Thursday, December 9, 2010

நாவல் பற்றிய இன்னமொரு விமர்சனம்

ஏற்கெனவே எனது நாவல் பற்றிய விமர்சனங்கள் -
காலச்சுவடு சஞ்சிகையில் - பி.விக்னேஸ்வரன்
தாய்வீடு பத்திரிகயில் - என்.கே.மகாலிங்கம்
இணையத்தில் குரு அரவிந்தன், கலைஞன், வல்வை சாகரா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பொழுது லண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளி இணையச் சஞ்சிகையிலும் எழுத்தாளர் முல்லை அமுதன் தனது விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி

கரையைத் தேடும் கட்டுமரங்கள்



ஈழத்து நாடகக் கலைஞன் நமக்குத் தந்திருக்கிற நாவலே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்‘ நாவலாகும். மண்ணின் மணம் மாறாது தமிழில் வந்திருக்கிற சிறப்பான நாவலை நமக்குத் தந்திருப்பவர் ‘அண்ணை றைட்‘ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் .

எமது யாழ்ப்பானத் தமிழை தெற்கே நகைச்சுவை நாடகம் என்கிற பேரில் கொச்சைப் படுத்திய காலத்தை மாற்றி பாசச்சுமை, நம்பிக்கை, இரை தேடும் பறவைகள், அசட்டு மாப்பிள்ளை எனப் பல நாடகங்களைத் தந்த வரணியூரான், கே.எம்.வாசகர்,சில்லையூர். செல்வராசன் வரிசையில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரின் நாடகப் பயிற்சி, மக்களுடன் பண்புடன் பழகுவதின் மூலமும் மொழித்தேர்ச்சி நிரம்பப் பெற்றவராய்த் தெரிகிறார்.

305 பக்கங்களில் வடலி வெளியீடாக நம் கைகளில் தவழ்கிற இந் நாவல் பிரபல ஈழத்து பிரபல ஓவியர் ரமணியின் ஓவியம் கவர்கிறது.

வட்டார அல்லது கிராம மக்களின் உணர்வுகளை லாவகமாக கையாண்டு எழுதப்பட்ட நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. அ.பாலமனோகரன், செங்கைஆழியான்,செ.யோகநாதன், முல்லைமணி, காவலூர்.ஜெகநாதன், தாமரைச்செல்வி, செம்பியன் செல்வன், அ.ஸ.அப்துல்சமது, வ.அ.இராசரத்தினம், தெணியான், சொக்கன், கோகிலம்.சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, ஞானரதன், ஞானசேகரன் போன்ற பலர் தம் மொழி சார்ந்து சிந்தித்து அந்தந்த வட்டார, கிராம வழக்குச் சொற்களை பயன்படுத்தி எழுதியவர்களாவர். அந்த வரிசையில் சற்று தூக்கலாக எழுதி நம்மிடம் பாராட்டுப் பெறுகிறார்.

ஒரு படைப்பை தருமுன் அந்த நாவல் பற்றிய சிந்தனை(கரு), அந்த மக்கள் வாழ் நிலை பற்றிய அறிவு /அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அனுபவம் இவருக்கு கிடைத்திருக்கிறது இவர் செய்த பாக்கியமே. ராஜம்.கிருஷ்ணன் ,லக்ஸ்மி போன்றோர் அவர்கள் எழுத நினைக்கும் படைப்பு பற்றிய முழுமையான கருக்கள்/கருத்துக்கள் பூரணப்படுத்தலுடன் கதைச் சூழலுகேற்ப அந்த மக்களுடன் வாழ்ந்து எழுதுவதனால்தான் அவர்களின் படைப்புக்கள் உயிர்ப்புடன் இன்றும் வாழ்கிறது.அந்த வகையில் நமது கதாசிரியரும் தன் வானொலித் தொடர் அல்லது நட்பு கருதி அந்த மான் பாய்ந்தவெளிக் கிராமத்துக் களத்தை நாவல் மூலம் அறிமுகம் செய்கிறர்.

தணியாத தாகம் நாடகத்தின் சோமு பாத்திரம் பற்றி இப்போது நினைக்கையிலும் கண்ணில் நீர் கட்டும்.நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.உரையாடல் தான் நம்மவரை உட்கார வைத்தது.பேச வைத்தது.ஆதலால் மண் மொழியின் வலிமை ஒரு கதையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும்.கரிசல் காடு மக்கள் வாழ்வை நமக்குத் தந்த இந்திய எழுத்தாளர்கள் பற்றியும் தெரியும்.இங்கு ஆசிரியரின் உரையாடல் புத்துணர்ச்சியை தந்துவிடுகிறது.

‘வாடைக்காற்று‘ நாவலுக்குப் பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்த நல்ல புத்தகம். நமக்குப் பரிச்சயமான கிராமம் கண் முன்னே மீண்டும் திரைப்படம் போல நிழலாடுகிறது. மீனவக் கிராமங்களான குருநகர் ,பாசையூர், நாவாந்துறை சார் மக்களின் வாழ் நிலைகளூடு பழக்கப்பட்ட என் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் மீனவ மக்களின் வாழ்நிலை பற்றி அறிந்திருந்தாலும் வாடைக்காற்று நாவல் தந்த அனுபவத்திலிருந்து சற்று மாறுதலான அனுபவ வெளிப்பாடுகளை இந் நாவலில் காணமுடிகிறது.

ஒரு கிராமம் தன் அகச் சூழலுடன் வாழ வேண்டுமெனில் புறச் சூழல் இயல்புடன் இருக்க வேண்டும். இங்கு புறச் சூழல் நன்றாக அமையாது விட்டதனால் ஆசிரியர் நகர்த்திச் செல்கிற கிராமம் (மான் பாய்ஞ்ச வெளி ) இன்று இல்லை என்றே சொல்லலாம்.

மொழி பற்றிய தெளிவு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். அந்த மொழி ஊடாக கொண்டு வரப்படுகின்ற படைப்பு பற்றிய அறிவு வாசகனுக்கு இருக்கும் பட்சத்திலேயே வெற்றி பெற்றதாய் அப் படைப்பு அமையும்.

தகழியின் செம்மீன், தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரத்துக் கிராமத்தின் கதை‘ எர்னஷ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடவுளும் மனிதனும்‘ நாவல்களின் வாசிப்பு அனுபவம் நம் கண் முன்னே பல தகவல்களை தந்திருந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடன் பல ஆண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் ‘ நாவல் வாசிக்கும் போது ஏற்படுகிறது.

எழுதுபவன் முதலில் மொழியை நேசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ஆளுமை எழுத்தில் வெளிப்படுவது நிஜம். அத்தகைய நேசிப்பு நாவலில் தெரிகிறது.

ஒவ்வொரு கிராமத்துள்ளும் மனித மனங்களிடையே இடம் பெறும் போராட்டங்களை மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வழிப்பாதையாக அடைப்புக்குறியுடன் எதிர்பார்க்கப்பட்ட நமது இலக்கியத்தை தமிழ் தெரிந்த வாசகர் பரப்பை உள் வாங்கியபடி நகர்கிற நமது இலக்கியத்தை தாங்கிச் செல்பவர்கள் நமது எழுத்தாளர்களே .அதிகமான எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கித் தந்திருக்கிறது 83 இனக்கலவரம். புதிய உலக சிந்தனைகளை, உலக மொழிகளை பரிச்சயப்படுதுகிற அளவிற்கு நம்மவர்கள் முன்னேறியுள்ள நமது உலகம் விசாலித்து நிற்பது கூட பதிப்பாளர்கள் நம் பக்கம் திரும்பி உள்ளார்கள். இப்போது வழக்குச் சொற்கள் அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தவில்லை. எம் போராட்டம் மீதான அவர்களின் நம்பிக்கை இன்னும் நம்முடன், நம் மொழியுடன் கலக்கின்ற தேவையும் ஏற்பட இரு வழித் தொடர்பு இலக்கியமாக இலகுவாக்கப்படுள்ளது.

மீனவக் கிராமங்களில் தெரிந்தோ ,தெரியாமலோ தொழில் நிமித்தமாகவும், கலையின் நிமித்தமும், கே.எஸ்.பாலச்சந்திரன் மக்களுடன் , மக்களின் வாழ்வு பற்றிய அனுபவம் , அவர்களின் மீதான ஈடுபாடு அவருக்குள் உருவான எழுதுருவம் நல்ல நாவலை நமகுத் தந்திருகிறது..

ஒரு பயிற்சி பெற்ற நாவலாசிரியனது எழுத்து நடை கைவரப் பட்டவராய் ஜமாய்த்திருக்கிறார். மனதில் நிற்கின்ற பாத்திரங்கள் ,தெரிந்த மொழிநடை நம்மை வசிகரிக்கிறது.

வியளம், தொம்மைக்கிழவன், கிடுகு,குசினி, இரணை,உசிர், சூள்லாம்பு வெளிச்சம், தட்டி வான், இஞ்சேர், குஞ்சியப்பு, சொதி, குமர்ப்பெட்டை, கடுக்கண், விசர் பெடல்களை, கேட்டனீ, பானாக்கத்தி, தேத்தண்ணி, மொக்குத்தனம், விறைக்கும், கெக்கட்டம், பொத்தல், நத்தார், கிடக்குது, திட்டி, கைலேஞ்சி,அம்பிடுதல், அலம்பல்வேலி, சம்மாட்டி, கொப்பா, தீத்தி, கவாட்டி, சாரம், இப்படி அனேக சொற்கள் நாம் மறந்து விடாதபடி கையாளப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டும்.மனவலிமை, சிதறாத சிந்தனை உள்ள ஒருவனால்த் தான் தன் நிலை பதறாமல் எழுத முடிந்திருக்கிறது. புலம் பெயர்ந்த பின்னும் வார்த்தைகளை மறக்காமல் தொட்டிருப்பது வாழ்த்த வேண்டும்.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்கள் இல்லாததால் இடம் பெயர்ந்த மக்களின் வாழ் நிலையும் மாறுபட்டிருக்கும்.எனவே, இந் நாவல் ஒரு ஆவணமாகவும், ஒரு காலத்து வரலாறாகவும் கொள்ளலாம்.

அந் நாட்களில் யாழ் பஸ் நிலைய ஒலிபரப்புகளில்(பெஸ்டோன்,மணிக்குரல்)அடிக்கடி ஒலிபரப்பாகிய ‘அண்ணை றைட்‘ தனி நடிப்பு நாடகம் பின் நாளில் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.நெல்லை.க.பேரன்,கே.எம்.வாசகர், சில்லையூர்.செல்வராஜன் ,வரணியூரான் போன்றவர்களின் பேச்சு மொழி மீதான அபிமானம் அவர்களின் நாடகங்களில் பிரதிபலித்தது.அதன் எதிரொலியே அவர்களின் நாடகப்பிணைப்பு அல்லது நட்பு பாலச்சந்திரனையும் ஆகர்சிக்க வைத்தது போலும்.நாவல் முழுவதும் பயிற்சி தெரிகிறது.எனக்குத் தெரிந்த வரையில் ‘சிலோன்‘ விஜயேந்திரன்,பாலா இருவருமே சிறப்பாக தங்கள் தனி நடிப்பால் ரசிகர்களின் மனதினைக் கவர்ந்தவர்.

