Saturday, December 15, 2012

பி.விக்னேஸ்வரனின் நாடக நூல் வெளியீடு

சென்ற 8ந்திகதி (8.12.12) சனிக்கிழமை மாலை 4.30 அளவில் சன் சிற்றி பிளாசா ஸ்ரீஐயப்பன் ஆலய மணடபத்தில் பி.விக்னேஸ்வரன் மொழிபெயர்த்த இயூஜின் அயனஸ்கோவின் அபத்த நாடகமான "நாற்காலிகள்" நூலின் வெளியீடு நடைபெற்றது.

ஏற்கெனவே மனவெளி கலையாற்றுக்குழுவினரின் அரங்காடல் நாடக நிகழ்விலே மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை விக்னேஸ்வரனே நெறியாள்கை செய்திருந்தார் எனபதும் இந்நூல் வெளியீட்டு விழாவை மனவெளி கலையாற்றுக் குழுவினரே ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடற்குரியது.

அமைப்பாளர்கள் எதிர்பார்த்தபடி நாடகத்துறை சார்ந்தவர்களே நிறைந்திருந்த அரங்கில் வழங்கப்பட்ட உரைகளும் காத்திரமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன.

மனவெளி கலையாற்றுக் குழுவை சார்ந்த செல்வன் வெளியீட்டுவிழா பற்றியும், மனவெளி குழுவினரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு, பேச்சாளர்களை அறிமுகம் செய்து விழாவை தொடர்ந்து நடத்தினார்.

ஊடகவியலாளர் வி.என்.மதியழகன், விக்னேஸ்வரன் பற்றிய அறிமுக உரையில், அவரது ஆரம்பகால கலை ஈடுபாடு, இலங்கை வானொலியிலும், ரூபவாகினியிலும் அவரது பங்களிப்பு, அவரது ஆர்வம்< அவர் முன்னோடியாக செய்த நிகழ்ச்சிகள் எனபனவற்றையெல்லாம் விபரமாக குறிப்பிட்ட்டு சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்..

நாடகத்துறையில் "பட்டயப் படிப்பு' பெற்றவரும், கவிஞருமான கந்தவனம் அவர்கள், அபத்த நாடகங்கள் பற்றி உரையாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடந்ததின் விளைவாகவே அபத்தநாடங்கள் பற்றிய சிந்தனை உருவாகியது என்ற பொதுவான கருத்தை அவர் மறுத்துப் பேசினார். முதலாம் உலக யுத்தகாலத்திலே ஏன் இந்தச்சிந்தனை வரவில்லை என்றார். காலாகாலமாக இப்படி மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் வரத்தான் செய்கிறது. எனவே அபத்த நாடகத்தின் வருகைக்கும் யுத்தங்களுக்கும் தொடர்பு இருக்கிறதாக நினைக்க முடியாது என்றும், நாற்காலிகள் நாடகத்தைக்கூட அபத்த நாடகமாக கருதமுடியாது என்றும் கூறினார்..

"நாற்காலிகள்" நாடக நூலுக்கு, மிகச்சிறப்பானதும் தெளிவானதுமான நீண்ட முன்னுரைய எழுதியிருந்த கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி அடுத்து உரையாற்றினார். "ஒரு படைப்பாளி இதைத்தான் எழுதுகிறேன் என்று வகுத்துக்கொண்டு எழுதுவதில்லை. விமர்சகர்கள்தான் அந்தப்பாகுபாட்டை தீர்மானிக்கிறார்கள்." என்று கூறி முன்னுரையில் தான் கூறிய :இலக்கியத்திற்கு பிறகுதான் இலக்கணம் உருவாகின்றது" என்ற கருத்தை வலியுறுத்தினார். அபத்த நாடங்கள் வலியுறுத்த முயலும் இருத்தலியல் பற்றிய சிந்தனையினால், வாழ்வின் ஸ்திரமற்ர தன்மை என்ற அடிப்படையில் இந்த கருத்தும் நாடக வடிவமும் முள்ளிவாய்க்காலின் பின்பு எங்கள் மக்களுக்கு மிகவும் நெருங்கியாகியதென்றும், எதையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போகும் நினைப்பு அவர்களுக்கு வந்த சோகத்தை சொல்லியபோது, அவையினர் அந்த நினைவுகளை பெற்றுக்கொண்டவர்களாக காணப்பட்டர்கள்.

இந்த நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை எனது கலை வாழ்க்கையின் முக்கியமான கெளரவமாக கருதுகிறேன்.அதே நேரத்தில் ஒரு நாடக அறிவு சார்ந்த அவைக்கு என் கருத்துக்களை முவைக்கும் சந்தர்ப்பம் இதுவரையில் என்னைத்தேடி வந்ததாக நினைவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன்...

