Wednesday, September 15, 2010

வாடைக்காற்று திரைப்படத்தை தேடிய கதை





அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார்.

இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.

சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா?

செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எடுக்கப்பட்டு இலங்கையின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் திரையிடப்பட்டு, தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய ஊர்களிலும் காண்பிக்கப்பட்டு, ஓய்ந்துவிட்டகாலம்.

1978ல் வெளிவந்த சிறந்த தமிழ்ப்படம் என்ற இலங்கை ஜனாதிபதிவிருது வாடைக்காற்றுக்கு கிடைத்தது. அத்துடன் சிறந்த துணைநடிகர்விருது, இதில் நடித்த எஸ்.ஜேசுரத்தினத்துக்கு கிடைத்தது. அத்தோடு திரைப்படத்தில் முதலீடு செய்த பெனின்சுலா கிளாஸ்வேக்கஸ் மகேந்திரன், சீமாஸ் ரெக்ஸரைல்ஸ் குணரத்தினம் இருவரும், தயாரிப்பளராக செயற்பட்ட சிவதாசனும் 'வாடைக்காற்றை' முற்றாக மறந்துவிட்டார்கள்.

1983ம் ஆண்டில்; தமிழர்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபொழுது, தமிழர்களின் வர்த்தகஸ்தாபனங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஹெந்தளையில் இருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோ' வும் அடங்கும். இங்குதான் ஏராளமான சிங்கள,தமிழ்ப் படங்களின் 'நெகட்டிவ்'கள் வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரூடியோ எரிந்து சாம்பலாகியது.

வாடைக்காற்று நாவலை வாசித்தகாலத்தில் இருந்தே, அதன் மீது மையல்கொண்டு, அதிஷ;டவசமாக அது திரைப்படமாகியபொழுது, எனக்கு மிகவும் பிடித்த 'விருத்தாசலம்' என்ற காட்டுவாசியான இளைஞன் பாத்திரத்தில் நான் நடிக்கக்கிடைத்ததும், விமர்சனங்களில் மிகுந்த பாராட்டுக்களைப்பெற்றதும் ஒரு சந்தோசமான அனுபவம். கூடவே அதன் உதவி இயக்குனர் என்ற ரீதியில் அதன் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தியவன் என்ற வகையிலே என்னால் 'வாடைக்காற்றை' மறக்கமுடியவில்லை.

கலவரங்கள் ஓய்ந்தபின் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு போனேன். தமிழோ, சிங்களமோ திரையிடப்படுவதற்கு திரைப்படப் பிரதிகளை அவர்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும். அவர்கள்தான் பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள். ஓடிமுடித்தபின் பிரதிகள் அவர்களிடம்தான் வந்துசேரும். எனவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டுபிரதிகளில் இரண்டொன்றாவது இருக்காதா என்ற நம்பிக்கையுடன் போனேன். அங்கு எனக்கு கிடைத்த பதில்தான் விசித்திரமானது. ஒருபிரதியும் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். எனக்கு சரியான ஆத்திரம்.

அக்காலத்தில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தலைவராக பணியாற்றிய எல்.பியசேனா எனக்கு அறிமுகமானவர். உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். நேரே அவரிடம் சென்று முறையிட்டேன். 'ஜனாதிபதி விருது' பெற்ற ஒரு சிறந்த தமிழ்ப்படத்தின் ஒரு பிரதியைக்கூட சேமிப்பில் வைக்கமுடியாமல் போனதென்ன' என்று கேட்டேன். அவர் எனக்கு எப்படியாவது ஒரு பிரதியை தேடிக்கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.