தொண்டமானாறு, வளலாய்,பலாலி,மாதகல் என கிராமங்களின் கடற்கரைப் பிரதேசங்களின் வாழ் நிலை பற்றிய அனுபவம் பரிச்சயமானது தான். எனினும் கிளாலி கடற்பயணம் தந்த பயங்கர அனுபவமே அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பதால் நாம் நம்மை சுதாகரித்து எழுபதில் வாழ்ந்த மக்களின் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டியுள்ளது

களச் சூழல் தற்போது போல இல்லை என்பதற்காக அக்கால சூழலை புறம் தள்ளி விட முடியாது. கிராமியச் சூழலிலான திரைப்படங்களைப் பார்க்கும் வேளையில் கண்ணில் நீர் கட்டும்.அந்தச் சூழல், மக்கள் ,அவர்களின் உறவு முறைகள்,,ஆடு,மாடு, வண்டில்கள், மரங்கள்,கார் என நம்மை அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.கூடவே,அந்த சுகானுபவத்தை அனுபவிக்க முடியாதபடி ஆக்கிய இந்திய அரசு மீதும் கோபம் வந்துவிடுகிறது.இந் நாவலின் களச் சூழல் முன்னைப் போல் இல்லை என்கிற போது எவர் மீதோவெல்லாம் கோபம் வருவது தவிர்க்க முடியாதுள்ளது..

ஆசிரியரின் கற்பனைக்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

‘வர்ணக் கலவைகளின் அழகு இயற்கையெனும் அற்புத சைத்திரீயனின் கை வண்ணமாக கருநீல வண்ணம், பச்சை, மெல்லிய மஞ்சள் நிறங்களில் நீளத்துக்கு நீருக்கு அடியில் படர்ந்து, ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், புதிதாகப் பார்ப்பது போன்ற உணர்வுடன் பிரமிக்க வைக்கும் அந்த அழகை , பல நாளவன் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறான்.முருகைக் கற்களுக்கு மேல் தாவரம் போல் படர்ந்திருக்கும் பவளப் பாறைகள், சூரிய ஒளி பட்டு ‘தக தக‘ என்று மின்னும்….’

‘மீட்டிப் பார்க்கப்பட்டுபின், தந்தி அறுத்து ,தூசிபடிந்ததாய், ஸ்பரிஸம் படாததாய் இருந்த வீணைக்கு புதுத்தந்திகள் பொருத்தி, ஆனந்தராகம் மீட்டினான் அந்தோனி.மோகக்கடலில் முட்டி மோதும் உணர்ச்சிப் பெருக்கில் அறிவிழந்து அந்த இழப்பே பிறிதோர் வெற்றியாக அவனோடு ஒருமித்த நிலையில் ஸ்ரெல்லா அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு காலக்கனிகள் வேகமாக உதிர்ந்து வீழ்ந்தன.’

‘விழுந்திருந்த அந்தத் தென்னங்குற்றியில் அமர்ந்து கொண்ட அந்தோனியை, காற்றினால் மெதுவாக அசைக்கப்படும் தென்னோலையின் கீற்றுக்களைடையே புகுந்து வரும் நிலவொளி அடிக்கடி காட்டிக்கொடுத்தது.வினாடிகளின் கழிவே நீண்ட காலத்துகள்களின் பயணமாக அவன் உணர்ந்து அடிக்கடி தலையை திருப்பி ஆஸ்பத்திரியிலிருந்து வரும் பாதையில் தாபத்துடன் விழி பதித்து இதயம் படபடக்க அமர்ந்திருந்தான்‘.

70-80 களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் போது வீரகேசரி, மாணிக்கம், கலாவல்லி, சிரித்திரன் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலக்கிய பிரசுரங்களை வெளியிடத் தொடங்கின. மக்களின் அவலங்களை அவரவர் மொழியில் சொல்ல முனைந்தன. ஆங்காங்கே சிறு சிறு வெளியீட்டு முயற்சிகளும் வராமல் இல்லை. அப்போதிருந்தே நம் இலக்கியங்கள் நம்மையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். அப்போது இந் நாவல் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், எப்படி ஹிரோஷிமாவின் அவலம் திரும்பத் திரும்ப சொல்லப் பட வேண்டுமோ நமது வாழ்வியல் முறைகளும் அவ்வப்போது எழுதப்பபடல் வேண்டும் தான். அந்த வகையில் இந் நாவல் தேவையான ஒன்றாக அமைகிறது.

இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரப் போக்கால் பல கிராமங்கள் எனி மறக்கபட்டும் விடலாம். அதற்காக இப்படியான ஆவணங்கள் நமக்குத் தேவையாகவும் உள்ளது.

வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு சீராக இருப்பின் இரு தரப்பும் உற்சாகமாய் புரிந்துணர்வு கொள்ள முடியும்.

முதற் காதல் மறுக்கப் பட்டாலே ஒருவன் முனிவனாகிவிடுகிறான்.பட்டுப்போன காதல் உணர்வு இன்னொரு பெண்ணின் நெருங்குதலோடு துளிர்க்கும் என்றிருக்கையில் இரண்டாவது காதலுக்கும் தடங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனது தந்தையின் ‘அந்த ‘ தேவைகளுக்காக வைத்திருந்தவளின்(சின்னவீடு?) மகளை ஏற்றுக் கொள்ள தந்தையும் விரும்பவில்லை. கூடவே, காலம் சென்ற அவளது கணவனின் தம்பியுடன் பார்த்த பின் ஏற்பட்ட சந்தேகமும் அவளிடமிருந்து அவனை தூரமாக்குகிறது. காலச் சுழற்சியில் அவன் பணக்கார சம்மட்டியாரின் மகளை மணக்க நேர்ந்தாலும் மணைவியாக வந்தவளின் திமிர்ப் போக்கு அவனுக்கு வசந்தம் இல்லாத வாழ்வை நினைத்து துடித்துப் போகிறான். காலமும் அவலப் பட்டவர்களை நோக்கியே தன் அஸ்திரத்தை வீசும் என்பது கண்கூடு.

மனிதர்களின் பெயர்களின் கிராமியம் நட்சத்திரம்,தங்கப் பவுண் எனும் பெயர்களில் தெரிகிறது.

அந்தோனி, செல்வராணி, ஸ்டெல்லா, சில்வியா என அவனைச் சுற்றி படர்கின்ற பெண்கள். எனினும், கிளைப் பாத்திரங்களாக நிறையப் பேர் வந்து போகின்றனர். நாவலில் காதலுடன், பாசம், நட்பு, பொறுப்புணர்வு என்பனவும் மனதைத் தொடும் வண்ணம் பாத்திரங்களூடாக காட்டுகிறார்.பிசகாத பாத்திரப் படைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

காதல் அனேகமாக சோக முடிவையே தந்து விடுகிறது.குறிப்பாக கதைகளில் வாசகர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்யவெண்ணியோ என்னவோ எழுதியும் விடுகிறார்கள்.அந்த தொழில் நுட்பம் தெரிகிறது நாவலில்..

‘கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடி நீர் தருபவர் யாரோ?

தனியாய் வந்தோர் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ?

ஒரு நாள் போவார்!

ஒரு நாள் வருவார்!!

ஒவ்வொரு நாளும் துயரம்.

ஒரு ஞாண் வயிறை வளர்ப்பவர்

உயிரை-

ஊரார் நினைப்பது சுலபம்!!’

பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.

செம்மீனில் காட்டப்பட்ட அதே சோகம், இரக்கம், ஏமாற்றம், இழப்பு நாவலில் காட்டப் பட்டாலும் நமது கிராமத்துக் களம் சொல்லி நிற்கின்ற செய்திகள் ஏராளம்.

மனதைத் தொடுகின்ற சில வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமானவை. ‘காதல் என்பது புத்தி உள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப் பயில்வானை நிஜப் பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து இப்படி எல்லாம் ரசவாத வித்தை இயற்றும் வல்லமை வாய்ந்தது தானே!

ரசிக்கும் படியாக உள்ளது.நெல்லை.க.பேரனிடம் கற்றுக் கொண்டாரோ? ‘என்னைக் கொல்லப் போறியே..கொல்லு..கொண்டு போட்டு எவளோ ஒருத்தியை வைச்சிருக்கிறியாமே..அவளோடை போய் இரு..’மனைவி சில்வியாவின் கோபப் பேச்சு.

‘பொத்தடி வாயை‘-இது கணவன்.

‘நான் கத்துவன்..ஊர் அறியக் கத்திச் சொல்லுவன்‘

மரணம் என்பதும் விடுதலை தானே! துன்பங்களிலிருந்து ,அவற்றுக்கு காரணமான உறவுப் பந்தங்களிலிருந்து விடுதலை! சுடலையைத் தாண்டிச் சென்றவுடன் சுடலை ஞானமும் வந்த வழியில் சென்று விடுகிறது…’

சாதாரண கூலிக்காரனாக தொடங்கி, சம்மட்டியாக வரும் வரைக்கும்,என்னோடை எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி வாழ்ந்த என்ரை மதலேனாவே இல்லையம்…இதுகள் போனாலென்ன அந்தோனி…’

இராயப்புவின் பெண்சாதி தன்னை விட இரண்டு மடங்கு கனமான தாலி கழுத்தை அலங்கரிக்காட்டியல், காசுமாலை என்று அலங்கார பூஷிதையாக உலாவியதும், மாப்பிள்ளை பக்கத்தாரை விட தங்கடை ஆட்கள் பெரியாக்கள் எண்ட மாதிரி ‘அவையளை‘ விழுந்து விழுந்து உபசரித்ததும், சம்பந்தி மீது மதலேனாளுக்கு எரிச்சலையே உண்டாக்கியிருந்தது…’

‘கதைசொல்லி‘ பாலச்சந்திரனின் பலமும், பலவீனமும் தென்பட்டாலும் நேர்த்தியான கதையைத் தந்ததிற்கு நன்றிகளும் பாராட்டுதலையும் தந்துதானாக வேண்டும்.இன்னுமொரு வரலாற்று ஆவணத்தை பதிவாக்கி தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.அது முள்ளிவாய்க்காலாகவும் இருக்கலாம்.

பல வருடங்களின் பின்னர் இலங்கை வரைபடத்தில் தேடப் படுகின்ற ‘மான் பாஞ்ச வெளி‘ போல் முள்ளி வாய்க்காலும் விடுபட்டு போயிருக்கலாம்.எதிர் பார்த்தபடி…

இந் நூலை வெளியிட்ட ‘வடலி‘ வெளியீட்டகத்தாருக்கும் எமது நன்றி.

-கவிஞர் முல்லைஅமுதன்-

Monday, November 15, 2010

தாய்வீடு பத்திரிகையில் நாவல் விமர்சனம்



கனடாவிலிருந்து வெளியாகும் 'தாய்வீடு' மாதாந்த சஞ்சிகை/பத்திரிகையில் பிரபல எழுத்தாளரான "பூரணி" ம்காலிங்கம், நாவல் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கும் 'தாய்வீடு' நிர்வாகத்தினருக்கும் என் நன்றி.

