பதிவர்களும் தங்கள் படைப்புகளை அச்சில் காணும் கனவுகளோடுதான் உலவுகிறார்கள் என்று நான் முன்னர் குறிப்பிட்டதற்கு இணங்க சென்னைபுத்தககண்காட்சியை இலக்காக வைத்தும் அதற்கு பின்பாகவும் ஏராளமான பதிவர்களின் படைப்புகள் நூல்வடிவில் வெளிவந்தன. வந்து கொண்டிருக்கின்றன.
அகநாழிகை வாசுதேவன், மாதவராஜ், வம்சிபுக்ஸ் பவா செல்லத்துரை ஆகியவர்களின் முயற்சிகளோடு பதிவர்களும் நேரடியாக தங்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.
ஆனால் ஒன்றை அவதானிக்கிறேன். பதிவர்களின் கவிதைகள் தொகுப்புகளே அதிகம்.
கவிதைகளுக்கு பரந்துபட்ட வாசகர் வட்டம் இருக்கின்றதா? நவீனவிருட்சக்காரர் எழுதுவதைப் பார்க்கும்போது அப்படி இல்லை என்று தோன்றுகிறது.(கவிஞர்கள் சாபம் போட்டு விடாதீர்கள்). சுந்தரராமசாமி சிலகவிதைகளைப் பற்றி சொன்னது ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
பதிவர்கள் புத்தகம் போடுவதில் ஒரு அனுகூலம் இருக்கிறது. அவர்களுக்கு அறிமுகமான வாசகர் கூட்டம் (சக பதிவர்கள்தான்) றெடியாக இருக்கிறது. புதிதாக நேரடியாக அச்சில் தன் படைப்பைக் காணும் எழுத்தாளர்களுக்கு இந்த வசதி இல்லைத்தானே?
இன்னுமொன்று பதிவர்கள் தங்கள் இஷ்டம் எதையும் எழுதலாம். நாளைக்கே அதில் எதாவது முரண் வந்தால் உடனேயே அதை நீக்கியும் விடலாம். ஆனால் அச்சில் வந்து விட்டால் வந்தது வந்ததுதான். (அடுத்த பதிப்புவரை காத்திருக்கவேண்டும்- அடுத்த பதிப்பு என்று இருந்தால்.)
இணயத்தில் பலரும் எழுதுகிறார்கள். பெரிய எழுத்தாளர்கள், புது எழுத்தாளர்கள், ஆரம்ப எழுத்தாளர்கள் என்று பேதம் காட்டப்படுவதில்லை. சமத்துவம் நல்லதுதான். ஆனால் அனுபவப்பட்ட படைப்பாளிகளையே தூக்கியெறிந்து விமர்சனம் செய்யும் பொழுது கொஞ்சம் எங்கேயோ உதைக்கிறது.
வேறென்ன..
No comments:
Post a Comment