Saturday, December 1, 2012

கரவெட்டி தந்த பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய நூல் - :ஒரு தமிழ் அறுவடை"



பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை தமிழ் உலகம் நன்கு அறிந்திருந்தது. அவரது பரந்துபட்ட துறை சார்ந்த ஆழமான அறிவை போற்றிப் பாரட்டியது.

என் ஊர்க்காரரான அவரோடு என் இளமைக்காலத்தில் நெருங்கிப் பழக எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

எனது சித்தப்பா கே.விஸ்வலிங்கம் அவரது நெருங்கிய நண்பர். (ஞானம் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில் தன்னை இளமைக்காலத்தில் நெறிப்படுத்தியவர்களில் ஒரு முக்கியமானவர் என்று என் சித்தப்பாவை குறிப்பிட்டதை வாசித்து சந்தோசப்பட்டது நினைவில் இருக்கிறது)

வானொலி நாடகத்துறையில் நான் கொண்ட ஈடுபாட்டுக்கு அவர்தான் காரணமாக இருந்தார். அவர் அப்போது இலங்கையர்கோனின் "விதானையார் வீடு' நாடகத்தில் நடித்துக் கொண்டிருத காலம். திருச்சி, மதறாஸ் 1, மதறாஸ் 2 என்ற வானொலி நிலையங்களிலே நிரந்தரமாக தரித்து நிற்கும் எங்கள் வானொலியின் முள் கொழும்பு நோக்கி அசைவது அந்த நாடகம் ஒலிபரப்பாகும் வேளையில்தான்.

சித்தப்பாவோடு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது சிறுவனான நான் அண்ணர்ந்து அவரைப்பார்த்து அவர் பேசுவது வானொலி நாடகத்தில் வரும் விதானையார் போலவே இருக்கிறதே என்று வியந்து கொண்டு நிற்பேன்.

கொழும்புக்கு வேலைகிடைத்து போன முதல் வாரமே அவரைச் சந்திக்க வெள்ளவத்தையில் அவரது அறைக்குப் போய் என்னை வானொலியில் நடிக்க சேர்த்து விடும்படி கேட்டேன். "உன் சொந்தத்திறமையினால் நீ சாதிக்க வேண்டும். சிபார்சுகள் நன்மை தராது' என்று சொல்லி விட்டார். அப்போது அது எனக்கு ஏமாற்றமாகத்தன் இருந்தது.

ஆனாலும் காலப்போக்கில் அதன் உண்மையை அறிந்து கொண்ட்டேன், பின்னொருநாளில் வானொலி நாடகம் ஒன்றில் அவரோடு நடிக்கும் வாய்ப்பும் பெற்றேன். பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய வடமராட்சி பேச்சு வழக்கில் அமைந்த "பொருளோ பொருள்" எனபது அந்த நாடகத்தின் பெயர். =அவர் நடித்த கடைசி வானொலி நாடகம் அதுவாகத்தான் இருக்கும்.

இங்கே நான் குறிப்பிடும் "ஒரு தமிழ் அறுவடை" என்ற நூலானது அவரும் பின்னொருகாலத்தில் நானும் படித்த கரவெட்டி விக்கினேஸ்வராக்கல்லூரியின் பழைய மாணவர்களால் 2011 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது என்றாலும் அங்கு சொல்லப்பட்டதை பதிவு செய்யும் நோக்கில் இங்கே தருகிறேன், (தினக்குரலுக்கு நன்றி)

மூதறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆக்கங்கள் செயற்பாடுகள் பற்றிய ஒரு பதிகையான "ஒரு தமிழ் அறுவடை' என்ற நூல் வெளியீட்டு விழா 18.06.2011 ஆம் திகதி, கொழும்புத் தமிழ்ச் சங்க,சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.கரவெட்டி,விக்னேஸ்வரா கல்லூரிப் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் தலைவர் வே.விமலராஜா (சட்டத்தரணி) தலைமை தாங்கினார். கல்வி,கலை, இலக்கியத்துறைசார்ந்த பிரமுகர்கள் மங்களச் சுடரேற்ற கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக் கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடப்பட்டது. பிரபல எழுத்தாளர் சந்திரகாந்தா முருகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை: வே.விமலராஜா (சட்டத்தரணி)

"ஒரு தமிழ் அறுவடை' என்ற நூல் இருபாகங்களை உடையது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆக்கங்கள் ஒரு பகுதி.மறுபகுதி பேராசிரியர் பற்றி மற்றையவர்கள் எழுதியவை. நூலைப் பற்றிக் கூறத் தேவையில்லை. பலர் பேராசிரியரைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளனர். தந்தையார் பண்டிதர் கார்த்திகேசு, உபாத்தியாயர், சோ திட ஈடுபாடு உள்ளவர். தாயின் செல்லப்பிள்ளை சிவத்தம்பி,இராசையா எனவும் அவரைக் கூப்பிட்டனர்.பல ஆய்வுகளைச் செய்யப் பேராசிரியருக்கு எப்படி முடிந்தது? மனைவி,பிள்ளைகள் குடும்பத்தினர் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினர். எமது பொதுச் செயலாளர் வீ.ஏ.திருஞானசுந்தரம் இந்நூல் வெளிவருவதற்குத் தனியாக உழைத்தவர். அவருக்கு எமது பாராட்டுகள்.

நூல் அறிமுக உரை: சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா

பேராசிரியர் சிவத்தம்பியின் ஆக்கங்களும் அவர் பற்றிய ஆக்கங்களும் இந்நூலிலுண்டு.பேராசிரியர் சிவத்தம்பி தொடாத துறை இல்லை.சரித்திரம்,பொருளியல், தமிழ் என்பவற்றைக் கற்றார். திறனாய்வாளர்.சங்க இலக்கியத்தை மார்க்சியத்தோடு பொருத்திப் பார்ப்பார்.அறிவு வளத்தால் பகைமையைக் கடந்தவர். முற்றியவர்.அறிவில் முழுமையடைந்து முற்றியவர். சினிமா பற்றியும் பேசுவார். எதையும் அறிவுக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்.நூலில் பதினாறு கட்டுரைகள் உண்டு. எனக்கும் உதவிக் கரம் நீட்டியதும் விக்னேஸ்வராக் கல்லூரி தான். எனது படிப்பைத் தொடர உதவியது.

நூல் வெளியீட்டு நிகழ்வில் "ஒரு தமிழ் அறுவடை' நூலின் முதல் பிரதியைத் தலைவர் விமலராஜா, கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் காப்பாளர்களான கே.கனகசபை, சாந்தி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கினார். கல்வி, கலை, இலக்கியத்துறைப் பிரமுகர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

. சிறப்புரைகள்

பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான்

பேராசிரியர் கா.சிவத்தம்பி இவ்விழாவுக்கு வராதிருப்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. பாராட்டுகளும் கௌரவங்களும் பேராசிரியருக்குப் பல மட்டங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. இப்பாராட்டு விழா அவைகளிலிருந்து வேறுபடுகின்றது. சொந்த ஊரவர்கள்,கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்துகின்றனர். அறிஞர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் சொந்த ஊரில் மரியாதை இருப்பதில்லை. ஆனால், இப்படிப் பேராசிரியர் சிவத்தம்பிக்கு பெரியளவில் விழா எடுத்திருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது. பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் அவர் தகுந்தவர் தான். இதற்குக் காரணமாக இருப்பது அவரது அறிவு ஆளுமைதான். பாராட்டுவதற்குப் பாராட்டுபவருக்குத் தகுதி இருக்க வேண்டும். பாராட்டுகளுக்கும் அத்தோடு விமர்சனத்துக்கும் ஆளானவர் பேராசிரியர். கல்லெறி,பொல்லெறிபட்டவர். இவையெல்லாம் அவர் காய்த்த மரமென்பதன் அடையாளமே. அறிவாளுமை மிகவும் அத்தியாவசியமானது.

"ஊருணி நீர் நிறைந்தற்றே உலகெலாம் பேரறிவாளன் திரு' எனத் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். பேராசிரியரின் அறிவுச் செல்வம் ஊருக்கு உதவியது. அது பொதுச் சொத்தாக மக்களுக்கு உதவியது. அவர் பொதுமகன். அவர் பத்தோடு பதினொன்றாகக் கணிக்கப்படுவதில்லை. பாராட்டப்படுகிறார். ஏன் இந்தப் பாராட்டுகள் அவருக்கு? சமூகம்,பண்பாடு,மொழி,இலக்கியம் பற்றி விரிவாகச் சிந்தித்துப் புதிய அறிகைகளைத் தந்துள்ளார். நூல் எழுதுவது எல்லோருக்கும் பொதுவானதுதான்.

பேராசிரியர் சிவத்தம்பி தமிழுலகுக்குக் கிடைத்த அரிதான ஆய்வாளர். ஆய்வுத்துறையில் முக்கிய தடங்களை ஏற்படுத்திக் காட்டியவர் அவர் ஒருவர்தான். நானவரது மாணவனல்ல. இருந்தும் அவரது மாணவன் எனக் கூற விரும்புகிறேன். நூல்களைப் படிக்கிறேன்.மூடிக் கிடந்த பழைய தமிழ்ச் சிந்தனை மரபை உடைத்து தமிழியச் சிந்தனையில் அறிவொளியை ஏற்படுத்தியவர். முதல் முதல் தமிழ்ப் பாரம்பரியத்துக்குப் புதிய சிந்தனை வெளிச்சத்தைக் கொண்டு வந்து தமிழ்த் திறனாய்வுத் துறைக்கும் புதிய பாதையை அமைத்தார்.

பின்னர் வானமாமலை, பேராசிரியர் க.கைலாசபதி,பேராசிரியர் கா.சிவத்தம்பி மார்க்சிய அடிப்படையில் இப்பணியைத் தொடர்ந்தனர். தமிழ் ஆய்வில் பல்துறை அணுகுமுறையை ஏற்படுத்தினர். புதிய கருத்துகளை முன்வைத்தனர். சங்க இலக்கியத்தை ஆராய்ந்து அதிகாரபூர்வமான கருத்துகளை சிவத்தம்பி வெளியிட்டார். இங்கு வருகைதரும் வெளிநாட்டு அறிஞர்களை ஈடுசெய்யக்கூடிய தகைமை சிவத்தம்பிக்கே உண்டு. அரசியல்,இலக்கியம் என்பவற்றைச் சொல்லக்கூடிய ஆளுமை அவரிடமேயுண்டு. இப்படியானதொரு ஆளுமையுடைய கல்விமானைத் தமிழ்நாட்டில் காண முடியாது. மிக விரிவாகச் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து கருத்துகளை முன்வைத்தார். தனது கலாநிதிப் பட்டத்துக்காக நாடகத்தை ஆய்வு செய்தார். விபரணப்பாங்கான ஆய்வு முறைகளே முன்பிருந்தன. காரணகாரியத் தொடர்புகளை ஆய்வு செய்தார்.

நவீன இலக்கியத்தில் சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவும் முக்கியமான ஆய்வு நூல். அதேபோல் நாவலும் வாழ்க்கையும் முக்கியமானது. யாழ் சமூகம் பற்றிய ஆய்வு உண்மையான பார்வையைக் கொண்டது. இனத்துவ முரண்பாடு தொடர்பானது அரசியல் பற்றியும் சிவத்தம்பி சிந்தித்தார். எழுதினார் "தினக்குரல்' பத்திரிகையில் நிறைய எழுதியுள்ளார்.அவைகள் நூலாக வெளிவர வேண்டும். ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். தமிழ் முஸ்லிம்கள் சம்பந்தமான அவரது ஆய்வு மிகவும் முக்கியமானது. அதை மிகுந்த கரிசனையோடு பார்த்துச் சிந்தித்தார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் சிவத்தம்பி படித்ததோடு அதில் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.முஸ்லிம்களின் நண்பர் . அவரது சிந்தனை வீச்சு இன்னமும் தீவிரமாகத் தான் இருக்கின்றது.தமிழுக்கு இன்னமும் நிறையச் செய்வார்.

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா

பேராசிரியர் கா.சிவத்தம்பி கரவெட்டி மேற்கைச் சேர்ந்தவர். நான் கிழக்கு. கரவெட்டியின் வாழ்வியல் தான் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல். எத்தனை வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் எளிமையான செம்மையான வாழ்வே கரவெட்டியில் உண்டு. சிவத்தம்பி வல்வெட்டித்துறையில் திருமணம் செய்தவர்.தொடர்ந்து நான்காண்டுகள் அவரிடம் கற்றிருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியிடமும் கற்றேன். எனது தம்பியின் நல்ல நண்பர் சிவத்தம்பி. இருவருமாகப் பேராசிரியரைச் சந்திக்கச் சைக்கிளில் சென்றோம். அன்று தான் அவரைக் கண்டேன். நான் அக்காலத்தில் நவீன இலக்கியத்தின் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை

நா.பார்த்தசாரதி,அகிலன் போன்றோரது படைப்புகளைத் தான் வாசிப்பேன். ஜெயகாந்தன், காண்டேகர் படைப்புகளை வாசிக்கும்படிசிவத்தம்பி சொன்னார். படித்தேன் சிவத்தம்பியின் வீட்டுச் சூழல் கல்வி மயப்பட்டது. கவிதைப் பாரம்பரியத்தை உடைய ஊர் கரவெட்டி "சிரித்திரன்' சிவஞான சுந்தரம் (சுந்தர்) நகைச்சுவையாகப் பேசுவார். அந்தப் பாரம் பரியம் சிவத்தம்பிமுமுண்டு.

இன்று நாம் அம்மான் என்ற உறவு முறைச் சொல்லை மறந்து விட்டோம். குஞ்சி,ஆச்சி,ஆத்தை இவை கரவெட்டியின் உறவு முறைச் சொற்கள். ஆத்தை இறந்த பின்னர் கிருஷ்ணாழ்வார் அவர் பற்றிய பாட்டொன்றை பாடியிருக்கிறார்.

எனது வாழ்வில் கைலாசபதியையும் சிவத்தம்பியையும் மறக்க முடியாது. மற்றைய விரிவுரையாளர்கள் ஒரு மணி நேரம் பல்கலைக்கழக வகுப்புகளை நடத்த சிவத்தம்பி ஒன்றே முக்கால் மணித்தியாலம் தனது வகுப்பை நடத்துவார். திணைக்கோட்பாட்டை எம் மனதில் பதிய வைத்தவர் சிவத்தம்பிதான். கம்பனை எக்ஸ்ரே எடுத்துக் காட்டினார். அவர் நடத்தும் வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். மிக ஆழமாகக் கற்போம்.

ஆய்வின் நெறி முறைகளை அவரிடமே பயின்றேன். ஆய்வு ஒரு பொறியக இருந்தது. ஆற்றலுள்ள மாணவர்களை உருவாக்க முயன்றார். சொல்வதில் புதுமையான நோக்கிருந்தது. அவரது ஆய்வுகள் பல பரிமாணத்தைக் கொண்டவை. ன்பர். தமிழ் நாட்டில் நாவலர் பரம்பரை விமர்சிக்கப்பட்டதுண்டு. மதிக்கப்பட்டது கைலாசபதி,சிவத்தம்பிக்குப் பின்னரே.

அவர் வித்தியாசமான மனிதர். அவரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கும். எனது பேரனுக்கு என்ன பெயர் வைக்கலாமெனக் கேட்பேன். ஞான பண்டிதன் எனப் பெயர் சொன்னார். இதை இன்றைய பெற்றோர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

சிவத்தம்பிக்கு. இன்னொரு மறுபக்கமும் உண்டென்பதை மறக்கக் கூடாது. அவரொரு ஆக்க இலக்கியகர்த்தா. ஆக்க இலக்கியம் சார்ந்த பேராசிரியரின் எழுத்துகள் நூலாக்கப்பட வேண்டும். அவரது இன்னொரு முகத்தைப் பார்க்க அது உதவும். இது எனது வேண்டுகோள்.

எம்.எஸ்.தேவகௌரி, (சிரேஷ்ட விரிவுரையாளர்,

பேராசிரியர் சிவத்தம்பி படிப்பித்தால் விளங்காது என்று ஆலோசனை கூறினர். இருந்தும் அவரது வழிகாட்டலில் படித்தேன். இலக்கியத்தை இரசிக்கக் கற்றுத் தந்தார்.சொல்லப் படாதவற்றையும் உய்த்துணரும் ஆற்றலை வளப்படுத்தித் தந்தவர் பேராசிரியர். "தமிழ் இலக்கிய வழி' என்ற அவரது நூலைப் படித்ததால் எனது சிந்தனை வளர்ந்தது. நவீன இலக்கியம், பக்தி இலக்கிய காலத்தை அவரிடம் கற்றோம். மிக ஆழமான விளக்கங்களைச் சொன்னார். பல் பரிமாணங்கள் இருந்தன.

தேவை இல்லாசொற்கள் வசனத்தில் இருக்கக்கூடாது. சொற்கள் எப்படி அமைய வேண்டுமென்பதைப் படிப்பித்தார். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்பதை ஆழமாக நோக்கி கல் தோன்றா மண் தோன்றாகக் காலத்துக்கு முன் எப்படி மூத்த குடி தோன்றி இருக்குமென்பதைச் சிந்திக்க வைத்தார். அவரது நுண்மான் நுழை புல ஆய்வு முறையே ஊடகத்துறையில் நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியது. எளிமை மனிதாபிமானமுடையவர். இலக்கியத்துறை மக்களோடு சம்பந்தப்பட்டது. அதை ஆரோக்கியமான திசைக்குத் திருப்ப வேண்டுமென முனைந்தார். பேராசிரியரை எப்பவும் சந்திக்க முடிகிறது. அற்புதமான புத்திக் கூர்மையைப் பெற்ற வசிட்டர். யாருடனும் பகைக்காதவர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் செய்தி தொலைபேசி மூலம் சபையோருக்கு ஒலிபரப்பப்பட்டது. கனடா கரவெட்டி ஒன்றியத் தலைவர் ஐ.சி.அம்பிகைவரன்,எஸ்.செல்வரட்ணம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். பேராசிரியரின் மகள் லக்ஷ்மி புலேந்திரா ஏற்புரையையும் எஸ்.ஜெ.ஜெயக்குமார் நன்றியுரையையும் நிகழ்த்தினர். பிரபல ஒலிபரப்பாளர் "ஊடகத்துப் பேராளன்' வீ.ஏ. திருஞானசுந்தரம் நிகழ்வுகளைத் தொகுத்து அறிவிப்புகளைச் செய்தார்.

இந்த விழா நடைபெற்றபோது பேராசிரியர் உயிரோடிருந்தார், உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை) (

No comments:

Post a Comment