என்.கே.மகாலிங்கம்


என் பார்வையில் -கே.எஸ்.பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் -நாவல்

மிகச் சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவல் அந்தோனி என்ற மீனவ இளைஞனின் காதல் கதை. அல்லது அந்தோனி காதல்களில் தோல்வி அடைந்த கதை. முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடன் நின்ற அந்தோனியுடன் ஆரம்பித்த நாவல் முடிவிலும் இன்னொரு காதலில் தோல்வியடைந்த அந்தோனியுடனே முடிகிறது. இடையில், தகப்பன் மரியாம்பிள்ளை சம்மாட்டி, தாய் மதலேனாள், தமையன், தங்கைகள் எலிசபேத், மேரி, மனைவி சில்வியா, முதல் காதலி செல்வராணி, இரண்டாவது காதலி ஸ்ரெல்லா என்பவர்களுடன் மான்பாய்ஞ்ச வெளி என்ற கிராமமும் ஒரு சில உறவுக் குடும்பங்களும், புங்குடுதீவிலுள்ள மீனவப் பகுதியிலுள்ள ஒரு குடும்பமும் ஊடாடுகின்றன.
மான்பாய்ஞ்ச வெளி மீனவர்கள் தங்கள் கடலில் மீன்பிடித் தொழில் குறைந்த பருவ காலத்தில் புங்குடுதீவு தெற்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அங்குள்ள மீனவத் தொழிலாளிகள் சிலரை மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் தொழிலுக்கு உதவிக்கு வைத்தும் கொள்வர்.

அந்தோனி முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடனும் துயரத்துடனும் இருக்கையில் குடும்பம் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் செல்லுகின்றது. அவனும் செல்கிறான். போன இடத்தில் இவனுக்கு இரண்டாம் காதல் ஸ்ரெல்லா என்பவளுடன் ஆரம்பமாகின்றது. இவள் கணவனை இழந்த இளம் விதவை. அரசினர் ஆஸ்பத்திரியில் தாதி. அவளுடைய தாய் லூர்த்தம்மா. அவளை அந்தோனியின் தகப்பன் மரியாம்பிள்ளை இளம் கணவனாக இருந்த காலத்தில் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் சென்ற இடத்தில் ‘வைத்திருந்தவன்’. அப்பொழுது ஸ்ரெல்லா சிறு குழந்தை. லூர்த்தம்மாவின் கணவன் அப்பொழுது அவர்களைக் கைவிட்டு வேதாரிணியத்தில் குடும்பமாக போய் விட்டான். லூர்த்தம்மாவுக்கும் மரியாம்பிள்ளைக்கும் இருந்த உறவு பலருக்குத் தெரியாது.

மரியாம்பிள்ளை, அந்தோனி ஸ்டெல்லா காதலை விரும்பவில்லை. அதனாலும்; அந்தோனி, ஸ்டெல்லாவை இன்னொரு ஆடவனுடன் பார்த்து சந்தேகப்பட்டதாலும் இந்தக் காதலும் நிறைவேறவில்லை. அவனுக்கு மான்பாய்ஞ்சவெளியின் அருகிலுள்ள கிராமத்திலுள்ள பணக்காரச் சம்மாட்டியின் மகள் சில்வியாவுக்கும் திருமணம் நடக்கிறது. சுpல்வியா பணக்காரி. படித்தவள் என்ற திமிர் பிடித்தவள். திருமணம் முடித்த நாளிலிருந்தே அவள் அந்தோனியையும் அவன் குடும்பத்தையும் விரும்பவில்லை. ஏறுமாறாக நடத்துகிறாள். அதனால் திருமண வாழ்க்கையிலும் அவனுக்குக் காதல் சுகம் கிடைக்கவில்லை. அந்தவேளையில் ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அவன் தொழிலுக்குச் சென்ற படகு புயலில் அகப்பட்டுக் காணாமல் போகிறது. படகில் சென்ற அந்தோனியும் மற்ற மூவரும் காணாமல் போய் விடுகிறார்கள். அத்துடன் அவனுடைய குடும்பத்தில் தாய் சாகிறாள். எலிசபெத்தின் திருமணம் தடைப்படுகிறது. தகப்பன்; தடுமாறுகிறான். தொழில் பாதிப்படைகிறது. படகுகள் விற்கப்படுகின்றன. சில்வியாவும் ஒரு மைனருடன் ஓடிப் போய் விடுகிறாள். தெய்வாதீனமாக அந்தோனியும் மற்றவர்களும் சென்ற படகு தாய்லந்து தேசத்தில் கரையொதுங்குகிறது. அதிலிருந்த இருவர் இறந்து விட அந்தோனியும் மற்ற இருவரும் இலங்கை திரும்புகின்றனர். அந்த இடைவெளிக்குள் தாயில்லை. மனைவி வேறொருவனுடன் ஓடி விட்டாள். ஆகவே, அவனுடைய அண்ணியின் தூண்டுதலில் திரும்பவும் புங்குடுதீவுக்கு ஸ்டெல்லாவிடம் காதலைத் தேடி ஓடுகிறான். அங்கும் அவளுக்கு கணவனின் தம்பியை திருமணம் செய்யப்பட்டு விட்டதை ஸ்டெல்லா தெரிவிக்கிறாள். திரும்பவும் அந்தோனி காதல் தோல்வியில் சோகத்துடன் நிற்கிறான். அத்துடன் நாவல் முடிகின்றது.

இந்த நாவலில் சில சிறப்புக்கள் உள்ளன. முதலாவது, நாவலை வாசகன் தங்குதடையின்றி ஒரே இருப்பில் வாசிக்கக் கூடியதாக நேர்கோட்டில் கதை செல்கிறது. ஆசிரியர் நல்ல கதைசொல்லி. இரண்டாவது, யாழ்ப்பாணத்து மொழிநடை. அதனால் நாவல் எந்தவகையிலும் எமக்குச் சிரமம் தரவில்லை. மண்வாசைனயை ஒட்டிய உரையாடல்களும் சொற்களும், சொல்லாடல்களும், பின்னணியும், காட்சிகளும் கதையை ஓட்டிச் செல்வதனால் கதைக்கு ஒரு உண்மைத்தன்மை உள்ளது. அதனால் இப்படியும் நடக்குமா என்ற ஆதங்கமோ வியப்போ படத் தேவை வரவில்லை. புயலில் அகப்பட்ட படகொன்றில் சென்ற மீனவர்கள் தாய்லாந்தில் அடைந்து திரும்பிய கதை ஒன்றும் யாழ்ப்பாணத்தவருக்குத் தெரிந்ததே. எனவே, அதுவும் சாகசக் கதையின் அம்சமல்ல. மூன்றாவதாக, சோக உணர்ச்சிகள், இரக்கம், குடும்ப உறவு, அன்பு, பாசம், பொறுப்புணர்வு ஆகிய அறங்கள் எல்லாம் மீறப்படாமலே அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அவை வாசகர்களை உருக வைத்து நாவலை விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. நாலாவது, மீனவர்களின் வாழ்வியல், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், தொழில் நடவடிக்கைககள், தொழில் நுட்பங்கள், போன்றவை அனைத்துமே நுட்பமாக அவதானிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ஐந்தாவது, யாழ்ப்பாணக் கிராமங்களினதும், குறிப்பாகப் புங்குடுதீவுக் கிராமத்தினதும் புவியியல் அமைப்பும் இடங்களும் நுட்பமாக அவதானிக்கப்பட்டுள்ளன. வாடைக்காற்று, கச்சான் காற்று, சோளகக் காற்று முதலியவைகள் அவற்றின் திசைகள், போக்குகள், காலங்கள், படும் மீன்கள், வலைகள், படகுகள் எல்லாம் முறையாகக் கவனிக்கப்பட்டு பொருத்தமாக எழுதப்பட்டுள்ளன. இவ்வகைகளில் வாசக ருசிகள் கவனிக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த நாவல் வெற்றியே.

அவற்றை விட, தமிழிலக்கியத்தில் இந்த நாவலின் இடம் எது அல்லது ஈழத்திலக்கிய வரலாற்றில் இந்த நாவலின் இடம் எது என்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிக் கணிப்பீடு செய்ய நவீன நாவலுக்குரிய சில அம்சங்களை இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

எந்த இலக்கியப் படைப்புமே இலக்கிய வரலாற்றில் எக்கால கட்டத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாவலின் காலமும் களமும் யாழ்ப்பாணத்தில் 1980 களுக்கு முன்னர் நடந்தவை என்று அனுமானிக்கலாம். ஏனென்றால், அதன் பிறகு ஒரு யுகப்புரட்சியே நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த நாவல் யாழ்ப்பாணக் கிராமங்கள் இயல்வு நிலையில் இருந்த காலத்தில் நடைபெற்றுள்ளன. இப்பொழுதோ 1980 களுக்குப் பிறகோ இருந்த அரசியல் சூழலோ, சமூகச் சூழலோ அங்கிருக்கவில்லை. 30 வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த காலமும் களமுமே இந்தக் கதைக்கானவை. அதுதான் வன்முறை அரசியல், இயக்கக் கெடுபிடிகள்;, யுத்தங்கள், இடப்பெயர்வுகள் முதலியன நடைபெறாத காலம்.

எந்த நாவலும் ஒரு அரசியல் சூனியப் பிரதேசத்தில் நடைபெறாது. அது சாடைமாடையாகக் கூட இந்த நாவலில் கோடிகாட்டப்படவில்லை. ஆனால் இந்த நாவல் பிரசுரமாகியதை வைத்து -இது 2009 இல் தான் வெளிவந்தது- இந்த நாவலின் இலக்கிய வரலாற்றுக் காலப் புள்ளியை குறிப்பிட முடியாது. ஆகவே, இந்த நாவலை நாம் ஒரு முப்பது வருடங்கள் முன் தள்ளி வைத்தால் அக்காலத்தில் இலங்கையில் வெளிவந்த நாவல்களுடன் இதை ஒப்பீடு செய்யலாம். அதுவே இந்நாவலின் இருப்பையும் தரத்தையும் நியாயப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய அளவீடுகள். இன்றைய நவீன, அல்லது பின் நவீன நாவல்களுடன் ஒப்பிடுவது முறையல்ல. இந்நாவல் எழுதப்பட்ட அக்காலத்தில் தான் முற்போக்கு நாவல்களும், செங்கையாழியானின் வாடைக்காற்று, பாலமனோகரனின் நிலக்கிளி போன்ற நாவல்களும் வெளி வந்திருந்தன.

அத்துடன் 70-80 காலத்தில் மீனவர் வாழ்க்கையை வைத்து சில நாடகங்களும் சினிமாவும் வெளிவந்துள்ளன. மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம். அதே காலத்தில் ஐரி~; நாடகாசிரியரான ஜே.எம். சிஞ்( John Millington Sunge) எழுதிய கடலோடிகள் (Riders to tha Sea)என்ற கடல் சார்ந்த நாடகம் ஒன்றை ஆங்கில விரிவுரையாளர் கந்தையா மேடையேற்றினார். தகழியின் செம்மீன் நாவல் சினிமாவாக்கப்பட்டு மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது. அந்நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தும் இருந்தார். அதைப் பரவலாகப் பலரும் வாசித்தும் இருந்தனர்.