எனது உரையில் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் வானொலி, தொலைக்காட்சி காலங்களில் ஏற்பட்ட நெருக்கமான நட்பை, புரிந்துணர்வை தொட்டுக்காட்டி, அவரது தளராத தேடல்களை, மேற்கத்திய இலக்கியங்களோடு அவருக்கு பரிச்சியம் ஏற்பட காலம்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் எவ்வாறு தூண்டுகோலாக அமைந்தார் என்பதையும் கூறினேன்..

தொடர்ந்து இயூஜின் அயனஸ்கோ உடனான அறிமுகம் எனக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்குமுகமாக அவரது மூண்று நாடகங்களை குறிப்பிட்டேன்..

இலங்கையில் கொழும்பில் எல்பின்ஸ்டன் அரங்கிலே 1989ல் நடைபெற்ற வானொலி நாடக விழாவில் இடம்பெற்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் மொழிபெயர்த்து இயக்கிய அயனள்கோவின் "Frenzy, doe Two or More " {தமிழில் :நத்தையும் ஆமையும் என்ற பெயரில்) என்ற அபத்த நாடகத்தில் நானும், ஜீவனி ஞானரத்தினமும் (இரண்டே நடிகர்கள்0 45 நிமிடங்கள் நடித்ததையும்,.

பின்னர் கனடாவில் மனவெளியின் அரங்காடல் நிகழ்வில், விக்னேஸ்வரன் மொழிபெயர்த்து இயக்கிய .நாற்காலிகள் நாடகத்தை பார்த்ததையும், அந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களான சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகியோரின் சிறாப்பான நடிப்பு திறனையும் நினைவு படுத்திக்கொண்டேன்..

மூன்றாவதாக பின்னொரு அரங்காடல் நிகழ்வில் புராந்தகனின் இயக்கத்தில் மேடையேறிய "அரி ஓம் நம' என்ற நாடகம் அயனஸ்கோவின் "Lessons" நாடகத்தை தழுவி டெல்கியில் வாழும் "வடக்கு வாசல்" ஆசிரியரும், எனது நண்பருமான பென்னேஸ்வரனால் எழுதப்பட்ட "பாடங்கள்{" என்ற நாடகந்தான் என்றும், அந்த நாடகத்தை பார்த்து ரசிக்க கிடைத்ததையும், இராசரத்தினம் அவர்களின் நடிப்பு சிறப்பையும் குறிப்பிட தவறவில்லை. .

தொடந்து, நாற்காலிகள் நாடக நூலைப்பற்றிப் பேசுகையில் அதை ஒருநாள் பொழுதில் முழுமையாக வாசிக்க முடிந்ததையும், வாசித்து முடிந்ததின் பின்னர் மனதில் எழுந்த சோகம்> நாடகத்தின் இறுதியில் மேடையில் வெறுமனே இருக்கும் கதிரைகளும், கலைந்துபோன அலங்காரத்தின் எச்சங்களும் எழுப்பிய வெறுமை என்பனவற்றை சொல்லி> அயனஸ்கோ இந்த நாடகத்தை அபத்த நாடகம் என்றில்லாமல் "Tragic Farce" என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னேன்..

பிரெஞ்சிய காலனி ஆட்சியில் அல்ஜீரியாவில் பிறந்த அல்பெயர் காமு (Albert Kamus என்ற தத்துவ சிந்தனையாளர், நோபெல் இலக்கியப் பரிசை பெற்றவர் எழுதிய The Myth of Sisyphus" என்ற உரைநூலில் குறிப்பிட ஒருகிரேக்க ஐதீகக்கதையில் வரும் ஒரு பாத்திரம் கடவுள்களின் சாபத்தின் விளைவாக ஒரு பெரிய பாறங்கல்லை மலை உச்சிக்கு உருட்டிக்கொண்டு போவதும் பிறகு அதை மலையடிவாரத்திற்கு உருண்டு வர விடுவதும், மீண்டும் உச்சிக்கு கொண்டு போவதும், மீண்டும் அடிவாரத்துக்கு விழ விடுவதுமாக தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறது. இருத்தலியலின் அபத்த தத்துவத்தை இந்த கதை மூலமாக விளக்குகிறார் காமூ என்பதை சொல்லி, பெக்கெற்றின் "Waiting for Godot" நாடகத்தை பார்த்த காத்திருப்பின் அருமையை உணர்ந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டதையும், அதேபோல முதுமை தரும் தனிமை, வெறுமை பற்றி உணரத்தொடங்கியுள்ள என்னை நாற்காலிகள் நாடகம் பாதித்ததையும் சொல்லி முடித்தேன்..

வெளியீட்டு நிகழ்வில் நாற்காலிகள் மேடை நாடகத்தில் திறம்பட நடித்த சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகிய கலைஞர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழ்ங்கினேன்..

