Wednesday, December 16, 2009

எனது நாவல் பற்றிய இரண்டு விமர்சனங்கள்

காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக (கே.எஸ். பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் )

வல்வை சாகரா (யாழ்களத்தில் எழுதியது)

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.
சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.
இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி.. நூல் விமர்சனம்

கலைஞன் யாழ்களத்தில் எழுதியது

அனைவரையும் மீண்டும் ஓர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி,

அதிகம் யோசிக்கவேண்டாம்.. மேலுள்ள 'புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..' என்கின்ற தலைப்பு 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனப்படும் பெயரில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நாவலில் வருகின்ற என்னைக்கவர்ந்த ஓர் வசனத்தின் ஒரு பகுதி.

நான் கடந்தமாதம் வடலி வலைத்தளம் ஊடாக வாங்கிய மேற்குறிப்பிட்ட நாவல் நீண்டபயணம் செய்து அண்மையில் வீடுவந்து சேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாவலை முழுமையாக படித்து முடித்தேன். முதலில், இந்த நாவலின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், நாவலை வெளியிட்ட வடலி பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.

இனி, கரையைத்தேடும் கட்டுமரங்கள் பற்றிய எனது எண்ணப்பகிர்வுகள் இங்கே விரிகின்றன:



எனக்குள் ஏற்பட்ட அனுபவங்கள்:

நாவலை வாசித்துக்கொண்டு இருந்தபோது.. இடையிடையே நூலின் பின்மட்டையில் இருக்கின்ற பாலச்சந்திரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டேன். இதுவரை காலமும் அறிந்திராத ஓர் பாலச்சந்திரனை நான் அப்போது உணர்ந்துகொண்டேன், தரிசித்துக்கொண்டேன். இது சும்மா ஓர் கதை என்பதைவிட... வாழ்க்கை என்பதாகி.. எத்தனையோ பல சிந்தனைகளை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் எனக்குள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது. நாவலை வாசித்துக்கொண்டு சென்றபோது சில இடங்களில் உண்மையில் எனக்கு அழுகை வந்தது, ஆத்திரமும் வந்தது.

நாவலின் விசேடதன்மை:

கதாசிரியர் இரு இடங்களில் சிறுதவறு செய்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏன் என்றால் கமல், சிறீதேவி, எம்.ஜி.ஆர் பற்றிய விடயங்களை புகுத்தி.. ஏறக்குறைய இத்தனையாம் ஆண்டில் நடைபெற்ற கதை என்கின்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். அவை தவிர்க்கப்பட்டு இருந்தால்.. மறுபுறத்தில் இந்தக்கதை ஏறக்குறைய 1960 அல்லது அதற்கும் முற்பட்ட காலம் தொடக்கம் 1985வரை என்கின்ற நீண்டகாலப் பகுதியினுள் நடைபெற்று இருக்கக்கூடிய கதை என்று வாசிப்பவர்களால் உணரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லத்தோன்றுகின்றது. இங்கு நாவலில் நான் கண்டவிடேச தன்மையாக கூறக்கூடியது என்ன என்றால்.. இதுவரை எங்களுக்கு தெரிந்திராத ஓர் தாயகத்தை, தாயகத்து வாழ்க்கையை கதாசிரியர் கண்முன்கொண்டுவந்து காட்டி இருக்கின்றார்.

கதைக்கரு, சொல்லவருகின்ற செய்தி:

ஆடம்பரமான குளிர்பானங்களின் மோகத்தில் அலையக்கூடியவர்களுக்கு கதாசிரியர் தண்ணீர்மீது தாகம் உருவாகும்படி செய்து அதன் மகிமையை உணர்த்தி இருக்கின்றார். அதாவது, வாழ்க்கைக்கு தேவையானது எது? அன்பு? பண்பு? அழகு? இளமை? பணம்? படிப்பு? பதவி? நம்பிக்கை? .. வாழ்க்கை எதன் அடிப்படையில் வாழப்படுகின்றது? வாழ்தல் என்பது என்ன?... எல்லாவற்றுக்குமான விடைகளாக.. கதையின் கரு பின்னப்பட்டு இருக்கின்றது. இந்த நாவலை வெறும் நாவலாக பார்க்காது ஓர் ஆவணப்பதிவு என்றும் கூறலாமோ என்று நினைக்கின்றேன். ஏனெனில், இறந்தகால நிகழ்வுகளின் கால்தடங்களை கதாசிரியர் கடுகளவும் பிசையாது அப்படியே கதையில் அச்சேற்றி இருப்பது தெரிகின்றது.



கதை சொல்லப்படும் பாங்கு:

கதையின் சுமார் 85% யதார்த்தமாக இருந்தது என்று சொல்லலாம். ஏதோ காரணத்துக்காகவோ அல்லது வழமையான தமிழ்சினிமாவின் தாக்கம் காரணமாகவோ என்னமோ சுமார் 15% பகுதி செயற்கைத்தனமாக இருந்தது என்றும் சொல்லித்தான் ஆகவேண்டும். சிலவேளைகளில் நாவல் என்றுவரும்போது.... தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போல சில அம்சங்களை தவிர்க்கமுடியாத தன்மை, மற்றும், நாவலுக்கு உரித்தான குணங்களை, தனித்துவங்களை காட்டியாகவேண்டிய அழுத்தம் நாவலாசிரியர்களுக்கு ஏற்படுகின்றதோ என்னமோ..! ஆரம்பம் முதல் இறுதிவரை.. கதை சோர்வில்லாமல் சென்றது என்பதோடு மட்டும் அல்லாது கதை நிறைவடைந்தபின்னரும் பல விவாதங்களை, ஆராய்ச்சிகளை 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனது மனதினுள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது.