செம்மீன் சினிமாவில் (நாவலிலும்) கறுத்தம்மா கணவன் பழனி கடலுக்குப் போயிருந்தபோது பழைய காதலன் பரிக்குட்டி சோகமாகப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு, காதலைத் துறக்க முடியாமல் அவனுடன் மீண்டும் தொடர்பு வைப்பாள். அதேபோல இந்த நாவலிலும் அந்தோனி கடலுக்குப் போயிருந்தபோது சில்வியா தன் காதலனுடன் போய் வருவாள். செம்மீனிலும் கடலன்னை அதைப் பொறுக்காமல் கணவனை தனக்குள் இழுத்துக் கொள்வாள். இங்கும் அந்தோனி சென்ற படகு புயலில் மாட்டிக் கொண்டு அவனும் காணாமல் போய் விடுவான். அந்த ஐதீகம் தெரிந்தோ தெரியாமலே இந்த நாவலாசிரியரையும் பாதித்திருக்கிறது.

இந்த நாவல் நேரடியான கதை சொல்லல் முறையில், யதார்த்தப் பண்பில் சொல்லப்பட்டுள்ளது. சிலவேளை யதார்த்த வாதப் பண்புக்கும் இயற்பண்பு வாதத்திற்கும் இடையே இந்நாவல் ஊடாடுகிறது. அதாவது, யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பது, மற்றது இயற்கையை அப்படியே படம்பிடிப்பது. நவீன நாவல்கள் வளர்ச்சியடைந்து பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டு, நவீன, பின் நவீனப் புனைவுகளாக வளர்ந்தும் விட்டன. பல அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை வாசகர்களே அவிழ்க்க விட்டு ஆசிரியர் மறைந்தும் நிற்கிறார். வாசக வெளிக்கும் மௌனத்துக்கும் கற்பனைக்கும் இடம் விட்டு விடுகிறார்;. இந்த நாவலின் ஆசிரியர் வாசகனுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமலே அவரே அனைத்தையும் சொல்லி விடுகிறார். உதாரணமாக, சில்வியா ஏன் மைனரை நாடிப் போனாள் என்பதற்கு அந்தோனி தன் பழைய காதலியை நினைத்துக் கொண்டிருப்பதால் தன்னைத் தொடுவதே இல்லை, அதனால் தான் வேறோருவனிடன் போக வேண்டி வந்தது என்கிறாள். இதை வாசகனே உய்த்துணர வைத்திருக்க வேண்டியது நாவலாசிரியனின் வேலை. விளக்கம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் மூலமாகக் கூட.

நாவலாசிரியர் ஒரு மேடை நாடக நடிகர். வானொலி நாடக நடிகர். அருமையான குணசித்திர நடிகர். அவை 50-60 தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கூடிய பண்பு. ஒரு மெலோடிராமாவுக்குரிய –மிகையுணர்ச்சிக்குரிய-பல அம்சங்கள் இதிலுள்ளன. குறிப்பாக, அந்தோனியின் பாத்திரம். இந்த நாவல் தமிழ் சினிமாக் கதையின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டதாக உள்ளது. முக்கியமாக, சில்வியா என்ற பாத்திரம் சினிமாவில் வரும் அச்சொட்டான வில்லியாகவே உள்ளாள். மற்றப் பாத்திரங்கள் பலவும் அப்படியே உள்ளன. அந்தோனி, அவனுடைய தமையன், தங்கை எலிசபெத். கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் அடங்கிய தமிழ் சினிமா உலகம்.

நாவலில் இரண்டு பகுதி மீனவர்களும் கத்தோலிக்க சமயத்தவர்கள். அது ஓர் ஒற்றுமை. அதனால் அவர்களிடையே வேறு வேற்றுமைகள் இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புங்குடுதீவு மீனவர்கள் வேர்க்குத்திப் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இரு சமூகங்களிடையேயும் பெண்கள் ‘கொள்வனவு கொடுப்பனவு’ இருக்குமோ என்று எனக்குத் தெரியாது. அதுவும் திருமண பந்தம் செய்யும் அளவுக்கு. வேர்க்குத்திப் பறையர் மீன் தொழில் செய்வதை மறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் போர்த்துக்கீசர் காலத்திலேயே கத்தோலிக்கராகி விட்ட ஊர் மக்கள். நாவலாசிரியர் கூறுவதுபோல அவர்கள் அங்கு தங்கி விட்ட மீனவர்கள் அல்ல. டச்சுக்காரர் காலத்தில் அவர்களில் பெரும்பான்மையினர் புடவைக்குச் சாயம் போட்டனர். அதனால் அவர்கள் வேர்க்குத்திப் -வேல்குத்திப்-பறையர் என்று அழைக்கப்பட்டனர். பின்னாளில் அத்தொழில் மறையவே அவர்கள் பல தொழில்களையும் செய்தனர். வலை போட்டு மீனும் பிடித்தனர். கட்டிட வேலை செய்தனர். ஓலை வெட்டினர். தோட்டத்தில் உதவியாளராக இருந்தனர். திருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தனர். இளம் பரம்பரையினர் படித்து அரச உத்தியோகம் பார்த்தனர். ஆனால் தோணி வைத்து மீன் பிடித்த இன்னொரு சமூகம் புங்குடுதீவில் இருந்தது. அவர்கள் திமிலர். அவர்கள் சைவ சமயத்தவர்கள். இவற்றைக் குறிப்பிட வேண்டி வந்ததற்குக் காரணம், சமூகக் கட்டமைப்பில் இன்னும் யாழ்ப்பாணம் சாதி அடுக்குச் சமூகமே. ஊர் விட்டு ஊர் போனாலும் -அதாவது மான்பாய்ஞ்சவெளியிலிருந்து புங்குடுதீவுக்குப் போனாலும் சரி, நெல்லியடிக்குப் போனாலும் சரி, தேசம் விட்டு தேசம் சென்றாலும் சரி, சாதியம் தீய ஆவியைப் போலத் தொடர்ந்து கொண்டு தான் போயிருக்கிறது, போய்க் கொண்டிருக்கிறது.

தூய சவேரியார் வந்து மதம் மாற்றினால் போல அது மறைந்து விடவில்லை. அதுவும் 80 களுக்கு முதல்.

இறுதியாக, ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்பது அருமையான உருவகம்.

Wednesday, October 20, 2010

காலச்சுவடு இதழில் எனது நாவல் விமர்சனம்



இம்மாத காலச்சுவடு இதழில் (ஒக்டோபர் 2010) எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது. பிரபல் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான பி.விக்னேஸ்வரன் மதிப்புரையை எழுதியிருக்கிறார்.எனது நாவலுக்கு கிடைத்த ஏழாவது விமர்சனத்தை பிரசுரித்த "காலச்சுவடு" நிர்வாகத்திற்கும், நிர்வாக ஆசிரியர் கண்ணன், பொறுப்பாசிரியர் தேவி பாரதிக்கும் என் நன்றி.

" 1970ஆம் ஆண்டு கே.எஸ்.பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன்மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச்சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷpக்கக்கூடியவர் பாலச்சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள் 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' நாவலின் முகவுரையில் விபரித்திருக்கிறார்.

பாலச்சந்திரனின் பன்முக ஆற்றல்பற்றி அறிந்திருக்கும் எனக்கு அவரது மிகப்பிந்திய ஒரு வெளிப்பாடான நாவலாசிரியர் முகம் மிகுந்த வியப்பை அளிக்கிறது. இவர் இந்த ஆற்றலை முன்பே வெளிக்காட்டியிருந்தால் எழுத்துலகிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்திருப்பார். ஒருவேளை அவரது நீண்டகால பல்துறை அனுபவங்கள்தான் இப்படி யொரு ஆற்றலாக வெளிப்படுகிறதுபோலும் என்றும் கருதுகிறேன்.|


தொடர்ச்சியை காலச்சுவடு இணையப்பக்கத்தில் இங்கே பார்க்கலாம்.

சிலிர்க்கவைக்கும் மைதிலியின் ஆங்கிலக்கவிதைகள்

"நான் விரும்பித்தேடிய வாழ்வு இதுவல்ல..
நான் பாட நினத்த பாடல் இதுவல்ல..
நான் நடக்கவேண்டிய பாதை இதுவல்ல..
நான் காணவேண்டிய கனவு இதுவல்ல.
நான் செய்யவேண்டிய புன்னகையும் இதுவல்ல..
நான் இருக்கவேண்டிய இடமும் இதுவல்ல..

ஆனாலும் நான் வாழ்கிறேன் இந்தப்பாதையில் பாடிக்கொண்டே நடக்கிறேன்
நான் எங்கிருந்தாலும் கனவு கண்டு புன்னகைக்கிறேன்
என்னுடையது இந்த வாழ்வுதான்..அதுவே எனக்குள்ளதென்று தெரியும்
என் வாழ்வைநோக்கி, என் கனவை நோக்கி நான் பாடுகிறேன்"

This ain't-the morn that should dawn என்று ஆரம்பிக்கும் இந்தக் கவிதையின் தலைப்பே தனித்தன்மையுடன் தொனிக்கிறது.

இதுவல்ல- வாழ்க்கைக்கான பாடல்(This ain't - a song for life)

வாழ்க்கைக்கான இந்தப்பாடலையே இதுவல்ல வாழ்க்கைக்கான பாடல் என்றும் எதிர்மறையாக அர்த்தப்படுத்தியும் கொள்ளலாமல்லவா?

வாழ்வில் எங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேறாமல் போனாலும் எங்கள் வாழ்வு தொடரத்தான் செய்யும்- கிடைத்த அதே பாதையில்..

ஆங்கிலத்தில் நெஞ்சத்தை சிலிர்க்கவைக்கும் கவிதை..

மைதிலி மெளலியின் இந்தப்பக்கத்தில்..

Friday, October 15, 2010

அமர்க்களமான திருமண அழைப்பு..

குப்பைத்தொட்டியில் நான் பார்த்து ரசித்த இந்த அட்டகாசமான திருமண அழைப்பை பார்த்ததும் உங்களுக்கும் காண்பிக்கவெண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.

என்ன யோசிக்கிறீர்கள்? இந்த ஆள் குப்பைதொட்டியில் ரகசியமாக கைவிட்டு தேடுகிற ஆளா..என்று தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முதல் சொல்லுகிறேன்..