ஏற்புரை வழ்ங்கிய நூலாசிரியர் பி.விக்னேஸ்வரன், மிகப்பெரிய அழிவுகள், யுத்தங்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக நாடகம், இலக்கியம், ஓவியம் போன்றவற்றில் சிந்தனை மாற்றங்கள் ஏற்படச்செய்தன என்று கூறினார். ..

வியட்னாம் போரின் பின்னதாக, எப்படி இளஞர்களின் வாழ்வியலில் மாற்றங்களாக - Hippies, Flower people, Peace Marches என்பன முக்கியத்துவம் பெற்றன என்றும், நாற்காலிகள் நாடகத்தை வாசித்த போது தன்னை அது எவ்வாறு பாதித்ததென்றும், அதனாலேயே அதை மொழிபெயர்க்க முற்பட்டதாகவும், அதை மேடையேற்றவும், இப்போது நூலாக வெளியிடவும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் அளித்த ஆதரவுக்கு நன்றியும் கூறினார்...

மொத்தத்தில் அறிவார்ந்த ஒரு அவைக்கு, ஏற்றதாக காத்திரமாக நடந்த நல்லதொரு வெளியீட்டு விழா.

மனவெளியினருக்கும், நூலாசிரியர் விக்னேஸ்வரனுக்கும் என் பாராட்டுக்கள்.

Saturday, December 1, 2012

கரவெட்டி தந்த பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய நூல் - :ஒரு தமிழ் அறுவடை"பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை தமிழ் உலகம் நன்கு அறிந்திருந்தது. அவரது பரந்துபட்ட துறை சார்ந்த ஆழமான அறிவை போற்றிப் பாரட்டியது.

என் ஊர்க்காரரான அவரோடு என் இளமைக்காலத்தில் நெருங்கிப் பழக எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

எனது சித்தப்பா கே.விஸ்வலிங்கம் அவரது நெருங்கிய நண்பர். (ஞானம் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில் தன்னை இளமைக்காலத்தில் நெறிப்படுத்தியவர்களில் ஒரு முக்கியமானவர் என்று என் சித்தப்பாவை குறிப்பிட்டதை வாசித்து சந்தோசப்பட்டது நினைவில் இருக்கிறது)

வானொலி நாடகத்துறையில் நான் கொண்ட ஈடுபாட்டுக்கு அவர்தான் காரணமாக இருந்தார். அவர் அப்போது இலங்கையர்கோனின் "விதானையார் வீடு' நாடகத்தில் நடித்துக் கொண்டிருத காலம். திருச்சி, மதறாஸ் 1, மதறாஸ் 2 என்ற வானொலி நிலையங்களிலே நிரந்தரமாக தரித்து நிற்கும் எங்கள் வானொலியின் முள் கொழும்பு நோக்கி அசைவது அந்த நாடகம் ஒலிபரப்பாகும் வேளையில்தான்.

சித்தப்பாவோடு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது சிறுவனான நான் அண்ணர்ந்து அவரைப்பார்த்து அவர் பேசுவது வானொலி நாடகத்தில் வரும் விதானையார் போலவே இருக்கிறதே என்று வியந்து கொண்டு நிற்பேன்.

கொழும்புக்கு வேலைகிடைத்து போன முதல் வாரமே அவரைச் சந்திக்க வெள்ளவத்தையில் அவரது அறைக்குப் போய் என்னை வானொலியில் நடிக்க சேர்த்து விடும்படி கேட்டேன். "உன் சொந்தத்திறமையினால் நீ சாதிக்க வேண்டும். சிபார்சுகள் நன்மை தராது' என்று சொல்லி விட்டார். அப்போது அது எனக்கு ஏமாற்றமாகத்தன் இருந்தது.

ஆனாலும் காலப்போக்கில் அதன் உண்மையை அறிந்து கொண்ட்டேன், பின்னொருநாளில் வானொலி நாடகம் ஒன்றில் அவரோடு நடிக்கும் வாய்ப்பும் பெற்றேன். பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய வடமராட்சி பேச்சு வழக்கில் அமைந்த "பொருளோ பொருள்" எனபது அந்த நாடகத்தின் பெயர். =அவர் நடித்த கடைசி வானொலி நாடகம் அதுவாகத்தான் இருக்கும்.

