Tuesday, March 15, 2011

அமுதன் அடிகள் இலக்கிய விருது விழா.- செய்திகள்

அமுதன் அடிகள் விருது பற்றிய செய்திகள் இந்தியாவில் "தினமணி" பத்திரிகையிலும், புதுடில்லியிலிருந்து "வடக்குவாசல்" இணையச்சஞ்சிகையிலும் கனடாவில் "உதயன்" , "தாய்வீடு" பத்திரிகைகளிலும், இலங்கையில் ;தினக்குரல்', வீரகேசரி பத்திரிகைகளிலும், லண்டனிலிருந்து "காற்றுவெளி" இணையசஞ்சிகையிலும், இலங்கையிலிருந்து யாழ்மண்' இணையச்சஞ்சிகயிலும், டென்மார்க்கிலிருந்து 'அலைகள் ஈ-நியூஸ்' இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளன்.

மேற்குறித்த பத்திரிகை நிறுவனங்களுக்கும், யாழ்மண், அலைகள் இணையத்தளங்களுக்கும், "வடக்குவாசல்"பென்னேஸ்வரன், "காற்றுவெளி" முல்லை அமுதன், 'தமிழாரம்' குரு அரவிந்தன், எஸ்.கே.ராஜன் ஆகியோர்க்கும் என் நன்றி.


"வடக்குவாசல்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே -

"யாழ்மண்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே.

"அலைகள்" இணையத்தளத்தில்
விருதுபற்றிய கட்டுரை இதோ -

வீரகேசரி கட்டுரை




தினக்குரல் கட்டுரை -
கே. எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கிய விருது

(துஷி ஞானப்பிரகாசம்)

2009ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய பரிசு ஈழத்தைச் சேர்ந்த கலைஞரும் எழுத்தாளருமான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டுமுதல், வருடாவருடம் வழங்கப்பட்டுவரும் இந்த விருது தமிழி;ன் முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்கள் பட்டியலில் கவிஞர் சல்மா, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், பாமா. இந்திரா பார்த்தசாரதி, ஜோ. டீ. குரூஸ் ஆகிய படைப்பாளிகளும் அடங்குகின்றனர். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.

கே. எஸ். பாலச்சந்திரன், மலர் மணாளன் எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல வார ஏடுகளான வீரகேசரி, தினகரன் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. சிரித்திரன் பத்திரிகைக்கு அவர் எழுதிய 'சிரிகதை'களும் பிரபலமானவை. இலங்கையைவிட்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னும் இவர் தொடர்ந்து எழுதிவருகிறார். நினைவெழுதுதல் பாணியிலமைந்த இவரது எழுத்துக்கள் ஈழத்தமிழர்கள் இழந்துபோன ஒருகாலத்தின் பதிவுகளாக ஒரு பேப்பர், தாய்வீடு போன்ற ஏடுகளில் தொடர்ந்து வெளியாகி வரவேற்புப் பெற்று வருகின்றன.

இவரின் முதலாவது நாவலான 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' 2009இல் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. எழுபதுகளில், இலங்கை போர்ச்சூழலுக்குள் திணிக்கப்படுமுன்னர், இலங்கையின் கரையோர கிராமமொன்றை களமாகக்கொண்டமைந்த இந்த நாவலை அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் 'ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு' என கூறியது மிகையில்லை.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய துறைகளுக்கும் இவரது எழுத்து வளமூட்டியிருக்கிறது. இந்தத் துறைகளுக்கு இவர் செய்த அளிக்கைகள் இவரை சிறந்த கலைஞராகவும் அடையாளம் காட்டியுள்ளன. இலங்கையில் இவர் உருவாக்கிய 'வாத்தியார் வீட்டில்' வானொலி நாடகமும், 'அண்ணை றைற்' என்ற முன்னோடி மேடை நிகழ்வும் பின்னர் ஒலியிழையாக வெளியிடப்பட்டன. கனடாவிலும், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம், மனவெளி கலையாற்றுக் குழு போன்ற நாடக அமைப்புக்கள் ஊடாகவும், பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள10டாகவும் அவர் தொடர்ந்தும் இந்தத் துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பெப்ரவரி 26ஆம் திகதி தஞ்சாவூரின் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கே. எஸ். பாலச்சந்திரனுடன், எழுத்தாளர் சோ. தர்மன் 2008ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் விருதையும், நாடகாசிரியர் முத்துவேலழகன் 2010ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.