இணயத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் எடுத்தது..இது



இந்த அழைப்பிதழைப் பார்த்ததும், எனது மகள் உமாவின் முதலாவது பிறந்தநாளுக்கு நான் எழுதி அச்சிட்டுக் கொடுத்த அழைப்பிதழின் நினைவு வருகிறது. மகளே அழைப்பதாக மழலைத் தமிழில் எழுதியிருந்தேன். நண்பர்கள்,உறவினர் மத்தியில் அதற்கு ஒரு தனி வரவேற்பு. பலபேர் அதேமாதிரி செய்தார்கள். எப்போது என்கிறீர்களா..1977ல். (உமாவுக்கு 5 வயதில் ஒருமகன் இப்போது இருக்கிறான்)

குப்பைதொட்டியில் பலதும் பத்துமாக சுவையாக இருக்கிறது. ருசிகரமான சொந்த அனுபவங்களையும், குட்டிக்கதைகளையும்..சினிமாவிமர்சனங்களையும் வாசிக்கலாம்.ரசித்தேன்..நீங்களும் போய் ரசிக்கலாமே..

http://nanaadhavan.blogspot.com/2009_11_01_archive.html

Tuesday, October 12, 2010

சிங்கை வாழ் தமிழ் நெஞ்சங்களே..

சிங்கப்பூர் தேசிய் நூலகம் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலை தனது கிளைகளில் இடம் பெறச்செய்திருக்கும் சந்தோசமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு இலங்கை எழுத்தாளனின் படைப்புக்கு அவர்கள் காட்டியிருக்கும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி.

பின்வரும் நூலககிளைகளில் எனது நாவலை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.

1 Ang Mo Kio Public Library Adult Lending Tamil
2 Bedok Public Library Adult Lending Tamil BAL On Loan 02/10/2010
3 Bukit Merah Public Library Adult Lending Tamil
4 Choa Chu Kang Public Library Adult Lending Tamil
5 Geylang East Public Library Adult Lending Tamil
6 Jurong Regional Library Adult Lending Tamil
7 Marine Parade Public Library Adult Lending Tamil
8 Sembawang Public Library Adult Lending Tamil
9 Woodlands Regional Library Adult Lending Tamil

Thursday, October 7, 2010

இணையத்தில் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்


இணையத்தில் எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்கள்" பற்றிய கருத்துக்களை பின்வரும் தளங்களில் பதிவு செய்த கானாபிரபா,சயந்தன், கரவைக்குரல், தமிழ்கலைஞன், குரு அரவிந்தன், அகில், வல்வை சாகரா ஆகியோருக்கு நன்றி.

மடத்து வாசல் பிள்ளையாரடி இணையத்தளம்

சாரல் இணையத்தளம்

கரவையின் குரல்

கரும்பு வலைப்பூ

தமிழமுதம்

தமிழ் படைப்பாளிகள் தளம்

திண்ணை

Friday, October 1, 2010

"தூறல்" பெருக்கின்றது....


"தூறல்" பெருத்தால் அது மழைதான்..!

கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது.

இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான்.

அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது.

இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி என்று அறியப்பட்டவர்கள் யாவரும் எழுதுகிறார்கள்.

முதலாவது இதழில் இருந்து "என் மனவானில்" என்ற எனது நினைவுத்தொடர் கட்டுரை வருவது தனிச்சந்தோசம்.

"தூறல்" சஞ்சிகைக்கு பொறுப்பானவர்களின் கைகளைப் பற்றி உற்சாகமாக குலுக்க விருப்பமாகவிருக்கிறது. விளம்பரதாரர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தால் "தூறல்" பெருமழையாகி, எங்களை ஆனந்தம் கொள்ளவைக்கும்..

பிரதம ஆசிரியரான ராஜ்மோஹன் செல்லையாவுக்கு ஒரு பூங்கொத்து. பிடியுங்கள்.

Wednesday, September 15, 2010

வாடைக்காற்று திரைப்படத்தை தேடிய கதை





அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார்.

இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.

சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா?

செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எடுக்கப்பட்டு இலங்கையின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் திரையிடப்பட்டு, தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய ஊர்களிலும் காண்பிக்கப்பட்டு, ஓய்ந்துவிட்டகாலம்.

1978ல் வெளிவந்த சிறந்த தமிழ்ப்படம் என்ற இலங்கை ஜனாதிபதிவிருது வாடைக்காற்றுக்கு கிடைத்தது. அத்துடன் சிறந்த துணைநடிகர்விருது, இதில் நடித்த எஸ்.ஜேசுரத்தினத்துக்கு கிடைத்தது. அத்தோடு திரைப்படத்தில் முதலீடு செய்த பெனின்சுலா கிளாஸ்வேக்கஸ் மகேந்திரன், சீமாஸ் ரெக்ஸரைல்ஸ் குணரத்தினம் இருவரும், தயாரிப்பளராக செயற்பட்ட சிவதாசனும் 'வாடைக்காற்றை' முற்றாக மறந்துவிட்டார்கள்.

1983ம் ஆண்டில்; தமிழர்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபொழுது, தமிழர்களின் வர்த்தகஸ்தாபனங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஹெந்தளையில் இருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோ' வும் அடங்கும். இங்குதான் ஏராளமான சிங்கள,தமிழ்ப் படங்களின் 'நெகட்டிவ்'கள் வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரூடியோ எரிந்து சாம்பலாகியது.

வாடைக்காற்று நாவலை வாசித்தகாலத்தில் இருந்தே, அதன் மீது மையல்கொண்டு, அதிஷ;டவசமாக அது திரைப்படமாகியபொழுது, எனக்கு மிகவும் பிடித்த 'விருத்தாசலம்' என்ற காட்டுவாசியான இளைஞன் பாத்திரத்தில் நான் நடிக்கக்கிடைத்ததும், விமர்சனங்களில் மிகுந்த பாராட்டுக்களைப்பெற்றதும் ஒரு சந்தோசமான அனுபவம். கூடவே அதன் உதவி இயக்குனர் என்ற ரீதியில் அதன் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தியவன் என்ற வகையிலே என்னால் 'வாடைக்காற்றை' மறக்கமுடியவில்லை.

கலவரங்கள் ஓய்ந்தபின் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு போனேன். தமிழோ, சிங்களமோ திரையிடப்படுவதற்கு திரைப்படப் பிரதிகளை அவர்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும். அவர்கள்தான் பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள். ஓடிமுடித்தபின் பிரதிகள் அவர்களிடம்தான் வந்துசேரும். எனவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டுபிரதிகளில் இரண்டொன்றாவது இருக்காதா என்ற நம்பிக்கையுடன் போனேன். அங்கு எனக்கு கிடைத்த பதில்தான் விசித்திரமானது. ஒருபிரதியும் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். எனக்கு சரியான ஆத்திரம்.

அக்காலத்தில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தலைவராக பணியாற்றிய எல்.பியசேனா எனக்கு அறிமுகமானவர். உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். நேரே அவரிடம் சென்று முறையிட்டேன். 'ஜனாதிபதி விருது' பெற்ற ஒரு சிறந்த தமிழ்ப்படத்தின் ஒரு பிரதியைக்கூட சேமிப்பில் வைக்கமுடியாமல் போனதென்ன' என்று கேட்டேன். அவர் எனக்கு எப்படியாவது ஒரு பிரதியை தேடிக்கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.

திரைப்படக்கூட்டுத்தாபன சிற்றூழியர் ஒருவர் ரகசியமாக ஒரு தகவலைத்தெரிவித்தார். திரைப்படசுருள்களின் ஓரத்திலே இருக்கும் வெள்ளிக்காக தயாரிப்பாளர்கள் கைவிட்ட திரைப்படங்களை நிறைக்கணக்கில் அங்குள்ளவர்கள் விற்றுவிட்டு 'அழிக்கப்பட்டது' என்று கணக்கை முடித்துவிடுவார்களாம். 'முக்கியமாக இலங்கையில்தயாரான தமிழ்ப்படங்களுக்கு இப்படி நடக்கிறது. அவற்றின் தயாரிப்பாளர்களும் அக்கறை எடுப்பதில்லை. அது இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. நீங்கள் விடாதீர்கள்' என்று சொல்லிமுடித்தார்.

நான் விடவில்லை. அடிக்கடிபோனேன். கடைசியில் ஒரு தகவல் கிடைத்தது. 83ல் எரிந்து கொண்டிருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோவில்' இருந்த சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் 'நெகட்டிவ்'களை காப்பாற்றும் முயற்சியில், எரிந்தது பாதி, எரியாதது பாதியாக இருந்த எல்லாவற்றையும், தூக்கி ஏற்றிக்கொண்டு போய், களனியாவில் இருக்கும் அரசாங்க ஸ்ரூடியோவான 'சரசவிய'வில் குவித்து வைத்திருக்கிறார்கள். உம்மால் முடியமென்றால் அங்கேபோய் தேடி, உமது படத்தின் நெகட்டிவ் இருந்தால் திரைப்படக்கூட்டுத்தாபனமே ஒரு பிரதி எடுத்துத்தரும் என்று உறுதியளித்தார்கள்.

;சரசவிய' ஸரூடியோவிற்கு யாரை துணைக்கு கூட்டிக்கொண்டு போவதென்று யோசித்தேன். அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தவர், சிங்களத்திரைப்டங்களில் வில்லன்பாத்திரங்களில் நடிக்கும் றொபின் பெர்னாண்டோ என்ற நண்பர். நாங்கள் இரண்டுபேரும் சமகாலத்தில் தயாரான 'நாடு போற்ற வாழ்க' 'அஞ்சானா' திரைப்படங்களில் நடித்திருக்கிறோம். அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

'சரசவிய'வில் ஒரு பெரிய அறையை திறந்து காட்டினார்கள். குவியலாக திரைப்படச்சுருள்கள், தகரங்களில் அடைக்கப்பட்டும் வெளியேயுமாக கிடந்தன. போதாக்குறைக்கு உருகிபபோய் பழுதான திரைப்படச்சுருள்களின் 'நெடி' தாங்கமுடியாமல் இருந்தது. மூக்கின்மேல் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, நானும், றொபினும், இன்னுமொரு சிற்றூழியருமாக தேடினோம்.

ஒவ்வொன்றாக 'வாடைக்காற்று' திரைப்படத்தின் நெகட்டிவ்கள் தகரஉறையுடன் எங்கள் கைக்கு வந்தன. ஏறக்குறைய 16 நெகட்டிவ் சுருள்கள். சந்தோசம் எங்கள் மனதில் பொங்கிவழிந்தது. தொடர்ந்து தேடியதில், சினிமாஸ் ஸ்ரூடியோவில் மேலதிகமாக செய்வித்த ஒரு பிரதியின் அத்தனை சுருள்களும் அகப்பட்டன.

நண்பர் றொபின் பெர்னான்டோ, பிரதியையும், நெகட்டிவ் சுருள்களையும் கொண்டுவந்து நான் அப்போது தங்கியிருந்த வை.எம்.சி.ஏ விடுதியில் இறக்கிவிட்டுப்போனார். எனது அபிமானத்திரைப்படம் இப்படியாக எனது கைக்கு வந்தது.

Tuesday, September 7, 2010

குரு அரவிந்தனின் "புதிய பக்கம்"



"புதிய பக்கம்" என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் இணயத்திற்கும் தனது புதிய பக்கத்திற்கு வந்திருக்கிறார்.

குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர்.