இங்கே நான் குறிப்பிடும் "ஒரு தமிழ் அறுவடை" என்ற நூலானது அவரும் பின்னொருகாலத்தில் நானும் படித்த கரவெட்டி விக்கினேஸ்வராக்கல்லூரியின் பழைய மாணவர்களால் 2011 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது என்றாலும் அங்கு சொல்லப்பட்டதை பதிவு செய்யும் நோக்கில் இங்கே தருகிறேன், (தினக்குரலுக்கு நன்றி)

மூதறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆக்கங்கள் செயற்பாடுகள் பற்றிய ஒரு பதிகையான "ஒரு தமிழ் அறுவடை' என்ற நூல் வெளியீட்டு விழா 18.06.2011 ஆம் திகதி, கொழும்புத் தமிழ்ச் சங்க,சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.கரவெட்டி,விக்னேஸ்வரா கல்லூரிப் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் தலைவர் வே.விமலராஜா (சட்டத்தரணி) தலைமை தாங்கினார். கல்வி,கலை, இலக்கியத்துறைசார்ந்த பிரமுகர்கள் மங்களச் சுடரேற்ற கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக் கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடப்பட்டது. பிரபல எழுத்தாளர் சந்திரகாந்தா முருகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை: வே.விமலராஜா (சட்டத்தரணி)

"ஒரு தமிழ் அறுவடை' என்ற நூல் இருபாகங்களை உடையது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆக்கங்கள் ஒரு பகுதி.மறுபகுதி பேராசிரியர் பற்றி மற்றையவர்கள் எழுதியவை. நூலைப் பற்றிக் கூறத் தேவையில்லை. பலர் பேராசிரியரைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளனர். தந்தையார் பண்டிதர் கார்த்திகேசு, உபாத்தியாயர், சோ திட ஈடுபாடு உள்ளவர். தாயின் செல்லப்பிள்ளை சிவத்தம்பி,இராசையா எனவும் அவரைக் கூப்பிட்டனர்.பல ஆய்வுகளைச் செய்யப் பேராசிரியருக்கு எப்படி முடிந்தது? மனைவி,பிள்ளைகள் குடும்பத்தினர் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினர். எமது பொதுச் செயலாளர் வீ.ஏ.திருஞானசுந்தரம் இந்நூல் வெளிவருவதற்குத் தனியாக உழைத்தவர். அவருக்கு எமது பாராட்டுகள்.

நூல் அறிமுக உரை: சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா

பேராசிரியர் சிவத்தம்பியின் ஆக்கங்களும் அவர் பற்றிய ஆக்கங்களும் இந்நூலிலுண்டு.பேராசிரியர் சிவத்தம்பி தொடாத துறை இல்லை.சரித்திரம்,பொருளியல், தமிழ் என்பவற்றைக் கற்றார். திறனாய்வாளர்.சங்க இலக்கியத்தை மார்க்சியத்தோடு பொருத்திப் பார்ப்பார்.அறிவு வளத்தால் பகைமையைக் கடந்தவர். முற்றியவர்.அறிவில் முழுமையடைந்து முற்றியவர். சினிமா பற்றியும் பேசுவார். எதையும் அறிவுக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்.நூலில் பதினாறு கட்டுரைகள் உண்டு. எனக்கும் உதவிக் கரம் நீட்டியதும் விக்னேஸ்வராக் கல்லூரி தான். எனது படிப்பைத் தொடர உதவியது.

நூல் வெளியீட்டு நிகழ்வில் "ஒரு தமிழ் அறுவடை' நூலின் முதல் பிரதியைத் தலைவர் விமலராஜா, கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் காப்பாளர்களான கே.கனகசபை, சாந்தி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கினார். கல்வி, கலை, இலக்கியத்துறைப் பிரமுகர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

. சிறப்புரைகள்

பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான்

பேராசிரியர் கா.சிவத்தம்பி இவ்விழாவுக்கு வராதிருப்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. பாராட்டுகளும் கௌரவங்களும் பேராசிரியருக்குப் பல மட்டங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. இப்பாராட்டு விழா அவைகளிலிருந்து வேறுபடுகின்றது. சொந்த ஊரவர்கள்,கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்துகின்றனர். அறிஞர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் சொந்த ஊரில் மரியாதை இருப்பதில்லை. ஆனால், இப்படிப் பேராசிரியர் சிவத்தம்பிக்கு பெரியளவில் விழா எடுத்திருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது. பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் அவர் தகுந்தவர் தான். இதற்குக் காரணமாக இருப்பது அவரது அறிவு ஆளுமைதான். பாராட்டுவதற்குப் பாராட்டுபவருக்குத் தகுதி இருக்க வேண்டும். பாராட்டுகளுக்கும் அத்தோடு விமர்சனத்துக்கும் ஆளானவர் பேராசிரியர். கல்லெறி,பொல்லெறிபட்டவர். இவையெல்லாம் அவர் காய்த்த மரமென்பதன் அடையாளமே. அறிவாளுமை மிகவும் அத்தியாவசியமானது.

"ஊருணி நீர் நிறைந்தற்றே உலகெலாம் பேரறிவாளன் திரு' எனத் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். பேராசிரியரின் அறிவுச் செல்வம் ஊருக்கு உதவியது. அது பொதுச் சொத்தாக மக்களுக்கு உதவியது. அவர் பொதுமகன். அவர் பத்தோடு பதினொன்றாகக் கணிக்கப்படுவதில்லை. பாராட்டப்படுகிறார். ஏன் இந்தப் பாராட்டுகள் அவருக்கு? சமூகம்,பண்பாடு,மொழி,இலக்கியம் பற்றி விரிவாகச் சிந்தித்துப் புதிய அறிகைகளைத் தந்துள்ளார். நூல் எழுதுவது எல்லோருக்கும் பொதுவானதுதான்.

பேராசிரியர் சிவத்தம்பி தமிழுலகுக்குக் கிடைத்த அரிதான ஆய்வாளர். ஆய்வுத்துறையில் முக்கிய தடங்களை ஏற்படுத்திக் காட்டியவர் அவர் ஒருவர்தான். நானவரது மாணவனல்ல. இருந்தும் அவரது மாணவன் எனக் கூற விரும்புகிறேன். நூல்களைப் படிக்கிறேன்.மூடிக் கிடந்த பழைய தமிழ்ச் சிந்தனை மரபை உடைத்து தமிழியச் சிந்தனையில் அறிவொளியை ஏற்படுத்தியவர். முதல் முதல் தமிழ்ப் பாரம்பரியத்துக்குப் புதிய சிந்தனை வெளிச்சத்தைக் கொண்டு வந்து தமிழ்த் திறனாய்வுத் துறைக்கும் புதிய பாதையை அமைத்தார்.

பின்னர் வானமாமலை, பேராசிரியர் க.கைலாசபதி,பேராசிரியர் கா.சிவத்தம்பி மார்க்சிய அடிப்படையில் இப்பணியைத் தொடர்ந்தனர். தமிழ் ஆய்வில் பல்துறை அணுகுமுறையை ஏற்படுத்தினர். புதிய கருத்துகளை முன்வைத்தனர். சங்க இலக்கியத்தை ஆராய்ந்து அதிகாரபூர்வமான கருத்துகளை சிவத்தம்பி வெளியிட்டார். இங்கு வருகைதரும் வெளிநாட்டு அறிஞர்களை ஈடுசெய்யக்கூடிய தகைமை சிவத்தம்பிக்கே உண்டு. அரசியல்,இலக்கியம் என்பவற்றைச் சொல்லக்கூடிய ஆளுமை அவரிடமேயுண்டு. இப்படியானதொரு ஆளுமையுடைய கல்விமானைத் தமிழ்நாட்டில் காண முடியாது. மிக விரிவாகச் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து கருத்துகளை முன்வைத்தார். தனது கலாநிதிப் பட்டத்துக்காக நாடகத்தை ஆய்வு செய்தார். விபரணப்பாங்கான ஆய்வு முறைகளே முன்பிருந்தன. காரணகாரியத் தொடர்புகளை ஆய்வு செய்தார்.

நவீன இலக்கியத்தில் சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவும் முக்கியமான ஆய்வு நூல். அதேபோல் நாவலும் வாழ்க்கையும் முக்கியமானது. யாழ் சமூகம் பற்றிய ஆய்வு உண்மையான பார்வையைக் கொண்டது. இனத்துவ முரண்பாடு தொடர்பானது அரசியல் பற்றியும் சிவத்தம்பி சிந்தித்தார். எழுதினார் "தினக்குரல்' பத்திரிகையில் நிறைய எழுதியுள்ளார்.அவைகள் நூலாக வெளிவர வேண்டும். ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். தமிழ் முஸ்லிம்கள் சம்பந்தமான அவரது ஆய்வு மிகவும் முக்கியமானது. அதை மிகுந்த கரிசனையோடு பார்த்துச் சிந்தித்தார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் சிவத்தம்பி படித்ததோடு அதில் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.முஸ்லிம்களின் நண்பர் . அவரது சிந்தனை வீச்சு இன்னமும் தீவிரமாகத் தான் இருக்கின்றது.தமிழுக்கு இன்னமும் நிறையச் செய்வார்.