திரைப்படக்கூட்டுத்தாபன சிற்றூழியர் ஒருவர் ரகசியமாக ஒரு தகவலைத்தெரிவித்தார். திரைப்படசுருள்களின் ஓரத்திலே இருக்கும் வெள்ளிக்காக தயாரிப்பாளர்கள் கைவிட்ட திரைப்படங்களை நிறைக்கணக்கில் அங்குள்ளவர்கள் விற்றுவிட்டு 'அழிக்கப்பட்டது' என்று கணக்கை முடித்துவிடுவார்களாம். 'முக்கியமாக இலங்கையில்தயாரான தமிழ்ப்படங்களுக்கு இப்படி நடக்கிறது. அவற்றின் தயாரிப்பாளர்களும் அக்கறை எடுப்பதில்லை. அது இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. நீங்கள் விடாதீர்கள்' என்று சொல்லிமுடித்தார்.

நான் விடவில்லை. அடிக்கடிபோனேன். கடைசியில் ஒரு தகவல் கிடைத்தது. 83ல் எரிந்து கொண்டிருந்த 'சினிமாஸ் ஸ்ரூடியோவில்' இருந்த சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் 'நெகட்டிவ்'களை காப்பாற்றும் முயற்சியில், எரிந்தது பாதி, எரியாதது பாதியாக இருந்த எல்லாவற்றையும், தூக்கி ஏற்றிக்கொண்டு போய், களனியாவில் இருக்கும் அரசாங்க ஸ்ரூடியோவான 'சரசவிய'வில் குவித்து வைத்திருக்கிறார்கள். உம்மால் முடியமென்றால் அங்கேபோய் தேடி, உமது படத்தின் நெகட்டிவ் இருந்தால் திரைப்படக்கூட்டுத்தாபனமே ஒரு பிரதி எடுத்துத்தரும் என்று உறுதியளித்தார்கள்.

;சரசவிய' ஸரூடியோவிற்கு யாரை துணைக்கு கூட்டிக்கொண்டு போவதென்று யோசித்தேன். அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தவர், சிங்களத்திரைப்டங்களில் வில்லன்பாத்திரங்களில் நடிக்கும் றொபின் பெர்னாண்டோ என்ற நண்பர். நாங்கள் இரண்டுபேரும் சமகாலத்தில் தயாரான 'நாடு போற்ற வாழ்க' 'அஞ்சானா' திரைப்படங்களில் நடித்திருக்கிறோம். அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

'சரசவிய'வில் ஒரு பெரிய அறையை திறந்து காட்டினார்கள். குவியலாக திரைப்படச்சுருள்கள், தகரங்களில் அடைக்கப்பட்டும் வெளியேயுமாக கிடந்தன. போதாக்குறைக்கு உருகிபபோய் பழுதான திரைப்படச்சுருள்களின் 'நெடி' தாங்கமுடியாமல் இருந்தது. மூக்கின்மேல் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, நானும், றொபினும், இன்னுமொரு சிற்றூழியருமாக தேடினோம்.

ஒவ்வொன்றாக 'வாடைக்காற்று' திரைப்படத்தின் நெகட்டிவ்கள் தகரஉறையுடன் எங்கள் கைக்கு வந்தன. ஏறக்குறைய 16 நெகட்டிவ் சுருள்கள். சந்தோசம் எங்கள் மனதில் பொங்கிவழிந்தது. தொடர்ந்து தேடியதில், சினிமாஸ் ஸ்ரூடியோவில் மேலதிகமாக செய்வித்த ஒரு பிரதியின் அத்தனை சுருள்களும் அகப்பட்டன.

நண்பர் றொபின் பெர்னான்டோ, பிரதியையும், நெகட்டிவ் சுருள்களையும் கொண்டுவந்து நான் அப்போது தங்கியிருந்த வை.எம்.சி.ஏ விடுதியில் இறக்கிவிட்டுப்போனார். எனது அபிமானத்திரைப்படம் இப்படியாக எனது கைக்கு வந்தது.

Tuesday, September 7, 2010

குரு அரவிந்தனின் "புதிய பக்கம்"



"புதிய பக்கம்" என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் இணயத்திற்கும் தனது புதிய பக்கத்திற்கு வந்திருக்கிறார்.

குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர்.

தாங்கள் எழுதியா "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை.. அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி..

ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


ஒரு பக்கக்கதை, இரண்டு ப்க்கக்கதை போடுவதற்கே (இடம் இன்மையால்) சிரமப்படும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகையில் இவர் எழுதியா முழு நீள நாவலே ("நீர் மூழ்கி..நீரில் மூழ்கி"), ஒரே இதழில், புகழ்பெற்ற ஓவியர்கள் நாலைந்து பேரின் சித்திரங்களுடன் வெளியானது நம்மவரில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் தென்னிந்தய வாசகர்கள் பல ஆயிரம் பேருக்குத் தெரியும்

ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் எழுதினால் தாழ்வான காரியமா?. ஜெயகாந்தன், ஜெயந்தன், கல்கி, சாண்டில்யன், அகிலன் எல்லோரும் இந்தப்பத்திரிகைகளில் எழுதித்தானே வாசகர்களிடம் அபிமானம் பெற்றார்கள்.

நாலே நாலு இதழ்கள் வெளிவந்து சொல்லாமல் கொள்ளாமல் நின்று போய்விடும் "இலக்கியச் சிற்றிதழ்களில்" எழுதினால் தான் எழுத்தா? எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது?

அண்மையில் ஒரு கலை இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கையின் ஒரு பிரபல கவிஞ்ர் தனது கவிதையை யாராவது " என்னய்யா.. உங்கள் கவிதை ஒன்றுமே புரியவிலையே" என்றவுடன்,ஒரு மமதை சிரிப்பு சிரிப்பாராம், "அப்படித்தான்.. என் கவிதை உங்களுக்கு எல்லாம் புரியாது" என்பதுபோல..
அவர் யாருக்காக எழுதுகிறார் எனபது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

குரு அரவிந்தனின் இணயப் பக்கம் அவரது வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள் உடன் இணையத்திற்காகவே எழுதப்பட்ட படைப்புகளுடன் சிறப்பாக இருக்கின்றது. தொடர்ந்து இணையத்திலும் நிறைய எழுதுங்கள் குரு.

Wednesday, September 1, 2010

சாயாவனம் - நாவல் மீள்வாசிப்பு


சாயாவனம் ஒருநாளில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய நாவல்தான். 200க்கு குறைந்தபக்கங்கள்தான். ஆனால் அதை வாசித்து முடிந்தபின் நாவலாசிரியர் பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதைப் போல, "வாசித்தவர் மனதில் இன்னுமொரு நாவல் ஆரம்பிக்கிறது"

நாவலின் கதாநாயகன் காடுதான். அதனோடு அதை அழிக்கப்புறப்படும் மனிதனின் இடையறாப் போராட்டமே கதை. இதேபோலத்தான் ஏர்னேஸ்ட் ஹேமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் கிழவனுக்கு பெரிய மீனுடன் கடலுக்குள் நடைபெறும் போராட்டமும். நீயாநானா என்ற நிலை இறுதிவரை தொடர்கிறது.

இந்த இரண்டு சிறந்த நாவல்களுக்கிடயில் சுவையான ஒற்றுமைகள் இருப்பதை அவதானித்தேன். "கடலும் கிழவனும் (The Oldman and the Sea)" நாவல்கூட127 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். சா.கந்தசாமியின் முதல் நாவல் "சாயாவனம்". இதற்காக அவருக்கு சாஹித்ய விருது கிடைத்தது. ஹேமிங்வே எழுதி வெளியிட்ட கடைசி நாவலும், புகழ் ஏணியில் ஏற்றிய நாவலும் -"கடலும் கிழவனும்' தான். இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஹேமிங்வேயின் நாவலில் சான்ரியாகோ என்ற மீனவக்கிழவன் 84 நாட்களாக பெரிய மீன் எதுவும் அகப்படாமல், துணைக்கு வருபவர்களும் கைவிட்டுவிட 85வது நாள், சாதிக்கவேண்டும் என்ற வன்மத்துடன் கடலில் இறங்குகிறான். பிரம்மாண்டமான மீன் ஒன்று அவனது தூண்டிலில் சிக்குகிறது..பிறகென்ன..போராட்டந்தான். இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் இப்படியே கரைகின்றன. தன்னோடு மூர்க்கமாக போராடும் அந்த ராட்சச மீன்மீது கிழவனுக்கு இனம்புரியாத மதிப்பே உருவாகுகின்றது.இதேபோல "சாயாவனத்தில்"தன்முன்னே பரந்துநிற்கும் காட்டைப் பார்த்து சிதம்பரம் பிரமித்து, மதிப்பே கொள்கிறான்.