தாங்கள் எழுதியா "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை.. அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி..

ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


ஒரு பக்கக்கதை, இரண்டு ப்க்கக்கதை போடுவதற்கே (இடம் இன்மையால்) சிரமப்படும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகையில் இவர் எழுதியா முழு நீள நாவலே ("நீர் மூழ்கி..நீரில் மூழ்கி"), ஒரே இதழில், புகழ்பெற்ற ஓவியர்கள் நாலைந்து பேரின் சித்திரங்களுடன் வெளியானது நம்மவரில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் தென்னிந்தய வாசகர்கள் பல ஆயிரம் பேருக்குத் தெரியும்

ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் எழுதினால் தாழ்வான காரியமா?. ஜெயகாந்தன், ஜெயந்தன், கல்கி, சாண்டில்யன், அகிலன் எல்லோரும் இந்தப்பத்திரிகைகளில் எழுதித்தானே வாசகர்களிடம் அபிமானம் பெற்றார்கள்.

நாலே நாலு இதழ்கள் வெளிவந்து சொல்லாமல் கொள்ளாமல் நின்று போய்விடும் "இலக்கியச் சிற்றிதழ்களில்" எழுதினால் தான் எழுத்தா? எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது?

அண்மையில் ஒரு கலை இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கையின் ஒரு பிரபல கவிஞ்ர் தனது கவிதையை யாராவது " என்னய்யா.. உங்கள் கவிதை ஒன்றுமே புரியவிலையே" என்றவுடன்,ஒரு மமதை சிரிப்பு சிரிப்பாராம், "அப்படித்தான்.. என் கவிதை உங்களுக்கு எல்லாம் புரியாது" என்பதுபோல..
அவர் யாருக்காக எழுதுகிறார் எனபது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

குரு அரவிந்தனின் இணயப் பக்கம் அவரது வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள் உடன் இணையத்திற்காகவே எழுதப்பட்ட படைப்புகளுடன் சிறப்பாக இருக்கின்றது. தொடர்ந்து இணையத்திலும் நிறைய எழுதுங்கள் குரு.

Wednesday, September 1, 2010

சாயாவனம் - நாவல் மீள்வாசிப்பு


சாயாவனம் ஒருநாளில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய நாவல்தான். 200க்கு குறைந்தபக்கங்கள்தான். ஆனால் அதை வாசித்து முடிந்தபின் நாவலாசிரியர் பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதைப் போல, "வாசித்தவர் மனதில் இன்னுமொரு நாவல் ஆரம்பிக்கிறது"

நாவலின் கதாநாயகன் காடுதான். அதனோடு அதை அழிக்கப்புறப்படும் மனிதனின் இடையறாப் போராட்டமே கதை. இதேபோலத்தான் ஏர்னேஸ்ட் ஹேமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் கிழவனுக்கு பெரிய மீனுடன் கடலுக்குள் நடைபெறும் போராட்டமும். நீயாநானா என்ற நிலை இறுதிவரை தொடர்கிறது.

இந்த இரண்டு சிறந்த நாவல்களுக்கிடயில் சுவையான ஒற்றுமைகள் இருப்பதை அவதானித்தேன். "கடலும் கிழவனும் (The Oldman and the Sea)" நாவல்கூட127 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். சா.கந்தசாமியின் முதல் நாவல் "சாயாவனம்". இதற்காக அவருக்கு சாஹித்ய விருது கிடைத்தது. ஹேமிங்வே எழுதி வெளியிட்ட கடைசி நாவலும், புகழ் ஏணியில் ஏற்றிய நாவலும் -"கடலும் கிழவனும்' தான். இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஹேமிங்வேயின் நாவலில் சான்ரியாகோ என்ற மீனவக்கிழவன் 84 நாட்களாக பெரிய மீன் எதுவும் அகப்படாமல், துணைக்கு வருபவர்களும் கைவிட்டுவிட 85வது நாள், சாதிக்கவேண்டும் என்ற வன்மத்துடன் கடலில் இறங்குகிறான். பிரம்மாண்டமான மீன் ஒன்று அவனது தூண்டிலில் சிக்குகிறது..பிறகென்ன..போராட்டந்தான். இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் இப்படியே கரைகின்றன. தன்னோடு மூர்க்கமாக போராடும் அந்த ராட்சச மீன்மீது கிழவனுக்கு இனம்புரியாத மதிப்பே உருவாகுகின்றது.இதேபோல "சாயாவனத்தில்"தன்முன்னே பரந்துநிற்கும் காட்டைப் பார்த்து சிதம்பரம் பிரமித்து, மதிப்பே கொள்கிறான்.

மீனை இறுதியில் கொன்றுவிட்டாலும், பெரும் சுறாக்கள் அதன் இறைச்சியை கைப்பற்றிக்கொள்ள மீனின் வெறும் எலும்புக்கூட்டுடன் கிழவன் கரைக்கு வருகிறான்.
சாயாவனத்தில் காட்டின் ஒருபகுதியை அழித்து ஆலை போடுவதுதான் சிதம்பரத்தின் நோக்கமாக இருந்த்தது. ஆனால் அவன் இட்ட தீ, அவன் கட்டிய வீடு உட்பட எல்லாவற்ரையுமே பொசுக்கிவிடுகிறது. இயற்கையின் ஒரு கூறு அவனை தோற்கடித்து விடுகிறது.

சாயாவனத்தில் சிதம்பரத்துக்கு துணையாகவரும் சிறுவன் கலியபெருமாளைப் போலவே, கடலும் கிழவனும் நாவலில் கிழவனுக்கு துணையாக ஒரு சிறுவன் வருகிறான். அவனது பெயர் மனோலின் (Manolin).

சா.கந்தசாமியின் இந்த நாவலை மீண்டுமொருமுறை வாசித்தபொழுது ஒரேமூச்சில் வாசித்து முடிக்கும் ஆவலைத் தந்தது, மனிதரின் காலடிகள் பட்டிராத பகுதிகளுடன் தன்னிச்சையாக ஓங்கி வளர்ந்தமரங்களுடன்,செடி கொடிகளுடன், மூங்கில் காடுகளுடன், ஜீவராசிகளுடன் அந்த காட்டை அவர் அறிமுகம் செய்து வைத்த பாங்கு. அந்தமரங்களின் தனித்தன்மைகள், அந்த ஊர்மக்களுக்கு அந்தகாடு வழங்கிய வளங்கள், மிருகங்கள், பறவைகள்,காட்டில் தனிக்காட்டு ராஜவாக வாழ்ந்த முரட்டு குழுமாடு எல்லாமே மனிதன் மூட்டிய தீயினால் கருகிப்போன சோகம்.

புளியைதரும் மரங்களை அழித்து இனிப்பான வெல்லம் தரும் ஆலையை சிதம்பரம் நிறுவினாலும், புளிப்புக்கு பதிலாக இனிப்பு தரமுற்படும் அவனை ஒரு மூதாட்டி கோபிப்பதோடு நாவல் முடிவது ஒரு முரண்நகை.

1965ல் எழுதப்பட்ட இந்த நாவலில் பல ஆண்டுகளுக்கு முந்திய நமக்கு பழக்கமில்லாத ஒரு பண்டமாற்று சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையை காண்கிறோம். தஞ்சை மாவட்டத்தின் பின்னணியில்,காவிரியின் கரையில் நிகழும் கதை. சிதம்பரம்,சிவனாண்டிதேவர், பாப்பா, பஞ்சவர்ணம், குஞ்சம்மா, கலியபெருமாள் யாவருமே தெளிவான அடையாளங்களுடன் மனதில் பதிந்து போகிறார்கள். இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த அவர்களை நினைக்க பொறாமையாக இருக்கிறது.

சாயாவனம் என்மனதில் சாயாமல் நிமிர்ந்தே நிற்கிறது. தமிழ் படைப்பிலக்கியத்தின் ஒரு 'Classic'தான்.

Sunday, July 25, 2010

தேரோட்டி மகனும் நானும்



எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது.

இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பி.எஸ்.ராமையா

இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன்.

சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டிமகன் நாடகத்தில் சகாதேவனாக சிறிய பாத்திரத்தில் நடித்த கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் இவ்வாறு தன் அனுபவத்தை கூறுகிறார்.

'1959-ல் பி.எஸ். ராமையா எழுதிய ''தேரோட்டி மகன் '' சேவாஸடேஜ் தயாரிப்பில் உள்ளூர் -வெளியூரெங்கும் பிரபலமாகி..கொடி கட்டிப் பறந்தது.. எஸ். வி. சகஸ்ரநாமம் கர்ணனாகவும் முத்துராமன் துரியோதனனாகவும் பாத்திரமேற்று சிறபபாக நடித்தார்கள்..நான் மூன்று .சீன்களில் ''தலை ' காட்டும் சகாதேவனாக நடித்தேன்..அதிர்ஷ;டவசமாக ஒரு அருமையான மருதகாசியின் பக்திப் பாடலை முதல் .சீனில் பாடி வாயசைத்து கிருஷ;ணனை கட்டிப் போடுவது என் பங்கு சாதனையாக வாய்த்தது. .கிருஷ;ணனை எஸ்.வி.கோபாலகிருஷ;ணனை கட்டிப் போட்டு திரை விழுந்து விளக்கணைந்ததும் கொட்டகையில் தவறாமல் கிளம்பும் பயங்கர கரகோஷ ஒலி.. என் நடிப்புத் திறமையில் அதிக நம்பிக்கையற்ற எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது... புராண நாடகங்கள் இந்த வகையில் நடிகனுக்கு ஒரு வசதியான வாய்ப்பு என்று தோன்றியது...சனங்கள் ஒரு ராமனையோ, கிருஷ;ணனையோ உடனே நம்பி விடுகிறார்கள்'

தேரோட்டிமகன் நாடகத்தை கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வௌ;வேறுபாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். அவருடன் அவரது நாடகக்குழுவைச்சார்ந்த ஏ.ரகுநாதன், குழந்தை சண்முகலிங்கம், எஸ்.ரி. அரசு ரி.ராஜகோபால் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

பின்னர் ஏ.ரகுநாதன் அவர்களே தேரோட்டிமகன் நாடகத்தை பலதடவைகள் மேடையேற்றினார். இவர் காலத்துக்கு காலம் இந்நாடகத்தில் பல சிறந்த கலைஞர்களை இணைத்துக்கொண்டார். இலங்கைவானொலியின் பிரபல அறிவிப்பாளர் திருமதி இராசேஸ்வரி சண்முகம் சிலமேடையேற்றங்களில் குந்தியாக நடித்து தன்சோகநடிப்பினால் பார்வையாளர்களை கண்ணீர் சிந்தவைத்த நினைவுகளை ரகுநாதன் அவர்கள் என்னோடு பங்கிட்டுக்கொண்டிருக்கிறார். இன்னுமொரு மறக்கமுடியாத கலைஞர் ரி.ராஜேஸ்வரன். இந்hடகத்தில் கர்ணனுடைய மாமன்பாத்திரத்தில் நடிப்பதைப்பார்த்திருக்கிறேன். இவர் இலங்கையின் ஆரம்பகால திரைப்படங்களில ஒன்றான 'டாக்சி டிரைவர்' திரைப்படத்தின் கதாநாயகள்.