மொழித்திறன்:

இத்தனை விதம், விதமான சொற்களை இவர் எப்படி லாவகமாகவும், சாதூரியமாகவும் நாவலில் பிரயோகித்து இருக்கின்றார் என்று என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. நீண்டதோர் தாயகத்து சொற்களஞ்சியம் ஒன்றை நாவலில் காணமுடிகின்றது. எத்தனையோ வருடங்களின்பின் தாயகத்தில் நான் முன்பு இருந்தபோது பயன்படுத்திய ஏராளம் சொற்களை நாவலை படித்தபோது என்னால் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த நாவல் ஓர் ஆவணப்பதிவாக கொள்ளப்படமுடியுமோ என்று நான் எண்ணுவதற்கு இங்குள்ள சொற்பதங்கள், சொற்கள் அல்லது கலைச்சொற்களும் பிரதான காரணம் எனக்கூறலாம்.

பேச்சுவழக்கு:

நாவல் உயிர்ப்பாக இருப்பதற்கு, இதை நான் வெறும் நாவல் என்று செயற்கைத்தனமாக பிரித்துப்பார்த்து உணரமுடியாதபடி இருப்பதற்கு கதையில் வரும் பாத்திரங்களின் பேச்சுவழக்கு முக்கிய பங்கை வகித்து இருக்கின்றது. பல பாத்திரங்கள் பேசும்போது ஒன்றைக்கூறி... இறுதியில்... 'அ' என்று முடிப்பார்கள். கதையில் இதை ஒவ்வொரு தடவையும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.



நாவலின் பெறுமதி:

நான் வடலி வலைத்தளம் ஊடாக 17.90 அமெரிக்க டாலர்களுக்கு புத்தகத்தை பெற்று இருந்தேன். ஆனால்.. புத்தகத்தின் பெறுமதி அதைவிடப் பல்லாயிரம் மடங்குகள் பெரியது என்பதை இப்போது உணர்ந்துகொள்கின்றேன். எங்கள் மனித வாழ்வியலை திரும்பிப்பார்த்து சிந்திக்கவைக்கின்ற, தாயகத்திற்கு விடுமுறையில் சென்று வருகின்ற அனுபவத்தை தருகின்ற 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்' நாவலை நாவலாக பார்க்கமுடியவில்லை, வாழ்வாகவே உணர்கின்றேன்.

நூல் அமைப்பு:

நூல் வடிவமைப்பு, அச்சு, எழுத்துக்களின் ஒழுங்கமைப்பு என அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருக்கின்றன. நாற்பத்து மூன்று அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் நேர்த்தியாக வகுக்கப்பட்டு உள்ளதோடு, கடல் அலைகளாக ஒன்றுடன் ஒன்று சீராக தொடர்புபட்டு செல்கின்றன. ISBN: 9788190840507

நாவலில் இருந்து:

உங்கள் பார்வைக்காக நாவலில் என்னைக் கவர்ந்த பலவற்றில் எழுந்தமானமாக பொறுக்கப்பட்ட சில நறுக்கல்கள்:

***

மாரியாம்பிள்ளை அட்டகாசமாக சிரித்தவாறே,

'நீங்கள் எல்லாரும்தான் ஏதேதோ கதைச்சீங்களே.. என்ரை நெத்தலி அப்பாவை விட்டிட்டு இருக்குமே..'

என்ற சின்னமகளை அருகில் இருத்தி, தானும் சாப்பிட்டு, மகளுக்கும் 'தீத்தி', இடையிடையே தன் மூத்தமகளின் சமையல் திறனையும் பாராட்டி, மூத்தவன் மனுவலைத் திட்டித்தீர்த்து, சாப்பிடுதலே ஒரு நீண்ட கிரியையாக, ஒருவாறு ஒப்பேறியது.

***

'அப்படியானால் ஏன் நீ என்னுடன் நெருங்கிப் பழகினனீ... நம்பிக்கையைத் தந்தனீ...?' என்று அவன் வெடித்து சிதறி வினாத்தொடுக்கவில்லை.

அப்படிக் கேட்டிருந்தாலும்... ' அண்ணை போலை நினைச்சு உங்களோட பழகினனான்.. நீங்கள் இப்படி நினைப்பீங்களெண்டு...'

இந்த ரீதியில் பதில் வருமென்று அவனுக்கு, அதிகம் படிக்காவிட்டாலும் தெரிந்தே இருந்தது.

***

காதல் என்பது புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து, இப்படியெல்லாம் 'ரசவாதவித்தை' இயற்றும் வல்லமை வாய்ந்ததுதானே!

***

பாலினால், வயதினால், சாதியினால், குலத்தினால், கோத்திரத்தினால், மதத்தினால், சுயநலத்தினால், அன்பினால், நட்பினால்.. உறவுகளினால் என இவ்வாறு பல்வேறு வகைகளில் தனியாகவும், சோடிகளாகவும், குழுக்களாகவும் நாங்கள் கட்டப்பட்டு கட்டுமரங்களாக இருக்கின்றோம். கரையைச் சென்றடைகின்ற கனவுகளோடு.. நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

This post has been edited by கலைஞன்: 08 September 2009 - 09:30 AM

No comments:

Post a Comment