Monday, February 28, 2011

எனக்கு அமுதன் அடிகள் இலக்கியப்பரிசு - 2009

எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்களு"க்காக தமிழகத்தின் உயர்ந்த விருதுக்ளில் ஒன்றான "அமுதன் அடிகள் இலக்கியவிருது - 2009 வழங்கப்பட்டுள்ளது. பெப்ருவரி 26ந்த்கதி தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெற்ற விழாவில் 15,000 பணப்பரிசிலுடன் பட்டயமும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கல் பற்றி பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் கூறுகிறார் உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால் , நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். பி.எச். அப்துல் ஹமீட் ('கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின் மேற்குறித்த வார்த்தைகள் நிஜமாகியிருக்கின்றன. 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு 'அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு' வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளையினர், முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' என்ற நாவலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைக்கிறது.

இம்மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்படுகின்றது.

இந்திய ருபாய 15 ஆயிரம் உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்

தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
சோ.தர்மன் (2008)
ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெறும் 'அமுதன் அடிகள் அஙக்கட்டளை' இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்;கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் அண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் அண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகள் அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தவிழாவில் நேரடியாக கலந்து கொள்ளமுடியவில்லை. எனது சார்பில் எனது மருகர் துஷான் கலந்துகொண்டு, விருது, பட்டயம் எனபனவற்றை பெற்றதோடு எனது நன்றி உரையை வாசித்தார்.

எனது உரை இதோ-

அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை நிறுவனம் வருடந்தோறும் இலக்கிய படைப்புக்களுக்கு வழங்கி கௌரவித்துவரும் அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை இதுவரை பெற்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் வரிசை என்னைப் பிரமிக்கவைத்தது. அவர்கள் அனைவருமே என் ஆதர்சத்துக்குரியவர்கள்.

இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது முதலாவது நாவலான, கரையைத்தேடும் கட்டுமரங்கள் 2009 ஆண்டிற்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை பெறுகின்ற செய்தி எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தந்தது.

இன்றைய விழாவில் நான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில், இந்த விழாவின் காரணகர்த்தாவான அமுதன் அடிகளுக்கும், கலந்துகொள்ளும், அத்தனை தமிழ் நெஞ்சங்;களுக்கும், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளையினருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று கௌரவப்படுத்தப்படும் மற்றைய இரு படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

இறுதியாக எனக்குப் பிடித்த ஒரு பாடல் வரிகள்

பூமியின் அழகே பரிதியின் சுடரே
பொறுமையின் வடிவே தமிழே
நாநிலம் பரவ நம் நாவினில் மலர்வாய்
நற்றமிழ் மொழியே வணக்கம்.

எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்,
ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்
எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்
எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்

-கவிஞர் சேரன்