1974ம் ஆண்டில் மார்கழிமாதத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி;, கிளிநொச்சி அரசினர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் ஆகிய அரங்குகளில் மூன்றுநாட்கள் அடுத்தடுத்து தேரோட்டிமகன் அரங்கேறியபோது நானும் இணைந்துகொண்டேன். அனேகமாக நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை முதன்முதலாக ஒரு இதிகாசநாடகத்தில் அதுவும் கண்ணன் பாத்திரத்தில் நடிக்கவைத்தார் ரகுநாதன் அண்ணன்.

எனக்கு இது புது அனுபவமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தாலும், ஒப்பனை, ஆடை அலங்காரம், பேச்சு நடை, நடிப்புப்பாணி என்று பலவிதத்திலும் மாறுபட்ட இந்த நாடகத்தில் அதுவும் கிருஷ;ணன் பாத்திரத்தில்; நான் சோபிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கவே செய்தது. (ஆமாம்.. மயிலிறகும், வேய்ங்குழலுமாக நீலவண்ணனாக வரும் கண்ணன்தான்.)

இருந்தாலும் என்னால் முடியும் என்று நம்பிக்கையை தந்த ரகுநாதன் அதற்கான ஒரு சுவையான காரணத்தையும் சொன்னார். பொதுவாக இத்;தகைய கண்ணன், ராமன் போன்ற தெய்வப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சற்றுப் பெண்மைச்சாயல் உள்ளவர்களாக இருக்கவும் வேண்டும். ஏற்கெனவே நான் ஒரு நகைச்சுவை நாடகத்தில் (புளுகர் பொன்னையா) ஒரு காட்சியில் பெண்வேடத்தில் வந்து அசத்தியிருக்கிறேன் என்பதையும் ஞாபகப்படுத்தினார். அத்தோடு மீசை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டார்.

என்ன செய்வது.. கருகருவென்று வளர்ந்திருந்த எனது இளமைக்கால மீசையை தியாகம் பண்ணத்துணிந்து விட்டேன். ஆனாலும் அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதாவது ஒப்பனை செய்துகொள்வதற்கு சற்றுமுன்னதாகத்தான் மீசைக்கு விடைகொடுப்பேன் என்பதுதான் அது. இது ஒவ்வொரு முறை மேடையேற்றத்தின்போதும் நடந்தது. மீசை வளர்வதும், மறைவதுமாய் தொடர்ந்தது.

ஆந்த நாடகத்தில் என்னோடு நடித்தவர்களில் அனேகர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள். அத்தோடு அக்கால இசைநாடகங்களில் அனேகமாக பெண்வேடங்களில் ஆண்களே நடிப்பார்கள். அதேபோல எங்கள் நாடகத்திலும்; முக்கிய பெண் பாத்திரமான 'குந்தி' வேடத்தில் நடித்தவர் ஒரு ஆண்கலைஞர். (பிரான்சிஸ் ஜெனம்.(வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்தவர்) இதைவிட எங்களுக்கு ஒப்பனை செய்தவர் மிகநீண்டகாலமாக ஒப்பனைசெய்வதில் பிரக்யாதி பெற்றிருந்த சாமுவேல் பெஞ்சமின் என்பவர்.

அவர் ஒப்பனை செய்வதற்கு 'அரிதாரம்' என்ற சுண்ணாம்பு கலந்த பொருளையே (முத்துவெள்ளை என்பார்கள்) பாவித்தார். அதை பூசியபின் நேரம் செல்லச்செல்ல பூச்சு காய்ந்து கொண்டேபோகும், நாடி. நரம்புகளெல்லாம் பற்றி இழுப்பதுபோல, எனக்கு இருந்தது. தலைநகர் நாடகங்களில் எங்கள் ஒப்பனை என்பது மெல்லிய பூச்சுதானே.

பட்டுச்சேலையால் தார்ப்பாய்ச்சி உடுத்தி, கண்இமைக்கு கீழான சிறுபகுதி, உதடுகள், உள்ளங்கை, உள்ளங்கால் (இவற்றுக்கு சிவப்பு வர்ணமும்) இவை தவிர்ந்த, உடம்பின் மேற்பகுதி, கெண்டைக்கால் என்று முழுவதும் பச்சை வர்ணத்தால் பூசிவிட்டார்கள். நீலவண்ணன் அல்லவா.. எதற்கு பச்சை நிறம் என்று கேட்டதற்கு, நீலம் பூசினாhல் மின்சாரஒளியில் நிறபேதம் அடைந்து கறுப்பாகத்தெரியுமாம். ஆனால் பச்சை வர்ணம், அப்படி பேதமடையும்போது நீலவண்ணம் காட்டுமாம் என்றார்கள். அது உண்மையாகத்தான் இருந்தது. ஒப்பனை முடிந்தபின் ஏறக்குறைய பஞ்சவர்ணக்கிளி போல இருந்தேன்.

இத்தனையும் போதாதென்று கைகளில் அலங்காரப்பட்டிகள், கழுத்தில் மணிமாலைகளுடன், முழங்கால் வரை தொங்கும் பெரிய மலர்மாலை (நிஜமானதுதான்), கையில் நீண்ட புல்லாங்குழல் (சிறிதாக இருந்தால் ஏதோ குச்சி என்று நினைத்துவிடுவார்களே), கடைசி கடைசியாக மயிலிறகுகள் பொருந்திய கிரீடம் (மட்டையோ, தகரமோ) ஒன்றையும் தலையில் வைத்து விட்டார்கள். ஏதோ என் தலைக்கு அளவாக 'மெத்தென்று' சுகமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மகா. மகா, தவறு. ஆந்த முடி கழன்று விடாமல் இருப்பதற்காக அதில் பொருந்திய கம்பிகளை முறுக்கி இறுகக் கட்டிவிட்டார்கள். சிறிதுநேரத்தில் நெற்றி நரம்புகளெல்லாம் புடைத்து பெரிய தலைவலியே ஆரம்பித்து விட்டது. இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு விடியவிடிய நடைபெற்ற கூத்துகள், இசைநாடகங்கள் என்பனவற்றில் நடித்த எனக்கு முந்திய காலத்து நடிகர்களை ஒருமுறை நினைத்துக்கொண்டேன்.

ஓப்பனையெல்லாம் முடிந்து சககலைஞர்கள் முன்னால் போய் நின்றபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் எனது வேதனையை விரட்டியடித்தன. தென்னிந்திய சினிமாவில் நிரந்தர ராமராக, கிருஷ;ணனாக தோன்றிப் புகழ்பெற்ற என். ரி. ராமராவ், நரசிம்மபாரதி (1948ல் 'அபிமன்யு' படத்தில் கிருஷ்ணராக நடித்தவர். எம்.ஜீ.ஆர் தான் இதில் அருச்சுனன்) ஆகிய இரு நடிகர்களுக்குப் பிறகு, கிருஷணன் வேடம் எனக்கு பொருந்தி வந்திருக்கிறதென்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள். (ரகுநாதன் பத்திரிகைக் குறிப்பொன்றில் பின்னர் இதைக்குறிப்பிட்டிருந்தார்.)

யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி போன்ற இடங்களில் மேடையேறியபோது 'கிருஷ்ணனின் நிரந்தரப்புன்னகையை, உரையாடலை, கள்ளத்தனமான பார்வையை ரசிகர்கள் வரவேற்கவே செய்தார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம்.

தொடர்ந்து 1976ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றம். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த நாடகம் வந்திருக்கிறதென்பதினால் நல்ல கூட்டம். எனக்கு அறிமுகமான பல (கொழும்பு வாழ்) கலைஞர்கள் வந்திருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு நான் இந்த நாடகத்தில்; நடிக்கிறேன் என்று தெரியாது. போதும் போதாதற்கு மீசை இல்லாத முகம், பச்சை வர்ணப்பூச்சு. என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நாடகம் ஆரம்பித்தது. தொடக்கத்தில் இருந்தே நாடகம் பார்வையாளர்களுக்கு பிடித்துப்போயிருக்கவேண்டும். ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான கட்டம். கவிஞர் வைத்தீஸ்வரன் சொன்ன அதே கட்டந்தான். மகாபாரதப்போரை நடத்துவதா, இல்லையா என்பதுபற்றி கண்ணன் பாண்டவர்களின் அபிப்பிராயத்தை ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டுவருகிறார். மதியூகியான சகாதேவனிடம் கேட்டபொழுது, அவன் இப்படிச்சொல்கிறான்.

பாரதப்போர்வராமல் தடுப்பதற்கு உன்னைக் கட்டிப்போட்டால் சரியாகும் என்பதாக கிருஷ;ணனைப் (என்னைப்) பார்த்துச்சொல்கிறான்.

'கண்ணா.. உன்னை கட்டிப்போடுவேன்'

'சகாதேவா.. ஆகட்டும்.. அப்படிச்செய்.. பார்க்கலாம்'

'கண்ணா.. உன்னைவிட இலகுவாக வசப்படக்;கூடிய பொருள் சக்தி வேறு ஒன்றுமில்லை'

என்று சொல்லி சகாதேவன் முழங்காலில் நின்றவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்.

''நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்

பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி

மா பாரதம் அகற்ற மற்ற் ஆர் கொல் வல்லாரே''
– வில்லிபாரதப்பாடல் இது.

(இந்தப்பாடலை மேடையில் பாடியவர் அண்மையில் மறைந்த சிறந்ததொரு பாடகரான திலகநாயகம் போல். சகாதேவனாக நடித்தவர் ஹரிதாஸ். 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தில் நடித்தவர்.)

கிருஷ்ணன் அப்படியே கட்டுண்டு நின்று மந்தஹாசம் செய்கிறார். (மந்தஹாசம் என்ற புன்னகை எப்படி செய்யவேண்டுமென்று இயக்குனர் ரகுநாதன் எனக்கு தனிவகுப்பே நடத்தினார்), அந்தக்காட்சியின் தன்மை, ஒலிக்கும் இனிய பாடல் - நான் மெய்மறந்ததுமாதிரி புன்னகை தவள நிற்கிறேன். அரங்கில் உள்ளவரும் கிறங்கிப்போய் இருக்கிறார்கள்.

முன்வரிசையில் என் பார்வை ஓடுகிறது. கவிஞர் சில்லையூர் செல்வராசன் அருகில் அவரது இளம்மனைவி கமலினி செல்வராஜன். (கமலினி அக்காலத்தில் பிரபல வானொலித்தொடர் நாடகமான 'தணியாத தாக'த்தில் எனது தங்கை கமலியாக நடித்துக்கொண்டிருந்தவர்) என் மனதில் குறும்பான ஒரு எண்ணம் வந்தது.

அதே மந்தஹாசப்புன்னகையுடன் சபையை அரைவட்டத்தில் பார்வையிட்டு வரும்போது, கமலினியைத் தாண்டும்போது கண்களை சிமிட்டினேன். கமலினி திடுக்கிட்டுப்போய் தன் கணவரிடம் (சில்லையூராரிடம்) ஏதோ குனிந்து சொல்வது தெரிந்தது. யாரோ தெரியாதவன் இப்படிச்செய்கிறான் என்று அவர்களுக்கு கோபம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அதேமாதிரி அரைவட்டத்தில் முகம் திரும்பும்போது – அதே கண்சிமிட்டல். அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நாடகம் தொடர்கிறது.

கண்ணன் ஒன்று போல பல வடிவங்களைக் காட்டினான். ஆனாலும் பெரும் ஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தால் மூலவரை அடையாளம் கண்டு, அவரைத் தன் மனதினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

சகாதேவன் மனதின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன், 'கட்டுணடேன் சகாதேவா. உன் அன்புத்தளையில் கட்டுண்டேன். என்னை விட்டுவிடு' என்று கெஞ்சுகிறார்.

':நீங்கள் இப்படிச்செய்தால் விட்டுவிடுகிறேன்.' என்று நிபந்தனை விதிக்கிறான் சகாதேவன்.

'வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வையால் காக்கவேண்டும் நெடுமாலே'

கண்ணன் சொல்கிறார். ஓம்..

(என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு "ஓம்' என்று உரைத்தருளி..)

(இந்த இடத்தில் புலவர் கீரனின் 'வில்லிபாரத சொற்பொழிவு என் ஞாபகத்திற்கு வருகிறது. சகாதேவன் வேண்டுகோளுக்கு கண்ணன் சொன்ன பதில் ::ஓம்' என்றுதான் வில்லிபாரதத்தில் வருகிறது. கூடவே இலங்கைத்தமிழர்களாகிய நாங்கள் 'ஓம்' என்ற அந்தச்சொல்லையே பாவிக்கிறோம் என்று கூட்டிக்காட்டுகிறார்.)

நாடகம் முடிந்ததும், முடியாததுமாக சில்லையூரார் யாரிடமோ கேட்டு கண்ணனாக நடித்தது நான்தான் என்று அறிந்திருக்கிறார். இந்தச்சிக்கல் இப்படி சுமுகமாக முடிந்தாலும் வேறோரு சிக்கல் எனக்காக ஒரு ரசிகர் வடிவில் காத்திருந்தது.

அவர் ஒரு கிருஷ;ணபக்தராக இருக்கவேண்டும்.. 'பளிச்'சென்ற வெள்ளை உடுப்பு அணிந்திருந்தார். 'கண்ணா..உன்னைக் கட்டி அணைக்கப்போகிறேன்' என்று அடம் பிடித்துக்கொண்டு நின்றார். 'ஐயா. எனக்கு ஆட்சேபணை இல்லை.. ஆனால் .உங்கள் வெள்ளை உடுப்பெல்லாம் பச்சையாகி விடுமே' என்று நான் சொல்லித்தான் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கிருஷ்ணனை (என்னை) கட்டி அணைத்து விட்டு 'பச்சைமாமலைபோல் மேனி' யாளனாகச் சென்றார். அவரது வீட்டில் ;வரவேற்பு' எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நாடகத்தில் என்னுடன், பிரபல நாடகாசிரியர் குழந்தை சண்முகலிங்கம் (அருச்சுனன்), ஏ.பிரான்சிஸ் ஜெனம் (குந்தி), ரி.ராஜேஸ்வரன் (சார்த்தகேசி), சிவபாலன் (துரியோதனன்), ஹரிதாஸ் (சகாதேவன்) போன்றோர் அற்புதமாக நடித்தார்கள்.

என்கலைவாழ்வில், மறக்கமுடியாத திருப்பத்திற்கு காரணமானவரை எப்படி மறக்கமுடியும். 'தேரோட்டி மகனை'த்தான் சொல்கிறேன். தேரோட்டி மகனாக (கர்ணனாக) களகச்சிதமாக நடித்து, எங்களையும் இயக்கியவர்;, பவளவிழா நாயகன் ஏ.ரகுநாதன் அவர்கள்தான்.

"சுட்ட பழ்மும் சுடாத மண்ணும்' - ஏ.ரகுநாதன் பவள்விழா (ஜூலை 25, 2010)மலருக்காக எழுதியது)

Wednesday, June 30, 2010

கனடாவில் தமிழ்ப்பிரியாவின் நூல்கள் வெளியீடு


ஏழாலையில் பிறந்தவர். 20 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் சிந்தாமணி, குங்குமம், ஈழ்நாடு, சுடர் போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் சிறுகதைகளாக எழுதிக்குவித்தவர் . தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர். தமிழ்ப்பிரியா இளங்கோ.



சென்ற சனிக்கிழமை கனடாவில் இவரது "காம்பு ஒடிந்த மலர்", "ஒரு நியாயம் விழிக்கின்றது" என்ற இரண்டு சிர்றுகதைதொகுதிகள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதன், பி.விக்னேஸ்வரன், ஞானரட்னம், மீரா, கவிஞர் கந்தவனம். உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோருடன் நானும் சிறப்புரை வழங்கினேன்.

எனது பேச்சில் " யாழ்ப்பாணத்தில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் நான் பணியாற்றிய காலத்தில் அங்கு தொழில் நிமித்தம் வருகைதந்த முத்தையா என்ற பெரியவர் தனது மகள் ஒரு எழுத்தாளர் என்றும் அவர் 'குங்குமம்" இந்திய சஞ்சிகைக்காக என்னை பேட்டிகாண விரும்புவதாகவும் சொன்னார். அவரது மகள்தான் தமிழ்ப்பிரியா. அவர் நான் சம்மதிக்கவும் என்னுடன். செங்கை ஆழியான், மங்கையர்க்கரசி அமிதலிங்கம், சிரித்திரன் சிவஞானசுந்தரம் ஆகியோரையும் பேட்டிகண்டு "குங்குமம்" ஆண்டுமலரில் அவை பெளிவந்தன என்று கூறி, அவரது "கருவிகள்" என்ற சிறுகதை எனக்குப்பிடித்தது என்பதற்கான விளக்கத்தையும் கூறினேன்.

ஏழாலையில் பிறந்தவரான இலங்கையர்கோன் எழுதிய " வெள்ளிப்பாதசரம்' சிறுகதையை நயந்து, அவரது வானொலித்தொடர் நாடகமான "விதானையர் வீட்டில்' எனது வானொலிநாடகப் பிரவேசத்திற்கு காரண்மாக அமைந்த கதையையும், அதே ஊரில் பிறந்த கே.எம்.வாசகர் எவ்வாறு என்னைப்போன்றவர்களை வானொலி நடிகர்களாக புகழ்பெறவைத்தார் என்பதையும் கூறினேன்.

விழா சிறப்பாக நடந்தது.

"நியாயம் விழிக்கின்றது'" சிறுகதைத்தொகுதிக்கான முல்லை அமுதனின் விமர்சனத்தை
இந்தப்பக்கத்தில் வாசிக்கலாம்.

"காம்பு ஒடிந்த மலர்" விமர்சனத்தை
இங்கே காணலாம்.

Thursday, April 22, 2010

வடக்குவாசல்,இதழில் - என் நாவல் பற்றி












புதுடில்லியில் இருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் வெளியிடும் "வடக்கு வாசல்" இலக்கிய சஞ்சிகையும் தனது ஏப்ரல் இதழில் "நூல்வாசல்" என்ற பகுதியில் எனது நாவல் பற்றி குறிப்பிட்டதற்கு எனது நன்றி.

Wednesday, January 6, 2010

சென்னை புத்தகக்கண்காட்சியில்...


சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன.


சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்..

பரிசல் புத்தக நிலையம் - எண் 386

புலம் எண் 464

peopels watch எண் 13

உன்னதம் எண் 379

கருப்புபிரதிகள் எண் 271

பொன்னி எண் 226

கீழைக்காற்று 65

எங்கு கிடைக்காவிட்டாலும்.. புலம் ஸ்டால் எண் 464 ல் கிடைக்கும். எங்கள் புத்தகங்களை வாங்க ஆவலாயுள்ள நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்..



--

Tuesday, January 5, 2010

புத்தகங்கள்..புத்தகங்கள்

தமிழ் இணையத்தின் வருகையினால் புத்தகங்கள் வாசிப்பவர் தொகை குறைந்து போகிறது என்று யார் சொன்னது? இணையத்தில் எழுதுபவர்கள் கூட தங்கள் படைப்புகள் அச்சில் வரும் கனவுகளோடுதான் இருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் அச்சிட்ட காகிதங்கலை வருடியவாறே வாசிக்கும் மகிழ்வு வருமா?

எத்தனை புத்தக வெளியீட்டு விழாக்கள்..வம்சி புக்ஸ் வெளியீடுகள், உயிர்மை வெளியீடுகள், ஜெயமோகனின் புத்தகங்கள், சாருநிவேதிதாவின் புத்தகங்கள், காலச்சுவடு வெளியீடுகள், மித்ர வெளியீடுகள், வடலியின் இலங்கை படைப்பாளர்களின் நூல்கள், அகநாழிகை வெளியீடுகள்,

போதாதற்கு சென்னை புத்தக கண்காட்சி வேறு....
பலா பட்டறை(இந்தகுறிப்பை பாருங்கள்)

சங்கரின் புத்தக கண்காட்சி விஜயம் - 4ம் நாள்

வம்சி புக்ஸின் 40 புத்தகங்கள்

வம்சி புக்ஸ் 2010க்கென 40 புத்தகங்களை வெளியிடுகின்றது.
அட்டைப்படங்களை பார்த்தே இப்புத்தகங்கள் மீது காதல் கொண்டுவிட்டேன். மலையாள எழுத்தாளர் கெ.ஆர்.மீராவின் "சூர்ப்பனகை" (தமிழில்: கே.வி.சைலஜா)
சிறுகதைத்தொகுதி பற்றிய சிறுகுறிப்பு ஒன்றே அந்த புத்தகத்தை எப்போது வாசிப்பேன் என்று ஏங்கவைக்கிறது.

பவா செல்லத்துரைக்கு எனது நன்றிகள்..பின்வரும் குறிப்பு அவருடையது..
(19. டி.எம்.சாரோனிலிருந்து...)

புதுப்படைப்புகளுக்கிடையே




புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.
(மிகுதி விபரத்தையும், மற்றைய அழகான அட்டைப்படங்களையும்
இங்கே போய்ப்பாருங்கள்)























உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள்




2009 டிசம்பர் 25ஆம் திகதி மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (எல். எல்.ஏ. நூலகம்), 12 புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றன.அவற்றுள் வ.ஐ.ச.ஜெயபாலனின் குறுநாவல் தொகுப்பான "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது", தமிழ்நதியின் குறுநாவலான 'கானல் வரி்'யும் அடங்கும்.

சனிக்கிழமை २६ 12. 2009 மாலை ரவிக்குமாரின் புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.

ஞாயிற்றுகிழமை மாலை (27டிசம்பர்) கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலானது குமாரராஜா முத்தையா அரங்கம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.



அகநாழிகை இணையப்பதிவர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது.