Wednesday, December 23, 2009

செழியன் என்ற கவிஞன்


இசையரங்கம் நிகழ்ச்சியில் ஓ.எஸ்.அருண் பாடிய செழியனின் பாடல் என் இதயத்தில் ஆணி அடித்து பதிந்துவிட்டது. அந்த வரிகள்..

வானில் முகிலோடும் மாம்பூவில் குளிர் வீசும்,
நெஞ்சில் நிழலாடும் விழிநீரில் முகம் தோன்றும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும் யார் மீது யார் கோபம்

மூங்கில் இலைமீது பனிக்காற்று வந்தாடும்
முகில்கள் மனம்மாறி மழைநீராய் தானாகும்
காலம் இலைமீது அழகாக நிறம் பூசும்
காலம் இலைமீது அழகாக நிறம் பூசும்
வேம்பின் கிளைமேல் கூவும் குயிலோ நின்று துயர்பாடும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும்
யார்மீது யார் கோபம்.

சொல்லா சமயத்தில் விழி நான்கும் இடம் சேரும்
நினைவு உயிரான கதை கண்ணீர் துளியாகும்
புல்லின் விழிநீரும் காற்றோடு கரைந்தோடும்
தெரியா மனிதர் போலெம் கால்கள் நீண்டு வழிபோகும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும் யார்மீது யார் கோபம்

காரணமில்லாத கோபம்..அது கோபமேயில்லை. ஆனால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திக்கும் அந்த சூழ்நிலை.. சொல்லா சமயத்தில் விழி நான்கும் இடம் சேரும்.அவர்கள் மனநிலை..நெஞ்சை உருக்கி அருவியாகப் பாய்கிறது.

செழியனுக்கு ஈழத்தின் கவிதைப்பரப்பில் தனியிடம் உண்டு.

இன்னுமொரு செழியனின் படைப்பு தளவாய் சுந்தரத்துக்கு பிடித்திருக்கிர்றது.

செழியன் பற்றிய குறிப்பு -
'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ, கனடாவிலும், 'வேருக்குள் பெய்யும் மழை' இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறு சிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் 'வானத்தைப் பிளந்த கதை' என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment