குமுதம் - தீராநதியில் முதல் கட்டுரை
தினக்குரலில் முழுப்பக்கப் பேட்டி
ஞானம் சஞ்சிகையில் விளம்பரம்
தினக்குரல் பேட்டி -
(பேட்டி- சிறீரஞ்சனி)
1. நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அல்லது உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
பொதுவாகவே படைப்பாளிகள் கவிதையில்தான் ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து சிறுகதைகள், பின்னர் நாவல் என்று தொடரலாம். என்னைப்பொறுத்தவரையில் கவிதை எழுதுவதில் எனக்கு நாட்டம் இருக்கவேயில்லை. நல்ல கவிதைகளை வாசிப்பதில், மனதில் பதிவுசெய்து கொள்வதில் நான் காட்டிய விருப்பம், மோகம் என்றே சொல்லலாம். படைப்பதில் ஏனோ இருக்கவில்லை. பல நாடகங்கள், சில சிறுகதைகளுக்குப் பிறகு நேரடியாக நாவல் எழுதப்புறப்பட்டு விட்டேன். கடலோடிகளின் வாழ்வு என்றுமே எனக்கு கவர்ச்சியானதாகவிருந்தது. நான் இளைஞனாக விரும்பி வாசித்த நாவல்களான ஆங்கில எழுத்தாளர் ஏணெஸ்ற் ஹேமிங்வேயின் “கடலும் கிழவனும்”, மலையாள எழுத்தாளர் தகழிசிவசங்கரம்பிள்ளையின் “செம்மீன்” - இரண்டையுமே நான் மொழிபெயர்ப்பாகத்தான் வாசித்தேன். அவை எனது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினால், ஐதீகங்கள், நம்பிக்கைகள, போராட்டங்கள்; நிறைந்த அவர்கள் வாழ்வின் தனித்துவத்தை வெறுமனே சிறுகதையில் பதிந்துவிடும் சாத்தியம் இல்லை என்று எனக்கு பட்டதினால் நீண்டநாவலாக படைத்தேன்.
2. ஏதாவது சிறுகதைகள் முன்பு எழுதி இருக்கிறீர்களா? அதில் நினைவில் நிற்கும் ஒரு கதையின் கரு என்னவாயிருந்தது எனச் சொல்லமுடியுமா?
நான் அதிகம் எழுதிக்குவிக்கவேண்டும் என்ற மனவிசாரத்துக்கு எப்போதுமே உட்படாதவன். எப்போதாவது ஒரு பொறியாக, மின்னற்கீற்றாக ஒரு நினைவு, ஒரு அனுபவத்துளி; தோன்றி ‘என்னைப்பற்றி எழுது’ என்று என்மனதை நெருக்குவாரப் படுத்திக்கொண்டிருந்தாலும் அவசரப்பட்டு எழுத ஆரம்பித்து விடுவதில்லை. ஆற,அமர மனதின் ஒரு மூலையில் போட்டு, கரு மெருகடைந்த பின்னர் நிதானமாக எழுதும் பழக்கத்தினால் நான் எழுதிய சிறுகதைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் ஒன்று – ‘துணையாக’ என்று வீரகேசரியில் வெளிவந்த சிறுகதை. வெளிநாட்டில் வாழும் ஒருவனுக்கு திருமணம்பேசி, முன்அறியாத ஒருவனுடன் வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதற்காக, மகளை அழைத்துக்கொண்டு கொழும்பு வந்து “லொட்ஜில்’ தங்கியிருக்கும் ஒரு தாய், தனது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நினைவுக்கீற்றினால், மனம் மாறி, மகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பிப்போகிறாள். ‘இலங்கையர்கோனின்’ எழுதிய சிறுகதையான ‘வெள்ளிப்பாதசரம்;’ எனக்கு மிகவும் பிடித்தது. அவர் சித்தரித்த அக்கால ‘வல்லிபுரக்கோயில் திருவிழாவை’ பின்புலமாகக்கொண்டு, எனது இந்தசிறுகதையின் முக்கியதிருப்பமும் அமைந்ததினால் என் மனதிற்கு இதமானதாக இன்றும் இருக்கிறது.
3. நாடகம் அல்லது திரைப்படம் மூலம் சொல்ல வரும் செய்திக்கும் நாவலில் முன்வைக்கும் கருத்துக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் உள்ள வேறுபாடுகள் என்ன என்று நினைக்கிறீர்கள்? (நாடகம் அல்லது திரைப்படம் ஒரு குழு முயற்சி. செலவு அதிகமனாது இருந்தாலும் அதில் முக பாவங்களால், உடல் மொழியால் செய்தியை எடுத்துச் செல்வது ஒப்பீட்டளவில் இலகுவானது. அவ்வகையில் உங்களின் நாவலின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?)
நாடகம் காட்டூன் வரைவது போன்றது. சிலகோடுகளால், சிலவசனங்களினால், ஆழ்ந்த கருத்தினை புரியக்கூடியவர்க்கு – அழுத்திச்சொல்கிறேன் - புரிந்துகொள்ளும் பக்குவம் உடையவர்க்கு உணர்த்தும் சக்தி வாய்ந்தது. இதில் ஒரு சங்கடமும் இருக்கிறது. உயிரும், தசையுமாக மேடையில் இயங்கும் பாத்திரங்களோடு, பார்வையாளன் என்றுமே முற்றுமுழுதாக ஐக்கியமாகிப்போவதில்லை. திரைப்படம் என்பது பெரிய படுதாவில் ஓவியம் வரைவதற்கு ஒப்பானது. எல்லையற்ற காட்சியின் அனுகூலங்கள் நிறையவே திரைப்படத்தில் இருக்கிறன. அத்தோடு திரையில் உலவும் பிம்பங்களோடு பார்வையாளன் தன்னை இணைத்துப்பார்க்கும் சாத்தியம் சற்று அதிகமாகவே இருக்கிறது. வாழ்வின் அடிமட்டத்திலும் வாழும் மனிதனும், கற்பனையில் அற்புதங்களை சாதிக்கும் சந்தோசம் பெறுகிறான். முந்திய தலைமுறையில் எம்.ஜீ.ஆரின் திரைப்படங்கள் வெற்றிபெற்றமைக்கு இதுவே காரணம். நாவலுக்கு இவற்றைவிட நிறையவே அனுகூலங்கள் உள்ளன. நாவல் படைப்பாளிக்கும், வாசகனுக்கும் நேரடியான பந்தத்தை உருவாக்கும் வசதி உடையது. வேறு புலன்களுக்கான தீனிவோடும் திரைப்படம் போன்றோ அல்லது நாடகம் போன்றோ நாவல் இருப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட குழுமுயற்சி என்பதிலேயே திரைப்படம், நாடகம் என்பன தனிப்பட்ட ஆளுமையை இழந்துவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம். செலவு அதிகமென்பதினால், அவற்றை மீளப்பெறுவதற்காக ‘சமரசங்கள்’ செய்யப்படலாம். நாவலுக்கு இந்தத்தடைகள் எதுவுமேயில்லை. நிச்சலனமான ஓடையைப்போல அமைதியாக வாசகனின் மனதில் சொல்லவந்ததை அது பதிந்து செல்லும். எழுத்தாளர் சா.கந்தசாமி சொன்னதைப்போல, “நாவல் என்பது முடிந்துவிடும் விசயமல்ல. நாவல் வாசித்து முடிக்கப்பட்டவுடன், வாசகன் மனதில் இன்னுமொரு நாவல் தொடர்கிறது’.
4. உங்களின் எழுத்துக்கூடாக நீங்கள் எதைக் காட்ட முனைகிறீர்கள்?
படைப்புக்கள் மூலம் போதனை செய்வது என்றுமே என்நோக்கமாயிருக்கவேயில்லை. அதுவும் நேரடியான பிரச்சார இலக்கியம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சமூகத்தில் நிகழ்வனவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன். வாசிப்பவரின் மனதில் அவை எழுப்பும் மறுகேள்விகளின் சாத்தியம் எனக்கு தெரியும் என்பதினால்.
5. நாடகம், திரைப்படம், நகைச்சுவை, கட்டுரை, விவரணம் என பலதுறைகளில் கால் பதித்திருக்கும் உங்களுக்கு மனநிறைவைத் தரும் செயற்பாடு என்று எதைக் கருதுகிறீர்கள்?
இவை எல்லாமேதான் என்னை நாவல்துறைக்குள் செல்ல கால்கோள் இட்டிருக்கின்றன. ஒரு நடிகனுக்குரிய அவதானம், உணர்ச்சிகளை எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை, திரைப்படக்காரனுக்குரிய காட்சிப்புலத்தை சீராக வர்ணிக்கும் அனுபவம், நீண்டகதையில் இழையோடவேண்டிய நகைச்சுவை, இவை எல்லாவற்றையும் விவரணமாக பதிவுசெய்யும் ஆற்றல் எல்லாமே எனது நாவல் எழுதப்பட்டபோது உதவிசெய்திருக்கின்றன. எனவே இவற்றின் ஒருங்கிணைவே எனக்கு மனநிறைவை தந்த நாவல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
6. நல்ல இலக்கியம் என்றால் என்ன அது சமூகத்துக்கு எவ்வகையான பயனைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நல்ல இலக்கியம் என்பதின் நோக்கம் நல்ல மக்களை உருவாக்க வேண்டியதாகவிருக்கும். ரசனைக்கு தீனிபோடுகிறோம் என்று நச்சு இலக்கியங்கள் படைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையாகவிருக்கிறது. ‘எனக்காகவே எழுதுகிறேன்” என்று ஒரு படைப்பாளி சொன்னபொழுது, என்மனதில் எழுந்த ஒருகேள்வி, “அவர் எப்படிப்பட்டவராக இருக்கலாம்?" நியாயமான சநதேகம் தானே இது?
7. சமூகத்திலுள்ள பல குறைகளை நகைச்சுவையுடனும், நளினத்துடனும் வெளிப்படுத்துவதில் வல்லவர் நீங்கள். இந்த வகைக் கலை இப்போது புலம் பெயர் மக்களால் எவ்வளவு தூரத்துக்கு வரவேற்கப்படுகிறது?
நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வது ஆரோக்கியமானது. அதுவும் நகைச்சுவையாகச்சொல்லப்படும் அந்தக்கலை புலம்பெயர் நாடுகளிலிலே வேரூன்றியதொன்று. இருப்பினும் புலம்பெயர்வாழ் நம்மக்கள் மத்தியிலே அதற்கான தயார்நிலை இல்லாதிருப்பது எனக்கு ஆச்சர்யமாகவிருக்கிறது. மாறி,மாறி புகழ்ந்து கொள்வதில் உள்ள நாட்டம், சுயவிமரிசனம் செய்து கொள்வதில் இல்லை என்று மட்டும் எனக்கு புரிகிறது.
8. உங்களைக் கவர்ந்த புத்தகம் அல்லது எழுத்தாளர் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஆரம்பகாலப்படைப்பான “அக்கா’ சிறுகதைத்தொகுதியே எனக்கு மிகவும் பிடித்தது. அதில் முக்கியமாக இரண்டு சிறுகதைகள் - 'அக்கா’ மற்றது ‘அனுலா’.
இந்திய சஞ்சிகையான "கல்கி" எந்த ஆண்டில் "ஈழத்துச்சிறுகதைப்போட்டியை நடத்தியது என்று எனக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அந்த சிறுகதைப்போட்டியின் முடிவுகளை. ஆவலுடன் பார்த்திருந்து வாசித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அந்தப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகள் முதல் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்ட கதைகள் வரை எல்லாவற்றையும் படித்தேன். ஆனால் அவற்றுள்ளே என் மனதில் இடம்பிடித்த கதை - அ.முத்துலிங்கத்தின் "அனுலா" என்ற இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதைதான்.
ஒரு இளைஞனாக இந்தச்சிறுகதையை மனப்பாடமாக ஆகுமளவிற்கு பலமுறை வாசித்திருப்பேன். இக்கதையின் ஓட்டம், கதையின் நாயக பாத்திரத்தின் குணாதிசயம்; எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தன்னை நாடிவரும் அப்பாவியான கிராமப்பெண்ணை உதாசீனம் செய்யும், இதயத்தை கிழிப்பதுபோல வார்த்தைகளைக்கொட்டும் வக்கிரமான அந்தப்பாத்திரம் எனது அபிமானத்துக்குரிய அனுலாவை வேதனைக்கு உள்ளாக்குவதை நான் பரிபூரணமாக வெறுத்தேன். கடைசி வசனம் கூட எனக்கு இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது "இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப்போகிறேன்".....விளக்கு எப்போது அணைந்தது...ஒரு துளிகூட காற்று வீசவில்லையே.
யாழ்ப்பாணத்தில் தொடங்கி ரொறன்ரோ வரை.. எத்தனை மைல்கள்..எத்தனை ஆண்டுகள் என் அபிமான எழுத்தாளரை தேடிக் களைத்து, எதிர்பாராமல் ஸ்காபரொவில் முதன்முதலாக சந்தித்த வேளையிலே இந்த வசனத்தை அவருக்கு மறக்காமல் சொன்னேன். அவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்.
9. பொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது இந்த நாவலின் அட்டைப்படத்தைப்பற்றி, வரைந்த ஓவியர் பற்றிச்சொல்லுங்கள்.
ஏறக்குறைய ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர்தான்; சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது சுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை வரைந்து தந்தார். யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் கருதுகிறேன்.
10. இந்த நாவலுக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த முன்னுரையைப் பகிர்ந்தவர் பற்றி குறிப்பிடுங்களேன்
இந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகால நண்பருமான பி.எச்.அப்துல்ஹமீத் தான.; அவர் இந்த நாவலுக்கான முன்னுரையுடன், என்னைப் பற்றிய அறிமுக உரையையும் இணைத்து வழங்கியிருக்கின்றார்.
நான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். நாங்கள் வானொலியில் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். என்று அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகவாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.
11. உங்களின் நாவல் மூலம் இலங்கையில் உள்ள ஒரு பகுதி மக்களின் வாழ்வுக் கோலங்களை அழகாக வாசகர்களின் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். சமகால அல்லது புகலிடப் பிரச்சனைகள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன். நிறைவாக நீங்கள் வாசகர்களுக்கு வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எனது நாவல் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. நனவிடை தோய்தல் என்ற அடிப்படையிலே, எனதும் என்னையொத்தவர்களினதும் சிறு பராயங்களின் சில்மி~ங்களை, அனுபங்களை நகைச்சுவை தோய நான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைத்தொடர் வெகுவிரைவில் நூல்வடிவில் வரவிருக்கிறது. நீங்கள் கூறியதுபோலவே புலம்பெயர்வாழ்வின் பதிவாக நாவல் ஒன்று எழுதுவதற்கான முனைப்பும் என்மனதில் இருக்கிறது.
வாசிப்புப்பழக்கம் அருகிக்கொண்டேபோகிறது. கணினியின் அதிக்கம் மேலோங்குகிறது என்று அடிக்கடி ஆரூடம் கூறிக்கொள்பவர்களின் மத்தியிலும், ஏராளமான தமிழ் நூல்கள் தினமும் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இணையத்தில் கூட புத்தகவிழாக்கள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறத்தான் செய்கின்றன. கணினியில் தமிழில் எழுதுபவர்கள் கூட, தங்கள் படைப்புக்களை அச்சில் காணும் கனவுகளோடுதான் உலவுகிறார்கள்.
வாசகர்களே, நீங்கள் நிறையவாசிப்பதன்மூலமே படைப்பாற்றல் மாத்திரமல்ல, நல்வாழ்வுக்கான அத்தனை ஆற்றல்களையும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.
இலங்கையில் ஞானம் சஞ்சிகையில் பூபாலசிங்கம் புத்தகசாலையின் விளம்பரம்
இப்போது காலச்சுவடு இதழில் விளம்பரம்
இதழ் 120, டிசம்பர் 2009
எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" பற்றிய சிறு விளம்பரம் டிசம்பர் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரு வாரங்களுக்கு விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நீங்கள்.
கனக்ஸ்,
ReplyDeleteதகவலுக்கு நன்றி. விக்கிபீடியா இரண்டாவது முறையாக என்னை இப்படி முன்பக்கத்தில் இடம்பெறச்செய்து கெளரவித்திருக்கிறது சந்தோசமே.