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா

பேராசிரியர் கா.சிவத்தம்பி கரவெட்டி மேற்கைச் சேர்ந்தவர். நான் கிழக்கு. கரவெட்டியின் வாழ்வியல் தான் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல். எத்தனை வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் எளிமையான செம்மையான வாழ்வே கரவெட்டியில் உண்டு. சிவத்தம்பி வல்வெட்டித்துறையில் திருமணம் செய்தவர்.தொடர்ந்து நான்காண்டுகள் அவரிடம் கற்றிருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியிடமும் கற்றேன். எனது தம்பியின் நல்ல நண்பர் சிவத்தம்பி. இருவருமாகப் பேராசிரியரைச் சந்திக்கச் சைக்கிளில் சென்றோம். அன்று தான் அவரைக் கண்டேன். நான் அக்காலத்தில் நவீன இலக்கியத்தின் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை

நா.பார்த்தசாரதி,அகிலன் போன்றோரது படைப்புகளைத் தான் வாசிப்பேன். ஜெயகாந்தன், காண்டேகர் படைப்புகளை வாசிக்கும்படிசிவத்தம்பி சொன்னார். படித்தேன் சிவத்தம்பியின் வீட்டுச் சூழல் கல்வி மயப்பட்டது. கவிதைப் பாரம்பரியத்தை உடைய ஊர் கரவெட்டி "சிரித்திரன்' சிவஞான சுந்தரம் (சுந்தர்) நகைச்சுவையாகப் பேசுவார். அந்தப் பாரம் பரியம் சிவத்தம்பிமுமுண்டு.

இன்று நாம் அம்மான் என்ற உறவு முறைச் சொல்லை மறந்து விட்டோம். குஞ்சி,ஆச்சி,ஆத்தை இவை கரவெட்டியின் உறவு முறைச் சொற்கள். ஆத்தை இறந்த பின்னர் கிருஷ்ணாழ்வார் அவர் பற்றிய பாட்டொன்றை பாடியிருக்கிறார்.

எனது வாழ்வில் கைலாசபதியையும் சிவத்தம்பியையும் மறக்க முடியாது. மற்றைய விரிவுரையாளர்கள் ஒரு மணி நேரம் பல்கலைக்கழக வகுப்புகளை நடத்த சிவத்தம்பி ஒன்றே முக்கால் மணித்தியாலம் தனது வகுப்பை நடத்துவார். திணைக்கோட்பாட்டை எம் மனதில் பதிய வைத்தவர் சிவத்தம்பிதான். கம்பனை எக்ஸ்ரே எடுத்துக் காட்டினார். அவர் நடத்தும் வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். மிக ஆழமாகக் கற்போம்.

ஆய்வின் நெறி முறைகளை அவரிடமே பயின்றேன். ஆய்வு ஒரு பொறியக இருந்தது. ஆற்றலுள்ள மாணவர்களை உருவாக்க முயன்றார். சொல்வதில் புதுமையான நோக்கிருந்தது. அவரது ஆய்வுகள் பல பரிமாணத்தைக் கொண்டவை. ன்பர். தமிழ் நாட்டில் நாவலர் பரம்பரை விமர்சிக்கப்பட்டதுண்டு. மதிக்கப்பட்டது கைலாசபதி,சிவத்தம்பிக்குப் பின்னரே.

அவர் வித்தியாசமான மனிதர். அவரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கும். எனது பேரனுக்கு என்ன பெயர் வைக்கலாமெனக் கேட்பேன். ஞான பண்டிதன் எனப் பெயர் சொன்னார். இதை இன்றைய பெற்றோர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

சிவத்தம்பிக்கு. இன்னொரு மறுபக்கமும் உண்டென்பதை மறக்கக் கூடாது. அவரொரு ஆக்க இலக்கியகர்த்தா. ஆக்க இலக்கியம் சார்ந்த பேராசிரியரின் எழுத்துகள் நூலாக்கப்பட வேண்டும். அவரது இன்னொரு முகத்தைப் பார்க்க அது உதவும். இது எனது வேண்டுகோள்.

எம்.எஸ்.தேவகௌரி, (சிரேஷ்ட விரிவுரையாளர்,

பேராசிரியர் சிவத்தம்பி படிப்பித்தால் விளங்காது என்று ஆலோசனை கூறினர். இருந்தும் அவரது வழிகாட்டலில் படித்தேன். இலக்கியத்தை இரசிக்கக் கற்றுத் தந்தார்.சொல்லப் படாதவற்றையும் உய்த்துணரும் ஆற்றலை வளப்படுத்தித் தந்தவர் பேராசிரியர். "தமிழ் இலக்கிய வழி' என்ற அவரது நூலைப் படித்ததால் எனது சிந்தனை வளர்ந்தது. நவீன இலக்கியம், பக்தி இலக்கிய காலத்தை அவரிடம் கற்றோம். மிக ஆழமான விளக்கங்களைச் சொன்னார். பல் பரிமாணங்கள் இருந்தன.

தேவை இல்லாசொற்கள் வசனத்தில் இருக்கக்கூடாது. சொற்கள் எப்படி அமைய வேண்டுமென்பதைப் படிப்பித்தார். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்பதை ஆழமாக நோக்கி கல் தோன்றா மண் தோன்றாகக் காலத்துக்கு முன் எப்படி மூத்த குடி தோன்றி இருக்குமென்பதைச் சிந்திக்க வைத்தார். அவரது நுண்மான் நுழை புல ஆய்வு முறையே ஊடகத்துறையில் நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியது. எளிமை மனிதாபிமானமுடையவர். இலக்கியத்துறை மக்களோடு சம்பந்தப்பட்டது. அதை ஆரோக்கியமான திசைக்குத் திருப்ப வேண்டுமென முனைந்தார். பேராசிரியரை எப்பவும் சந்திக்க முடிகிறது. அற்புதமான புத்திக் கூர்மையைப் பெற்ற வசிட்டர். யாருடனும் பகைக்காதவர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் செய்தி தொலைபேசி மூலம் சபையோருக்கு ஒலிபரப்பப்பட்டது. கனடா கரவெட்டி ஒன்றியத் தலைவர் ஐ.சி.அம்பிகைவரன்,எஸ்.செல்வரட்ணம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். பேராசிரியரின் மகள் லக்ஷ்மி புலேந்திரா ஏற்புரையையும் எஸ்.ஜெ.ஜெயக்குமார் நன்றியுரையையும் நிகழ்த்தினர். பிரபல ஒலிபரப்பாளர் "ஊடகத்துப் பேராளன்' வீ.ஏ. திருஞானசுந்தரம் நிகழ்வுகளைத் தொகுத்து அறிவிப்புகளைச் செய்தார்.

இந்த விழா நடைபெற்றபோது பேராசிரியர் உயிரோடிருந்தார், உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை) (

Monday, November 5, 2012

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருது

இலங்கை சாகித்ய விருது தெரிவில் இடம் பெற்ற எனது " நேற்றுப் போல இருக்கிறது" நூல் தொடந்து மற்றுமொரு கெளரவத்தையும் பெற்றிருக்கிறது.


http://youtu.be/AF6ydBn9F04 (காணொளி காண்க)

யாழ் இலக்கியவட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் வைபவம் யாழ் நாவலர் மண்டபத்தில் நவம்பர் 4ந் திகதி நடைபெற்றது. இதில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் 2011க்கான நுல்களில் நானாவித பிரிவில் சிறந்த நூலாக எனது "நேற்றுப் போல இருக்க்கிறது' தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.
எனது மருமகன் றுஷான் ஹண்டி என் சார்பில் விழாவில் கலந்து கொண்டு. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என். சண்முகலிங்கத்திடமிருந்து விருதை பெற்றக்கொண்டார்.


எனது வானொலிக்கால நண்பரும், பிரபல ஒலிபரப்பாளரும், கவிஞர் நீலாவணனின் மகனுமான எஸ்.எழில்வேந்தன் இலக்கியவட்ட விருதை பேராசிரியர் சிவலிங்கராசா அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.

Tuesday, October 9, 2012

தலைக்கோல் விருது வழங்கினார்கள்


சென்ற ஞாயிற்றுகிழமையன்று (07.10.12) டொரொன்ரோவில் ஸ்காபரோ சமூக மைய அரங்கில் எனக்கு தலைக்கோல் விருது வழங்கி கெள்ரவித்தார்கள்.

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் இந்த விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மொன்றியலைச் சேர்ந்த இரா,நடராஜா என்ற அன்பரின் ஏற்பாட்டில் இந்தவிழா இத்தகைய சிறப்புடன் நடந்தேறியது ஆச்சர்யம் தருகிறது. திரு இரா. நடராசா அவர்கட்கும், கலைஞர் சோக்கெல்லோ சண்முகம் அவர்கட்கும் முழுப்பாராட்டும் உரித்துடையது.

"பாரதிரத்தன் பாலச்சந்திரன்" என்ற தலைப்பில் எனது கதையை கூறும் வில்லுப்பாட்டை சோக்கெல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவினர் நிகழ்த்தி கலக்கி விட்டார்கள்.

அத்தோடு கனடாவில் முதன்முறையாக ஒரு கலைஞனுக்கு வழங்குவதாக அறிவித்து, மிகுந்த அலங்காரங்களுடன் "தலைக்கோல் விருது" வழங்கினார்கள். நண்பர் வீ.என்.மதியழகன் தலைக்கோல் பற்றிய அருமையான விளக்கம் அளித்து< விருதை எனக்கு வழ்ங்கினார். தலைக்கோல் பற்றி அறியாதவர்கட்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

இவற்றோடு விட்டுவிடாமல் எனது வரலாற்றை கூறும் 186 பக்கங்களுடைய
"பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை"
என்ற தலைப்பில் வர்ணப்படங்களுடன் நூல் ஒன்றையும் வெளியிட்டார்கள்.