தினமணி செய்தி -
"இளைஞர்களுக்கு தமிழ் உணர்வு தேவை'

தஞ்சாவூர், பிப். 27: இன்றைய இளைய சமூகத்துக்கு தமிழ் உணர்வு தேவை என்றார் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.
தஞ்சாவூரில் சனிக்கிழமை அமுதன் அடிகள் வெள்ளி விழா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 2008,2009,2010 ஆண்டுகளுக்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மேலும் அவர் பேசியது:
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாக மனித நேயம் உள்ளது. இலக்கியவாதிகளிடத்தில் மனித நேயம் அதிகமிருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக அவர்களுடைய உழைப்பு இருக்கும். எதையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய அவர்களை, நாம் எவ்விதப் பாகுபாடுமின்றிப் பாராட்ட வேண்டும்.
கிபி 19, 20 ஆம் நூற்றாண்டு தமிழின் மேன்மையான மறுமலர்ச்சிக் காலம். இன்றைய நிலையில் தமிழ் உணர்வு 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. இளைஞர்களிடத்தில் தமிழ் உணர்வும், உணர்ச்சியும் வீறுகொண்டு எழவேண்டும். நல்லத் தமிழை ஆளவிட வேண்டும்.
படிக்க படிக்கத்தான் எழுத முடியும், பேச முடியும். நல்ல நூல்களை படிக்க வேண்டும். காசு கொடுத்து நூல்களை வாங்க வேண்டும். படிக்கும் உணர்வை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனித நேயம், பண்பு வளர வேண்டும். அப்பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள் என்றார் உபயதுல்லா.
விழாவில் அறக்கட்டளைத் தலைவர் அமுதன் அடிகள் பேசியது:
1995-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் வெள்ளி விழாவையொட்டி இவ்விழா நடைபெறுகிறது. வேறுபாடு, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு இல்லாமல் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு தகுதியான தேர்வுக்குப் பின் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை படைப்பாளிகள் தோப்பில் முகமது மீரான், வல்லிக்கண்ணன், முனைவர் இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி, இமயம், மேலாண்மை பொன்னுசாமி, பாமா, பெருமாள் முருகன், எஸ்.வி. ராஜதுரை, கவிஞர் சல்மா, ஜோ டி குரூஸ் ஆகியோருக்கு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய வளர்ச்சி, சமுதாய வளர்ச்சிக்காவே நடத்தப்படுகிறது அறக்கட்டளை. விழா நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது என்றார் அமுதன் அடிகள்.
பரிசு பெற்றவர்கள் விவரம்:
எழுத்தாளர்கள் சோ. தர்மன் (2008), கே.எஸ். பாலச்சந்திரன் (2009) (இவருக்கான பரிசை தூசன்ஹேண்டி பெற்றார்), நாடக இயக்குநர், எழுத்தாளர் முத்துவேலழகன் (2010). பரிசுத்தொகை ரூ. தலா 15,000 ஆகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர் ரா. காமராசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி வெ. ஜீவக்குமார் ஆகியோர் படைப்புகள் குறித்துப் பேசினர்.
அறக்கட்டளை முன்னாள் அறங்காவலர் ஜே.ஜே. பார்னாண்டோ, அறங் காவலர்கள் வெ.க. சந்திரமோகன், ஜோ. ராஜன், உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். திருவருட் பேரவை தஞ்சை மாவட்டச் செயலர் ஜெ. கலந்தர் நன்றி கூறினார்.


4 comments:

  1. இப்போதுதான் இந்நற்செய்தியைக் கண்ணுறநேர்ந்தது.
    எம் மகத்தான கலைஞன் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு
    என் நல்வாழ்த்துக்கள்.

    அவரது எழுத்துப்பரப்பு இன்னும் வளர்ந்தோங்கவேண்டுமென்று அவாவுகிறேன்.

    பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்

    ReplyDelete
  2. என் மதிப்புக்குரிய எழுத்தாளர் நீங்கள்.. உங்கள் வாழ்த்து எனக்கு அளித்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் கனடா வந்த காலத்தில் 1995ல் இங்குள்ள பத்திரிகையில் (சூரியன் அல்லது உதயன் என்று நினைக்கிறேன்) உங்கள் "அகதிகள் உருவாகும் நேரம்" நாவலை வாசித்து உங்கள் அபிமானியானவன் நான். மிக்க நன்றி.

    கே.எஸ்.பாலச்சந்திரன்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் பாலா. என் நண்பனுக்கு, என் உறவினனுக்குக் கிடைத்த விருதை எனக்குக் கிடைத்ததாய் மகிழ்கிறேன். உங்கள் நூலைவெளியிட்ட வடலி அகிலன் தற்போது அங்குதன் நிற்கிறார். (க்ச்னடாவில்)

    ReplyDelete
  4. அன்பான நண்பர் எழில், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாம். அகிலன் அண்மையில்தான் இருக்கிறார்.அவரது திருமணத்திலும் கலந்து கொண்டேன். அவரது புத்த்தகங்களின் அறிமுகவிழாவில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததென்று நினக்கிறேன். கானாபிரபாவின் நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தீர்கள். நன்றாக இருந்தது.

    ReplyDelete