனக்குத் தெரியாது. அதுவும் திருமண பந்தம் செய்யும் அளவுக்கு. வேர்க்குத்திப் பறையர் மீன் தொழில் செய்வதை மறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் போர்த்துக்கீசர் காலத்திலேயே கத்தோலிக்கராகி விட்ட ஊர் மக்கள். நாவலாசிரியர் கூறுவதுபோல அவர்கள் அங்கு தங்கி விட்ட மீனவர்கள் அல்ல. டச்சுக்காரர் காலத்தில் அவர்களில் பெரும்பான்மையினர் புடவைக்குச் சாயம் போட்டனர். அதனால் அவர்கள் வேர்க்குத்திப் -வேல்குத்திப்-பறையர் என்று அழைக்கப்பட்டனர். பின்னாளில் அத்தொழில் மறையவே அவர்கள் பல தொழில்களையும் செய்தனர். வலை போட்டு மீனும் பிடித்தனர். கட்டிட வேலை செய்தனர். ஓலை வெட்டினர். தோட்டத்தில் உதவியாளராக இருந்தனர். திருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தனர். இளம் பரம்பரையினர் படித்து அரச உத்தியோகம் பார்த்தனர். ஆனால் தோணி வைத்து மீன் பிடித்த இன்னொரு சமூகம் புங்குடுதீவில் இருந்தது. அவர்கள் திமிலர். அவர்கள் சைவ சமயத்தவர்கள். இவற்றைக் குறிப்பிட வேண்டி வந்ததற்குக் காரணம், சமூகக் கட்டமைப்பில் இன்னும் யாழ்ப்பாணம் சாதி அடுக்குச் சமூகமே. ஊர் விட்டு ஊர் போனாலும் -அதாவது மான்பாய்ஞ்சவெளியிலிருந்து புங்குடுதீவுக்குப் போனாலும் சரி, நெல்லியடிக்குப் போனாலும் சரி, தேசம் விட்டு தேசம் சென்றாலும் சரி, சாதியம் தீய ஆவியைப் போலத் தொடர்ந்து கொண்டு தான் போயிருக்கிறது, போய்க் கொண்டிருக்கிறது.

தூய சவேரியார் வந்து மதம் மாற்றினால் போல அது மறைந்து விடவில்லை. அதுவும் 80 களுக்கு முதல்.

இறுதியாக, ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்பது அருமையான உருவகம்.

1 comment:

  1. .எங்கிருந்தாலும் வாழ்க! உங்கள் இதயமும் அமைதியில் வாழ்க!

    ReplyDelete