விழாவின் நிறைவில் "ஒரு கலைஞனின் பயணம்" என்ற எனது விவரணச்சித்திரம் அன்பர்கள் வி.திவ்யராஜன் - செல்வன் ஆகியோரின் உருவாக்கத்தில் பார்வையாளர்களை வெகுவாகாக் கவர்ந்த்து.

இவ்விழாவைபற்றி ஈகுருவி இணையத்தளம், கரவைக்குரல் இணையத்தளம் என்பன படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களுக்கு நன்றி.
http://ekuruvi.com/ks%20balachandran
(கரவைக்குரல்) http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post_8.html

Friday, October 5, 2012

சாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்

2

2011ம் ஆண்டில் பிரசுரமான நூல்களில் நானாவிதப்பிரிவில் எனது நேற்றுப்போல இருக்கிறது நூலை சிறந்த நூலாக தெரிவு செய்து இலங்கை சாகித்ய மன்றம் அறிவித்ததோடு சாகித்ய விழா மலரிலும் அத்தகவலை இடம் பெறச் செய்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது

2009ல் எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" அமுதன் அடிகள் இலக்கிய விருதை பெற்றபின்னர் எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது" இலங்கை சாகித்ய விருது பெறத் தேர்வானது ஒரு எழுத்தாளனாக எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.

Tuesday, October 2, 2012

இலங்கையில் சாகித்ய விருதும் திடீர் திருப்பங்களும்

செப்டெம்பார் 26' 2012 ஒரு மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் இலங்கை சாகித்ய மண்டலத்திலிருந்து எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது'க்கு பல்துறை பகுதியில் சாகித்ய விருது கிடைத்திருப்பதாக தொலைபேசி செய்தி வந்தது.
முதல் நூலான கரையைதேடும் கட்டுமரங்கள் இந்தியாவில் அமுதன் அடிகள் விருது பெற்றபின் மீண்டும் இப்படி ஒரு கெள்ரவம் பிறந்த நாட்டில் கிடைக்கும் சந்தோசம் அடுத்தநாள் கலைந்து போனது. . கீழே அறிவிப்பை பாருங்கள்....

.இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 .... கொழும்பு:

< கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2011ம் ஆண்டு சிறுகதை, நாவல், கவிதை, காவியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
br/ 01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதிகள்
i) “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
ii) “நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
(நன்றி - இந்நேரம்.காம்)

Sunday, July 8, 2012

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் - இயல்விருது

அண்மையில் எஸ்.ராமகிருஷ்னன் தமிழ்தோட்டம் அமைப்பின் இயல்விருதை பெறுவதற்காக கனடா வந்தபொழுது, அந்த வைபவத்தில் கலந்துகொண்டேன். என்னை நானே அவருக்கு அறிமுகம் செய்துகொள்ளும் சங்கடத்திற்கு உள்ளாகாமல் நண்பர்கள் மூர்த்தியும். ஜெயகரனும் காப்பாற்றினார்கள். எனது இரண்டு நூல்களையும் அவருக்கு கொடுக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.


னிருதுபெற்றபின் நீண்ட உரையாக அமைந்த அவரது ஏற்ப்புரை சுவையும், ஆழமும் உடையதாக அமைந்து எங்களை கட்டிப்போட்டது.
ஒவ்வொருவரும் தங்கள் மண்ணை, பிறந்தஊரை எப்படி நேசிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக அவர் சொன்ன பைபிள் கதை மனதில் ஆழ்ப்பதிந்து போனது.

"தான் விட்டுப்போகும் தன் ஊரை. தான் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்ற ஊரை, தான் வாழ்ந்த தனது ஊரை திரும்பிபார்த்தால் தான் உப்புத்தூணாக மாற நேரிடும் என்று தெரிந்தும் லோர்த்தின் மனைவி தான் இனிப் பார்க்கமுடியாத தன் ஊரை ஒருகணம் திரும்பிப்பார்த்து உப்புத்தூணாகிப் போகிறாள் என்று அவர் சொல்லியபோது எங்கள் நினைவு எங்கள் மண்ணைத் தொட்டு திரும்பியது. கூடவே பெண்களுக்கும் உப்புக்கும் உள்ள நெருக்கத்தை சுவைபடச்சொன்னார். ஏராளமான மொழிகளை தெரிந்து உலகமெலாம் சுற்றித்திரிந்த ராகுல் சாங்கிருத்யாயன் இறுதியில் எதுவுமே பேசமுடியாதவராய், நினைவுகளை மீட்டுக்கொள்ளமுடியாதவராக மாண்டுபோன சோகத்தைச்சொன்னார். இப்படி பொருத்தமான உபகதைகளுடன் அவரது நீண்ட உரை அமைந்திருந்தது. அவரது எழுத்தாற்ற அவரது பேச்சில் எதிரொலித்த்து. (அவரது உரை காணொளியில் பார்க்கலாம்)