மீனை இறுதியில் கொன்றுவிட்டாலும், பெரும் சுறாக்கள் அதன் இறைச்சியை கைப்பற்றிக்கொள்ள மீனின் வெறும் எலும்புக்கூட்டுடன் கிழவன் கரைக்கு வருகிறான்.
சாயாவனத்தில் காட்டின் ஒருபகுதியை அழித்து ஆலை போடுவதுதான் சிதம்பரத்தின் நோக்கமாக இருந்த்தது. ஆனால் அவன் இட்ட தீ, அவன் கட்டிய வீடு உட்பட எல்லாவற்ரையுமே பொசுக்கிவிடுகிறது. இயற்கையின் ஒரு கூறு அவனை தோற்கடித்து விடுகிறது.

சாயாவனத்தில் சிதம்பரத்துக்கு துணையாகவரும் சிறுவன் கலியபெருமாளைப் போலவே, கடலும் கிழவனும் நாவலில் கிழவனுக்கு துணையாக ஒரு சிறுவன் வருகிறான். அவனது பெயர் மனோலின் (Manolin).

சா.கந்தசாமியின் இந்த நாவலை மீண்டுமொருமுறை வாசித்தபொழுது ஒரேமூச்சில் வாசித்து முடிக்கும் ஆவலைத் தந்தது, மனிதரின் காலடிகள் பட்டிராத பகுதிகளுடன் தன்னிச்சையாக ஓங்கி வளர்ந்தமரங்களுடன்,செடி கொடிகளுடன், மூங்கில் காடுகளுடன், ஜீவராசிகளுடன் அந்த காட்டை அவர் அறிமுகம் செய்து வைத்த பாங்கு. அந்தமரங்களின் தனித்தன்மைகள், அந்த ஊர்மக்களுக்கு அந்தகாடு வழங்கிய வளங்கள், மிருகங்கள், பறவைகள்,காட்டில் தனிக்காட்டு ராஜவாக வாழ்ந்த முரட்டு குழுமாடு எல்லாமே மனிதன் மூட்டிய தீயினால் கருகிப்போன சோகம்.

புளியைதரும் மரங்களை அழித்து இனிப்பான வெல்லம் தரும் ஆலையை சிதம்பரம் நிறுவினாலும், புளிப்புக்கு பதிலாக இனிப்பு தரமுற்படும் அவனை ஒரு மூதாட்டி கோபிப்பதோடு நாவல் முடிவது ஒரு முரண்நகை.

1965ல் எழுதப்பட்ட இந்த நாவலில் பல ஆண்டுகளுக்கு முந்திய நமக்கு பழக்கமில்லாத ஒரு பண்டமாற்று சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையை காண்கிறோம். தஞ்சை மாவட்டத்தின் பின்னணியில்,காவிரியின் கரையில் நிகழும் கதை. சிதம்பரம்,சிவனாண்டிதேவர், பாப்பா, பஞ்சவர்ணம், குஞ்சம்மா, கலியபெருமாள் யாவருமே தெளிவான அடையாளங்களுடன் மனதில் பதிந்து போகிறார்கள். இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த அவர்களை நினைக்க பொறாமையாக இருக்கிறது.

சாயாவனம் என்மனதில் சாயாமல் நிமிர்ந்தே நிற்கிறது. தமிழ் படைப்பிலக்கியத்தின் ஒரு 'Classic'தான்.